
இந்தியாவில் 70 சதவிகித சுத்தமான தண்ணீர் அசுத்தமாகியிருக்கிறது. 600 மில்லியன் மக்கள் தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்த அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
1993-ல் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 22-ம் நாளை உலக தண்ணீர் தினமாக அங்கீகரித்திருக்கிறது ஐ.நா. சுத்தமான தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2030-க்குள் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்தியும் இந்நாளை கடைபிடிக்கிறது ஐ.நா.
உலகில் இருக்கும் தண்ணீரில் 97 சதவிகிதம் உப்பு நீராக இருக்கிறது அல்லது குடிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை. சுத்தமாக இருக்கும் 3 சதவிகிதத்தில் 2.5 சதவிகிதம் நாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. பனிக்கட்டிகளாகவோ அல்லது பூமியில் நாம் எட்ட முடியாத ஆழத்திலோ இருக்கிறது. மீதம் இருக்கும் 0.5 சதவிகிதம் தண்ணீரைத்தான் நாம் குடிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெருகி வரும் மக்கள் தொகை, மாறி வரும் சுற்றுச்சூழல் மற்றும் முறையான திட்டமிடலின்மை ஆகியவற்றின் காரணமாகத் தண்ணீர்த் தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிக் கொண்டே வருகிறது. ஆனால், தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உணரவில்லை. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்நாள் தண்ணீர் தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. 85 சதவிகிதம் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகிறது இந்தியா. ஆனால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நிலத்தடி நீரை நாம் பராமரிப்பதில்லை. நிதி ஆயோக்கின் அறிக்கை ஒன்று 'இந்தியாவில் 70 சதவிகித சுத்தமான தண்ணீர் அசுத்தமாகியிருக்கிறது. 600 மில்லியன் மக்கள் தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்த அழுத்தத்தில் இருக்கிறார்கள்' எனத் தெரிவித்திருக்கிறது. மழைநீரைச் சேகரித்தலே, நிலத்தடி நீர் ஆதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். 2019-ல் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான தண்ணீர் வழங்கும் 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால், எந்தத் திட்டம் அமலுக்கு வந்தாலும் அதற்குத் தண்ணீரின் இருப்பு அவசியம். எனவே நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2001-03 வரை கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீரின் அவசியத்தை உணர்ந்து 2003-ல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இன்றும் தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க முடியவில்லை. மழை நீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், அது சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கப்படவில்லை.
அரசு கட்டடங்களிலேயே மழைநீர் சேகரிப்பு முறை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முறையான மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாமையும், முறையான வடிகால் வசதி இல்லாமையும் சேர்த்து திடீரென தமிழகத்திற்குக் கிடைக்கும் மழையும் அசுத்த நீரோடு கரைந்து காணாமல் போகிறது. தண்ணீர் பராமரிப்பு என்பது சுத்தமான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, சுத்தமான நீரைத் தேவைக்குப் பயன்படுத்துவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். தினசரி தேவையில்லாமல் பயன்படுத்தும் நீரின் அளவைக் குறைக்கலாம். அரசு எடுக்கும் நடவடிக்கை முறையாக அமல்படுத்த வேண்டும். தனிநபராகத் தண்ணீர் சேமிப்பை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.