Published:Updated:

`அவர்களை கேட்கவைப்போம்!' - உலகத் தலைவர்களுக்கு 16 வயது சிறுமியின் அறைகூவல் #climatestrike

காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஸ்வீடனை சேர்ந்த சிறுமி கிரேட்டா தன்பெர்க் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஐ.நாவில் நடக்கவுள்ள காலநிலை உச்சி மாநாட்டையொட்டி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது

Greta Thunberg
Greta Thunberg ( AP )

ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடி வருகிறார். தனி ஆளாகத் தொடங்கிய போராட்டம் தற்போது பல மில்லியன் மாணவர்களை இணைத்துள்ளது. ஒற்றை சிறுமியின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது.

Greta Thunberg
Greta Thunberg
AP

அமைதிக்கான நோபல் பரிந்துரை, காலநிலை பற்றி ஐ.நாவில் உரை போன்றவற்றை மிகச் சிறிய வயதில் செய்து சாதனைப்படைத்துள்ளார் கிரேட்டா தன்பெர்க். நாளை நியூயார்க்கில் நடக்கவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நா உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதையொட்டி அதே நகரில் பல லட்சக்கணக்கான மாணவர்களைத் திரட்டி நேற்று முன் தினம் மிகப் பெரும் பேரணி நடத்தியுள்ளார் கிரேட்டா. இவரின் அழைப்பை ஏற்ற மாணவர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் #fridaysforfuture

அந்த பேரணியில் பேசிய அவர்,``இந்த திங்கள் கிழமை உலக தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். உலகின் அனைத்து கண்களும் தற்போது அவர்கள் மீதுதான் இருக்கும். தலைவர்கள் அனைவரும் அறிவியலுக்குப் பின்னால் துணை இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு தலைவர் பதவியிலேயே நீடிக்க விரும்புகின்றனர்.

Greta Thunberg
Greta Thunberg
AP

அவர்கள் உண்மையிலேயே நம் கோரிக்கைகளைக் கேட்பதாக நினைக்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் உண்மையிலேயே அவர்கள் நம் கோரிக்கையைக் கேட்கிறார்களா? எனக் கூட்டத்தை நோக்கி கிராட்டா கேட்கிறார். அதற்குக் கூட்டத்திலிருந்து `இல்லை’ என்ற பதில் வருகிறது. தொடர்ந்து, ``நாம் அவர்களைக் கேட்கவைக்க வேண்டும். நம் கோரிக்கைகளைத் தலைவர்கள் ஏற்று, நடைமுறைப் படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

Vikatan

பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அந்த பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். பள்ளி மற்றும் பணிகளை விடுத்து போராட்டம் நடத்த நாம் வெறும் சாதாரணமானவர்கள் கிடையாது நாம் மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது” எனப் பேசியிருந்தார். இவர் பேச்சு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

Greta Thunberg
Greta Thunberg
AP

கடந்த இரண்டு நாள்களாக உலகில் உள்ள 156 நாடுகளில் பல மில்லியன் கணக்கான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு ஐ.நா, நேற்று 500 இளம் போராட்டக்காரர்களை அழைத்து மாநாடு நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்கள் காலநிலை மாற்றத்துக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்துள்ளனர்.

அப்போது பேசிய கிரேட்டா தன்பெர்க், ``நியூயார்க்கில் நடந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இளைஞர்களைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளோம்” எனக் கூறினார்.

அவரையடுத்து பேசிய அர்ஜென்டினாவை சேர்ந்த 19 வயது ஆர்வலர் புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), ``காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது நம் காலத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நெருக்கடி போன்ற அனைத்தையும் சேர்த்தது.

Greta Thunberg  UN Summit
Greta Thunberg UN Summit
AP

தற்போதைய தலைவர்கள் உருவாக்கிய பிரச்னைகளை கையாள்வதில் எங்கள் தலைமுறை பொறுப்பேற்கப்போகிறது என்பதைப் பலமுறை கேட்டிருப்பீர்கள், அந்த காலம் வரும் என, செயலற்ற முறையில் நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. இப்போது நாம் தலைவர்களாக வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனப் பேசியுள்ளார்.

சிறுவர்களின் இந்த பேச்சு உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள காலநிலை தொடர்பான ஐ,.நா உச்சி மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க்கின் போராட்டம் எதிரொலிக்கும் என எதிர்ப்பாக்கப் படுகிறது.