Published:Updated:

`கொரோனா போன்ற தொற்றுகள் பரவ இதுதான் காரணம்!' - புதிய ஆய்வறிக்கை மனிதர்களுக்கு சொல்வது என்ன?

இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு?

`கொரோனா போன்ற தொற்றுகள் பரவ இதுதான் காரணம்!' - புதிய ஆய்வறிக்கை மனிதர்களுக்கு சொல்வது என்ன?

இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு?

Published:Updated:

கொரோனா பேரிடர்க்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இதுபோன்ற தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமே காடழிப்பு, வேட்டை போன்ற நடவடிக்கைகள்தான் என்று சூழலியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து உரைத்துக்கொண்டேயிருக்க, சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை அவர்களுடைய கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கின்றது.

காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் அரணாகச் செயல்படுவது இயற்கையாகப் பரந்து வளர்ந்திருக்கும் காடுகள்தான். அத்தகைய சூழலியல் அரணை அழித்துவிட்டு, பணப் பயிர்களை வளர்ப்பது கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது.

காடழிப்பு
காடழிப்பு

உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ், மெர்ஸ், நிபா போன்ற வைரஸ் தொற்றுகளின் பரவலுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, உயிரின அறிவியல் ஆய்விதழான Frontiers in Veterinary Science என்ற ஆய்விதழில் மார்ச் 24-ம் தேதி வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. 1990 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரவிய டெங்கு போன்ற கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் மற்றும் காட்டு உயிரினங்களிட மிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்கியல் நோய்களுக்கு, காடழிப்பு நடவடிக்கைகளே முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தென் அமெரிக்காவில் காடழிப்பு நடவடிக்கைகளே, மலேரியா நோய்த் தாக்குதலைத் தொடங்கி வைத்தது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் அதேபோல் நிகழ்ந்த காடழிப்பு வேலைகளே A. dirus, A. minimus, A. balabacensis போன்ற மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் மனிதர்களிடையே வருவதற்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது.

வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் நோய் எதுவாயிருப்பினும், அது ஓர் உயிரினத்திடமிருந்து மனிதர்களுக்குப் பரவினால், அதை விலங்கியல் நோய்கள் என்று குறிப்பிடுகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலும் அத்தகைய வழியில் நிகழ்ந்ததே என்பதால், அதுவும் விலங்கியல் நோயாகவே குறிப்பிடப்படுகின்றது. சரி, இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு?

Megabat
Megabat
Gerwin Sturm from Vienna, Austria

இதை ஓர் உதாரணத்தோடு புரிந்துகொள்ள முடியும். 1998-ம் ஆண்டின் இறுதியில், மலேசியாவின் போர்னியோ காட்டுப் பகுதியில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீ, அங்கிருந்த பழந்தின்னி வௌவால்களை அருகிலிருக்கும் பழத்தோட்டங்களை நோக்கி இடம் பெயர வைத்தது. Megabats என்ற அந்தக் குறிப்பிட்ட பழந்தின்னி வௌவால் வகை, அப்படி இடம்பெயர்ந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான தோட்டங்களுக்குள் வந்தபோது, அதன்மீது ஒட்டிக் கொண்டிருந்த அந்த வைரஸும் கூடவே வந்தது. 1997-98 ஆண்டுகளில் வேகமெடுத்த காகிதக் கூழ் மர வளர்ப்பு, பழ மரங்கள் வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்சார் பண மரத்தோட்டங்கள், அந்த வௌவால் இனத்தின் வாழ்விடத்துக்கு ஏற்கெனவே பெரும் கேடுகளை விளைவித்துக் கொண்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆக்கிரமிப்புகள், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்த பழ மரங்களில் நடக்கும் பூ பூப்பது, பழம் காய்ப்பது போன்ற செயல்பாடுகளைப் பாதிக்கவே, அதனால், பழந்தின்னி வௌவால்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக அவை, உணவு தேடி பழ மரத் தோட்டங்களுக்குள் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கின. இந்நிலையில், 1998-ம் ஆண்டு மீண்டும் அதேபோல் காட்டை அழித்து செயற்கையான மர வளர்ப்பில் ஈடுபடுவதற்கான வேலைகள் நடைபெற்றன. அதனால், தன் வாழ்விடத்தை இழந்த பழந்தின்னி வௌவால்கள் பழத் தோட்டங்களுக்கு வேறிடம் தேடிப் படையெடுத்தன.

காட்டுத்தீ
காட்டுத்தீ

ஏற்கெனவே, பல்வேறு வழிகளில் உணவு தேடி மனிதர்களிடையே வந்துகொண்டிருக்கும் சூழலுக்கு வௌவால்கள் தள்ளப்பட்டிருந்தாலும்கூட, இந்தக் குறிப்பிட்ட செயல்பாடுதான், கால்நடைகளோடு வௌவால்களுக்கு தொடர்பு ஏற்படக் கிடைத்த முதல் வாய்ப்பாகச் சொல்லப்படுகிறது.

அங்கு வந்த வௌவால்கள் சாப்பிட்டுவிட்டுப் போடும் பழங்களின் மிச்சத்தைச் சாப்பிட்ட வளர்ப்புப் பன்றிகளிடையே நிபா என்னும் கொடிய தொற்றுநோய் பரவியது. அதன் உடலில், அந்த வைரஸ் தொற்று பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகி, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய கொடிய நோயாக அப்பகுதி மக்களிடையே பரவியது. அதன்பின்னர், நிபா மனித சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புகளும் நாம் அனைவரும் அறிந்ததே.

நிபா வைரஸைப் பொறுத்தவரை, இன்று வரையுமே பலரும் அது பரவியதற்கு வௌவால்களே காரணம் என்ற கூற்றைக் குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்த லாப நோக்கிலான பண மரப் பயிரிடுதலே, அவற்றுக்கு வாழ்விட இழப்பிற்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் வழி வகுத்தது. அதன் விளைவாகவே, அவை மனிதத் தோட்டங்களுக்குள் ஊடுருவத் தொடங்கின. அப்படி உணவு தேடி வந்தபோது ஏற்பட்ட சிக்கல்தான் நிபா தொற்றுப் பரவல். ஒருவேளை, அவற்றுடைய வாழ்விடமான இயற்கையான காடுகள்மீது லாப நோக்கத்தோடு கை வைக்காமலே இருந்திருந்தால், அவற்றுடைய வாழ்விடமும் பாதிக்கப்பட்டிருக்காது, மனித சமூகத்தில் நிபா என்னும் கொடிய தொற்று நோயும் பரவுவதற்கான வாய்ப்புகளும் குறைந்திருக்கும்

நிலப்பயன்பாட்டில் நிகழும் மாற்றங்கள்
நிலப்பயன்பாட்டில் நிகழும் மாற்றங்கள்

நிபா வைரஸ் ஓர் உதாரணம் மட்டுமே. நிபா பரவ எப்படி காடழிப்பு காரணமாக இருந்ததோ, கொரோனா பரவ காட்டுயிர் கடத்தல் மற்றும் வன விலங்குச் சந்தை எப்படிக் காரணமாக அமைந்ததோ அதேபோல, விலங்கியல் தொற்று நோய் ஒவ்வொன்றுக்கும் ஏதாவதொரு வழியில் மனிதத் தலையீடுகள் முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

அதிலும், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் நடக்கும் காடுகள் மீட்டுருவாக்கம் இத்தகைய தொற்றுப் பரவலுக்கு அதிகளவில் வழி வகுப்பதாக இந்த ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதாவது, அழிக்கப்படும் இயற்கையான காடுகளுக்கு ஈடாக மீண்டும் புதியதாக ஒரு காட்டை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின்போது, அதுவரை தொந்தரவு செய்யப்படாமலிருக்கும் பகுதிகளுக்குள் மனிதக் கால்தடம் பதிகின்றது. மேலும், காடுகள் மீட்டுருவாக்கம் என்பது அதிகளவில் நடப்பது என்னவோ புல்வெளிக் காடுகளில்தான். ஓரிடத்தில், அழிக்கப்படும் காட்டிற்கு ஈடாக, வேறோர் இடத்தில் புதிதாகக் காடு உருவாக்கப்படுகின்றது. ஆனால், அப்படிப்பட்ட வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்னவோ, புல்வெளிக் காடுகள்தான்.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin

மனித சமூகத்தின் பார்வையில், புல்வெளிக் காடுகள் என்பது பயன்பாடற்ற தரிசு நிலங்களே. அவற்றை, கட்டுமான வேலைகளுக்காகவோ, இதுபோன்ற காடு மீட்டுருவாக்கத்துக்காகவோ பயன்படுத்துகின்றனர். ஆனால், புல்வெளிக் காடுகளும் ஒரு தனித்துவமான சூழலியல் அமைப்பைக் கொண்டவை. புல்வெளிகள், திறந்தவெளிக் காடுகள், பாலை நிலங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலத்திற்கே தொடர்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்படும்போது, புதுப்புது விலங்கியல் நோய்கள் பரவக் காரணமாக அமைகிறது.

இப்படி, இயற்கையான சூழலியல் அமைப்புகளை மனிதத் தலையீடுகள் குலைக்கும்போது, பல்வேறு தொற்றுநோய்கள் வெளியுலகத்தில் பரவுகின்றன. இதுபோன்ற உலகளவிலான ஆய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள், இதுபோன்ற தொற்றுப் பரவல்களுக்கு உதாரணமாக இத்தாலியில் பாதிப்பை உண்டாக்கிய என்செஃபாலிட்டிஸ் என்ற உண்ணிகளிலிருந்து தொடங்கிய நோய்ப்பரவலைக் குறிப்பிடுகின்றார்கள். அதேபோல், பனை எண்ணெய் உற்பத்திக்காக வளர்க்கப்படும் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைச் சுற்றி வாழும் மக்கள், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா, மஞ்சள் காமாலை போன்ற பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவு நிரூபித்துள்ளது.

ஒற்றைப் பயிரிடுதல் முறை
ஒற்றைப் பயிரிடுதல் முறை

ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில், ஒரேயொரு வகையான தாவரத்தை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபடும்போது, அது நடைபெறும் நிலத்தின் இயல்புநிலையைக் குலைக்கிறது. இதனால், அப்பகுதியின் பல்லுயிரிய வளம் பாதிக்கப்படுவதோடு, சூழலியல் சமநிலையும் சீர்குலைகிறது.

1990 முதல் 2016 வரையிலான நாடு வாரியான தரவுகளைச் சேகரித்து மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு மனிதத் தலையீடுகளால் நிகழும் சூழலியல் சீர்குலைவே காரணம் என்ற பன்னாட்டு ஆய்வாளர்களின் கூற்றை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலை இப்படியே நீடித்தால், மற்ற உயிரினங்களின் வாழ்விடங்களில் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டும் அழித்துக்கொண்டுமிருக்கும் மனிதர்கள், தங்களுக்கெனப் பாதுகாப்பான வாழ்விடமின்றித் தவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வுமுடிவுகள் கொடுத்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism