Published:Updated:

சுதந்திரம் 75... ``கருணைக் கொலை செஞ்சிடுங்க’ - கதறும் தியாகி மகள்... தொடரும் பென்ஷன் போர்!

தியாகி மாடசாமியின் மகள் இந்திரா
News
தியாகி மாடசாமியின் மகள் இந்திரா

``சுதந்திர தின கொடியேற்றத்துக்கு மட்டும் அழைச்சு சால்வை போடுறாங்க. 9 வருஷமா நிலுவையில இருக்குற பென்ஷனுக்கு அலைக்கழிக்கிறாங்க. என்னைக் கருணைக்கொலை செஞ்சிடுங்கனு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியிருக்கேன்’’ என்று கண்ணீரோடு கூறுகிறார் தியாகி மாடசாமியின் மகள் இந்திரா.

சுதந்திரம் 75... ``கருணைக் கொலை செஞ்சிடுங்க’ - கதறும் தியாகி மகள்... தொடரும் பென்ஷன் போர்!

``சுதந்திர தின கொடியேற்றத்துக்கு மட்டும் அழைச்சு சால்வை போடுறாங்க. 9 வருஷமா நிலுவையில இருக்குற பென்ஷனுக்கு அலைக்கழிக்கிறாங்க. என்னைக் கருணைக்கொலை செஞ்சிடுங்கனு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியிருக்கேன்’’ என்று கண்ணீரோடு கூறுகிறார் தியாகி மாடசாமியின் மகள் இந்திரா.

Published:Updated:
தியாகி மாடசாமியின் மகள் இந்திரா
News
தியாகி மாடசாமியின் மகள் இந்திரா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தியாகி மாடசாமி. இவர், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய `ஐ.என்.ஏ படை’யில் அதன் வளர்ச்சிக்காக 7,000 டாலர் கொடுத்து சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1972-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இவருக்கு மத்திய அரசின் `தாமிரப் பட்டயம்’ வழங்கி கெளரவித்துள்ளார்.

இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், ராமகிருஷ்ண போஸ், ராஜகோபால் ஆகிய இரு மகன்களும், ராமஜெயம், இந்திரா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில், இந்திராவைத் தவிர மற்றவர்கள் திருமணமானவர்கள். உடல்நலக்குறைவால் 2002-ல் மாடசாமி உயிரிந்த பிறகு, இந்திரா தன் தாய் வள்ளியம்மாளுடன் தனியாக வசித்துவந்த நிலையில், கடந்த 2013-ல் தாயாரும் உயிரிழந்தார்.

இந்திரா
இந்திரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது தனியாக வசித்து வரும் இந்திரா, கடந்த 9 ஆண்டுகளாகத் தந்தையின் தியாகி பென்ஷனுக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியும், தற்போது வரை கிடைக்கவில்லை. இந்திராவிடம் பேசினோம்...

``சுதந்திரத்துக்குப் பிறகு எங்க அப்பாவுக்கு மத்திய அரசின் `சுதந்திரா சைனிக் சம்மான்’ பென்ஷன் கிடைச்சது. அம்மாவுக்குப் பிறகு, திருமணமாகாத பெண் இருந்தா அவங்களுக்கும் பென்ஷனை நீட்டிக்கலாம்னு விதி இருக்கு. தாலுகா ஆபிஸ்ல இருந்து முதலமைச்சர் தனிப்பிரிவு வரைக்கும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்திருக்கேன். பல போராட்டம் நடத்தியும் எந்தப் பலனும் இல்ல. பென்ஷனுக்காக மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்குப் பென்ஷன் கொடுக்கச் சொல்லி, 2014-ல் நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு ஆணையைக் காட்டிய பிறகும், நாலஞ்சு தடவை அலைக்கழிச்சு, பென்ஷன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதிகாரிங்க கலெக்டர் ஆபீஸ் மூலமா டெல்லியில உள்ள மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் துறைக்கு அனுப்பினாங்க. ஆனா, கலெக்டரோட பரிந்துரை கடிதம் தமிழ்ல இருக்குன்னு சொல்லி, மனு திரும்ப வந்துடுச்சு. இங்கிலீஷ்ல தயார் செஞ்சு திரும்பவும் அனுப்புனோம். ஆவணங்கள்ல கலெக்டர், தாசில்தாரோட சான்றொப்பம் இல்லன்னு மறுபடியும் திரும்ப வந்துடுச்சு. சான்றொப்பம் வாங்கிட்டு அனுப்புனோம். அத்துடன் 14 வகையான சான்றிதழ்களை இணைக்கணும்னு காரணம் குறிப்பிட்டு, கடைசியா எல்லாத்தையும் மொத்தமா திருப்பி அனுப்பிட்டாங்க.

இந்திரா
இந்திரா

உடன் பொறந்தவங்களும் என்னைக் கைவிட்டுட்டாங்க. சொந்தக்காரங்களும் எட்டிகூடப் பார்க்கலை. எனக்கு வயசு 51 ஆகுது. ஆனா, நான் இன்னும் பருவத்துக்கு வரலை. வயித்துல பிரச்னை, கை, கால் வலின்னு உடம்புலயும் சில பிரச்னை இருக்கு. பக்கத்துல உள்ள ஒரு ஹோட்டலில் பாத்திரம் தேய்ச்சு, தினமும் கிடைக்குற 100 ரூபாய் வருமானத்துல வயித்துப்பாட்ட சமாளிச்சிட்டு வர்றேன். குடியிருக்குற வீட்டுக்கு வாடகை கொடுத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆகுது. என்னோட நிலைமை தெரிஞ்ச ஹவுஸ் ஓனர், `வாடகை கொடுக்க நீ கஷ்டப்பட வேண்டாம்மா. காசு கிடைக்கும்போது குடும்மான்’னு கருணை உள்ளத்தோட சொல்லியிருக்கார்.

அதுக்காக வாடகை குடுக்காம எத்தனை நாளு சார் வீட்டுல இருக்க முடியும்? கோவில்பட்டியில உள்ள மற்ற தியாகிகளோட வாரிசுகள் ஆதரவுலயும், அக்கம் பக்கத்து வீட்டுல உள்ளங்களோட ஆதரவுலயும்தான் வாழ்க்கையை ஓட்டுக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு வருஷமும் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு மட்டும் கலெக்டர் ஆபீஸுல இருந்து அழைப்பிதழைக் கொடுத்து கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு அழைக்கிறாங்க. கலெக்டர் சாரும் சால்வையைப் போட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்புறார். அந்த சால்வை, சாப்பாடு போடுமா சார்? அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு சொல்றாங்க. அவங்க கேட்ட எல்லா சர்டிஃபிகேட்ஸயும் எடுத்துக் கொடுத்தாச்சு.

இந்திரா
இந்திரா

மனுக்களோட நகல்களை எடுத்துக்கிட்டு கையில மஞ்சள் பையோட நுழைஞ்சாலே அதிகாரிங்க என்னை அருவருப்பா பார்க்குறாங்க. பென்ஷனுக்காக தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு நடந்து நடந்து என் காலே தேய்ஞ்சு போச்சு. `இந்த வருஷ சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிடாதீங்க. எனக்கு அரசோட மரியாதை வேண்டாம்’னு அதிகாரிங்ககிட்டயே சொல்லிட்டேன். எனக்கு மரியாதையே வேண்டாம். அதுமட்டு மல்லாம என்னைக் கருணைக் கொலை செஞ்சிடச் சொல்லி குடியரசுத் தலைவர், ஆளுநர், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பிருக்கேன். அந்த மனுவுக்கும் பதில் இல்லை” என்றார் கண்ணீருடன்.

இந்திராவுக்கு பென்ஷன் பெற்றுத் தருவதற்காக ஆரம்பத்தில் இருந்து உதவி செய்து வருபவரும், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா செயலாளருமான செல்வத்திடம் பேசினோம்.

``தியாகி மாடசாமியின் மகள் இந்திராவைப் பார்க்கவே பாவமா இருக்கு. பரிதாபமான நிலையில வாழ்ந்துட்டு இருக்கு. வறுமையால ரெண்டு தடவை தற்கொலை முயற்சி செஞ்சுடுச்சு. 9 வருஷமா அரசு அதிகாரிகளின் நிர்வாகக் பிரச்னையால், தியாகி பென்ஷன் தாமதமானதைக் காரணம் காட்டி திரும்பவும் மதுரை உயர் நீதிமன்றத்துல ஒரு வருஷத்துக்கு முன்னால தாக்கல் செஞ்ச மனு, இன்னும் விசாரணைக்கு வரலை. கொடியேற்ற நிகழ்ச்சியில மட்டும்தான் மரியாதையா நடத்துறாங்க. அதுக்குப் பிறகு எங்களைக் கண்டு கொள்வதே கிடையாது. முன்னாள் படை வீரர்களுக்கு நலவாரியம் இருப்பதைப் போல தியாகிகளுக்கு நலவாரியம் அமைக்கப்படணும். கலெக்டர் ஆபீஸ்ல திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுறதைப் போல, தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படணும்னு விதி இருந்தும்கூட இதுவரை எந்த மாவட்ட ஆட்சியரும் அதைப் பின்பற்றவில்லை.

வீட்டின் முன்பு இந்திரா
வீட்டின் முன்பு இந்திரா

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதைப் போல, தியாகிகளின் வாரிசுகளுக்கென கல்வி, வேலைவாய்ப்புல எந்த முன்னுரிமையும் கிடையாது. ’தியாகிகளின் பென்ஷன் விஷயத்தில் முக்கிய ஆவணம், ஆதாரம் இல்லாவிட்டால் அடுத்தகட்ட ஆவணங்களைக் கொண்டே பரிசீலிக்கலாம். இவர்களுக்கு பென்ஷன் வழங்குவதே அவர்களைக் கௌரவிப்பது போலாகும்’ எனத் தியாகிகளின் பென்ஷன் குறித்த ஒரு வழக்கில் நீதிபதிகள் சொன்ன கருத்துகளெல்லாம் வெறும் பேச்சா மட்டும்தான் இருக்கு. பென்ஷனுக்காகத் தியாகிகளின் வாரிசுகள் இப்படி அலைக்கழிப்படுவதால்தான், தகுதியிருந்தும் விரக்தியில் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க விருப்பமில்லால் நூற்றுக் கணக்கானோர் ஒதுங்கியே இருக்காங்க” என்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் வழித்தோன்றல் வாரிசுகள் அனைத்துக் கூட்டுக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன்,``கோவில்பட்டி இந்திராவைப் போல இன்னனும் பல தியாகிகளின் வாரிசுகள் திண்டாடி வருகிறார்கள். சுதந்திரத்துக்காக அவர்களின் தந்தைகள் போராடியதைப் போல பென்ஷனுக்காகத் தற்போது வாரிசுகள் போராட வேண்டியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ், உத்தரகாண்ட்டில் 300 யூனிட் இலவச மின்சாரம் என ஒவ்வொரு மாநிலத்திலும் தியாகிகள் குடும்பங்களுக்கு ஒவ்வொரு வித சலுகை அளித்துள்ளார்கள். நாங்கள் கேட்பது தியாகிகளின் வாரிசுகளுக்கு வர வேண்டிய பென்ஷனைத்தான். வரும் 13-ம் தேதிக்குள் அரசு தரப்பில் எங்களை அழைத்துப் பேசாவிட்டால் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் அரசு மரியாதையைப் புறக்கணிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களின் வீடுகளில் தேசியக்கொடியேற்றி நாங்களே மரியாதை செலுத்திக்கொள்கிறோம்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் பேசினோம். ``தியாகி மாடசாமியின் மகள் இந்திரா, தன் தந்தையின் மத்திய அரசு தியாகி பென்ஷனை தனக்கு நீட்டித்துத் தர மனு அளித்திருந்தார். அத்துறையினர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இருந்து ஏற்கெனவே அனுப்பிவிட்டோம்.

செல்வம் - ஆட்சியர் செந்தில்ராஜ்
செல்வம் - ஆட்சியர் செந்தில்ராஜ்

அதன் நிலை குறித்தும், மத்திய அரசின் பென்ஷன் பிரிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரத்தைக் கேட்டு அரசியல் ஓய்வூதியத்துறையின் துனைச் செயலாளருக்கும் இதுவரை நான்கு முறை கடிதம் எழுதியிருக்கிறேன். இந்திராவுக்கு விரைவில் தியாகியின் வாரிசுக்கான பென்ஷன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திராவை அழைத்து உரிய விளக்கம் அளிக்கிறோம்” என்றார்.

`நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்கள் தியாகிகள். அவர்களின் வாரிசுகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

`தேசிய கொடியை ஏற்றுங்கள்' என்று தேசம் முழுக்கக் குரல் குரல்கள் கேட்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக அந்தத் தியாகியின் மகளுடைய பசியைப் போக்கு போக்குங்கள் அமைச்சர்களே... அரசியல்வாதிகளே... அதிகாரிகளே. அதைசெய்யாமல் தேசியக்கொடிக்கு நீங்கள் செய்யும் மரியாதை, அவமரியாதையே!

தியாகி மாடசாமியின் மகள் இந்திராவுக்கு, பருவம் எய்தாமை உள்ளிட்ட உடல்நல உபாதைகள் உள்ளன. தந்தை சுதந்திரத்துக்காகப் போராடியவர்; ஆதரவற்ற நிலையில் உள்ள இந்திராவோ, தந்தையின் தியாகி பென்ஷனுக்கு போராடி வருகிறார். வாழ்வாதாரமில்லாத இந்திராவுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்பு கொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். அவர் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.

`தேசிய கொடியை ஏற்றுங்கள்' என்று தேசம் முழுக்கக் குரல் குரல்கள் கேட்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக அந்த தியாகியின் மகளுடைய பசியைப் போக்கு போக்குங்கள் அமைச்சர்களே... அரசியல்வாதிகளே.. அதிகாரிகளே! அதைச் செய்யாமல் தேசியக்கொடிக்கு நீங்கள் செய்யும் மரியாதை, அவமரியாதையே!