Published:Updated:

இருப்பதுவோ புதுக்கோட்டை... வசிக்கவோ குடிசை இல்லை!

என்னாச்சு ‘கஜா’ நிவாரணம்?

பிரீமியம் ஸ்டோரி

டந்த ஆண்டு இறுதியில், தமிழகத்தைச் சிதைத்துச் சென்ற ‘கஜா’ புயலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. ஆண்டுக்கணக்கில் வருமானம் கொடுத்துக்கொண்டிருந்த தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் அடியோடு அழிந்தன. டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் பெரும் சேதத்துக்குள்ளாகின. புயல் கரை கடந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பலருக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

கஜா புயல்
கஜா புயல்

‘புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடிசை வீடு களுக்கு 10,000 ரூபாயும், பாதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், பாதி சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு 5,200 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், முழுமையாகச் சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட வில்லை. அப்படி முழுமையாக வீடு இழந்த சிலருக்கும் 5,200 ரூபாய்தான் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக வீடிழந்த பலரும் நிவாரணம் கிடைக்காமல் இன்னமும் அலைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார், ஆலங்குடி அருகே உள்ள புளிச்சங்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரா. “கஜா புயல் அடிச்சப்போ, பச்சைப் பிள்ளைகளோட இந்த வீட்டுக்குள்ளதான் உசுரைக் கையில் பிடிச்சிக்கிட்டுக் கிடந்தோம். செவரு எல்லாம் விழுந்துடுச்சு. ஓடு ஒவ்வொண்ணா கழண்டு விழுந்துக்கிட்டு இருந் துச்சு. மொத்த வீடும் இடிஞ்சி விழப்போகுதேன்னு பயந்தோம். ஆனா, கல்லுக்காலு ஊண்டியிருந்ததால வீடு விழலை. நம்ம செத்தாலும் பரவாயில்லை, பிள்ளைகளை எப்படியாவது காப்பாத்திடணும்னு நான் துடிச்ச துடிப்பு எனக்குத்தான் தெரியும்.

இருப்பதுவோ புதுக்கோட்டை... வசிக்கவோ குடிசை இல்லை!

புயல் வீசுன ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் என் வீட்டுக்காரரு கேன்சர்ல இறந்து போனாரு. அவருக்கு வைத்தியம் பார்க்க வாங்கின கடனை யும் அடைக்க முடியலை. சின்னச் சின்ன வேலை களைச் செஞ்சு சம்பாதிச்சுக் கொடுத்த என் மாமனாரும் மூணு மாசத்துக்கு முன்னாடி இறந்துபோயிட்டார். உடம்புக்கு முடியாத மாமி யாரையும் ரெண்டு பச்சைப் பிள்ளைகளையும் நான்தான் காப்பாத்தணும். தென்னங்கீத்து முடைஞ்சுதான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

என் சக்திக்கு முடிஞ்ச அளவுக்குக் கடனை உடனை வாங்கி ஓடுகளை எல்லாம் கொஞ்சம் மாத்தி, ஒழுகாத அளவுக்கு ஒட்டுப் போட்டு வெச்சிருக்கேன். ஆனா, எப்ப வீடு விழும்ன்னு தெரியாது. எங்களுக்கு அரசாங்கம் புது வீடு கட்டிக்கொடுக்கலை னாலும் பரவாயில்லை. நிவாரணத் தொகையைக் கொடுத்திருந்தாக்கூட ஓரளவு வீட்டுக்கு மராமத்து வேலை பார்த்துடுவேன். புயல் அடிச்சு ஓய்ஞ்ச சமயத்துல அதிகாரிகள் வந்து கணக்கு எடுத்துட்டுப்போனதோட சரி. அதுக்கப்புறம் யாரும் எட்டிக்கூடப் பார்க்கலை. இந்தப் பிள்ளைகளுக்காக எப்படியாவது வீட்டை எடுத்துக் கட்டிப்புடணும்னு போராடிக் கிட்டு இருக்கேன், ஆனா முடியலை” என்று தன் குழந்தைகளைக் கட்டிப்பிடித்தபடி கண் கலங்கினார், சந்திரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல்தான் இருக்கிறது, எல்.என்.புரத் தில் வசிக்கும் கணேசனின் வீடு. முழுமையாக இடிந்த நிலையில் இவருக்கு நிவாரணத் தொகை கிடைத்துவிட்டதுதான். ஆனால், அந்த நிவாரணத் தொகையில் தார்பாலின் ஷீட் வாங்கி குடிசை போடத்தான் முடிந்தது. வயதுக்குவந்த இரண்டு பெண் பிள்ளைகளுடன் இந்தக் குடிசை யில் வசித்து வருகிறார் கணேசன். இதேபோல மாவட்டம் முழுவதும் சொல்ல முடியாத துயரத் தோடு ஆயிரக்கணக்கானோர், வாழ்ந்து வருகிறார் கள்.

சந்திரா, உமாமகேஸ்வரி
சந்திரா, உமாமகேஸ்வரி

இதுகுறித்துப் பேரிடர் மேலாண்மை வட் டாட்சியர் சங்கரிடம் பேசினோம். “மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 180 கோடி ரூபாய் வழங் கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 915 ஓட்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்த தாகப் புள்ளிவிவரங்கள் வந்தன. பாதிக் கப்பட்டவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறைமூலம் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. ஆனால், கணக்கெடுப் பில் குறிப்பிடப்பட்டிருந்த பல வீடுகள் பகுதி மட்டும்தான் சேதமடைந்திருந்தன. அதனால், அவை பகுதி சேதமடைந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுச் சிலருக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி யிடம் கேட்டோம். “மாவட்டம் முழுவதும் சேத மடைந்த வீடுகளைக் கணக்கெடுத்து, பாதிக்கப் பட்ட அனைவருக்கும் ‘கஜா புயல் நிவாரணப் பெட்டகம்’ வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நிவா ரணத் தொகையும் வங்கி மூலம் செலுத்தப்பட் டுள்ளது. சிலர் வங்கிக் கணக்கு எண்ணைத் தவறா கக் கொடுத்திருப்பதால், தொகையைச் செலுத்த முடியவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு வரு கிறது. கணக்கெடுப்பில் விடுபட்டதாகக் கூறப்படும் வீடுகள், மாவட்ட வருவாய் அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. குடிசை வீடாக இருந்து பட்டா வைத்திருந்தால் அவர்களுக் குக் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட் டிக் கொடுக்கப்படும். பட்டா இல்லாதவர் களுக்குப் பல்வேறு திட்டங்கள்மூலம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக மாவட்டத்தில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு