Published:Updated:

கொரோனா: `அடுத்த அலையைத் தடுக்க முடியும்!’ - சுகாதாரத்துறை செயலாளர் நம்பிக்கை

திருச்சியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு
திருச்சியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

``கொரோனாவின் அடுத்த அலையைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும்போது நோயைக் கட்டுப்படுத்தலாம்’’ என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரியைச் சுற்றி உரிய இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மருத்துவர்கள் செவிலியர்கள் நின்ற விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுகிறார்கள் என்று சுகாதாரத்துறைக்கு நாள்தோறும் பல புகார்கள் சென்றுகொண்டிருக்கிறது. அந்தவகையில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கண்ணன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை முறையாகக் கவனிப்பதில்லை என்றும், அங்கு நடக்கும் அவலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். இவ்விவகாரத்தை அலட்சியமாகக் கையாளாதீர்கள். திருச்சி மாவட்டத்தில் 1,118 பேர் கொரோனா காரணமாகத் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 866 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

இந்த மாவட்டத்தில் மொத்தம் 10,000 படுக்கை வசதிகள் உள்ளது. கொரோனா சிறப்பு மையத்தில் 780 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 540 படுக்கைகளும், லால்குடி மணப்பாறை, உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 922 படுக்கைகள், கொரோனா சிறப்பு மையங்களில் 2,090 படுக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா விவகாரத்தைச் சிறப்பாகக் கையாளுகிறார்கள்.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் நாள்தோறும் 60,000-த்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகிறோம். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை அதிகமாகி, தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 28 லட்சம் சோதனைகள் செய்துள்ளோம். கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர், வேறு எந்தக் காரணத்தினால் இருந்தாலும் கொரோனாவினால் இறந்த கணக்கில்தான் சேர்க்கிறோம்.

கொரோனா: `சரியான தடுப்பு மருந்து கிடைக்காமலும் போகலாம்!’ - எச்சரிக்கும் WHO

சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து வருகிறோம். மருத்துவக் கழிவுகள் சுகாதாரமான முறையில் அழிப்பதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை, பரிசோதனை போன்றவற்றில் சிறு சிறு தவறுகள் நடந்து வருகிறது. அதைச் சரி செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறோம். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறையும். இறப்பு விகிதத்தைக் குறைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

மக்கள் நோய் குறித்து கவனத்தோடு இருக்க வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும்போது நோயைக் கட்டுப்படுத்தலாம்’’ என்றார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த ராதாகிருஷ்ணனைச் சுற்றி மருத்துவர்களும் செவிலியர்களும் சூழ்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். சமூக விலகலை மக்கள்தாம் கடைப்பிடிக்க வேண்டுமா? ஏன் அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டியதில்லையா என்று அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பேசத் தொடங்கினர்.

அடுத்த கட்டுரைக்கு