Published:Updated:

"மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்"- சென்னையைக் கலக்கும் புதிய விளம்பரம்!

ஒரு கிலோ இட்லி அல்லது தோசை மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்று சென்னை திருவல்லிக்கேணியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு விளம்பரம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

தண்ணீர் இலவசம்
தண்ணீர் இலவசம் ( விகடன் )

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்கு, பல மணிநேரம் வரிசையில் நிற்கத் தயாராக இருந்தாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக ஆயிரம் செய்திகள் வந்தாலும் அதற்கான எந்தப் பலனும் கிடைத்தபாடில்லை என்பதுதான் உண்மை.

தண்ணீர்
தண்ணீர்
விகடன்

இப்படி தண்ணீர் தட்டுப்பட்டால் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில் "ஒரு கிலோ இட்லி அல்லது தோசை மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம்" என்று சென்னை திருவல்லிக்கேணியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு விளம்பரம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து அந்த விளம்பரத்தை உருவாக்கிய எல்லம்மன் மாவு கடையின் உரிமையாளர் சங்கீதா அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"தண்ணீர் தட்டுப்பாடுனு தினமும் செய்திகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, ஒருத்தர்கூட இதுதான் தீர்வுனு சொல்லமாட்டேங்கிறாங்க. நான் இதே திருவல்லிக்கேணியில் 24 வருஷமாக மாவு வித்துட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடிகூட சில வருஷங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கத்தான் செஞ்சுது. ஆனாலும் இந்த வருஷம் போல எந்த வருஷமும் வறட்சி இருந்ததில்லை. எங்க தொழிலுக்கு அரிசி, உளுந்து ரெண்டையும் கழுவ, மாவு அரைக்க, கிரைண்டர் சுத்தம் பண்ண ஒரு நாளைக்கு ஏகப்பட்ட தண்ணீர் செலவாகும்.

தண்ணீர் தட்டுப்பாடுனு தினமும் செய்திகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, ஒருத்தர்கூட இதுதான் தீர்வுனு சொல்லமாட்டேங்கிறாங்க..
சங்கீதா

நல்ல தண்ணீரில் அரைச்சாதான் மாவும் நல்லா இருக்கும். அதனால, வாரம் இருமுறை 12,000 லிட்டர் தண்ணீரை நாலாயிரம் ரூபாய் கொடுத்து தனியாரிடம் வாங்கிட்டு இருந்தோம். எங்க ஏரியாவிலேயே நிறைய மக்கள் தண்ணீர் இல்லாமல் மணிக்கணக்கில் வரிசையில் நிப்பாங்க. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்போதான் மாவு வாங்குறவங்களுக்கு தண்ணீர் இலவசமா கொடுக்கலாம்னு பிளான் பண்ணோம்.

சராசரியாக ஒரு நாளைக்கு எங்களுக்கு 200 பாக்கெட் மாவு விற்பனையாகும். அதுல, எல்லாரும் வந்து தண்ணீர் கேட்கிறது இல்ல. தினமும் ஒரு 30 பேர் வந்து தண்ணீர் பிடிச்சுட்டு போவாங்க. நாங்க மொத்தமா தண்ணீர் வாங்கும்போது, ஒரு லிட்டர் 25 பைசாவுக்குத் தான் வாங்குறோம். ஒரு குடம் 12 லிட்டர் பிடிக்கும். ஆக, ஒரு குடத்துக்கு எங்களுக்கான செலவு 3 ரூபாய் மட்டும்தான். அதை எங்க லாபத்தில் கழிச்சுக்கிறோம்.

தண்ணீர் சிக்கனம்
தண்ணீர் சிக்கனம்
விகடன்

நிச்சயமாக இது வியாபார உக்தி கிடையாது. முழுவதும் இலவசமா தண்ணீர் கொடுத்தால் மக்களுக்கு தண்ணீர் கஷ்டம் நிச்சயம் புரியாது. அதான், இப்படி ஒரு வழிமுறை. சென்னையில் தண்ணீர் கஷ்டம் குறையும் வரை நிச்சயம் இதைத் தொடர்ந்து செய்வோம்" என்கிறார் சங்கீதா அம்மா.