Published:Updated:

உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

Published:Updated:
உலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்!

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கடந்த 150 ஆண்டுகளில் இனப்படுகொலைகள் என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை லட்சமோ, கோடியோ அல்ல; மில்லியன்களைத் தாண்டுகிறது என்பதுதான் உண்மை.

ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுப்பதே இனப்படுகொலையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும் கருதப்படுகிறது. நாகரிகமடைந்த தற்போதைய 21-ம் நூற்றாண்டிலும் இனப்படுகொலைகள் ஏன் தொடர்கின்றன? அதற்கான காரணம் என்ன என்று என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? அதனை நினைவூட்டவே இக்கட்டுரை...

1.ஆர்மீனியர்களின் இனப்படுகொலை (1915 - 1923)

துருக்கியைச் சேர்ந்த ஓட்டோமன் பேரரசு, முதல் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் தங்களது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள அந்தப் போரில் ஈடுபட முடிவு செய்தது. ஏற்கெனவே இழந்த செல்வாக்கினை மீட்க இது உதவும் என்று நம்பி அவர்கள் அதில் இறங்கினர். முதல் உலகப்போரில் ஜெர்மனியோடு களம் கண்டது ஓட்டோமன். உள்நாட்டில் அதிகாரச்சண்டை அந்நாட்டிற்கு மற்றொரு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் நிறைய புரட்சி இயக்கங்கள், நாடு முழுவதும் பலவாறாகத் தோன்றின. இதற்கெல்லாம் காரணம் யார் என்று ஆராய்ந்தபோது, ஆர்மீனியர்கள்தான் என்று விழித்துக்கொண்டது. இதற்கிடையே முதல் உலகப்போர் தொடங்கியது. போரில் ஜெர்மனியோடு சேர்ந்த துருக்கி தோல்வியடைந்தது. இதனால், ஆர்மீனியர்கள் மீது மிகவும் கோபமடைந்தனர் ஓட்டோமன் பேரரசைச் சேர்ந்தவர்கள். ராணுவத்தின் மூலம் அவர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, துரோகிகள் என அவர்கள் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறாக 1915 முதல் 1918-ம் ஆண்டுவரை ஓட்டோமன் அரசு, ஆர்மீனியர்களைக் கொன்றது. 5 முதல் 12 லட்சம் ஆர்மீனியர்கள் இதில் கொல்லப்பட்டனர். முதல் உலகப்போரில் ஆஸ்ரியர்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அடுத்து, கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் நடந்த இனப்படுகொலைகளில் ஆர்மீனிய இனப்படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து தெரிவித்தார்.

2. யூத இனப்படுகொலை (1939-1945)

ஹிட்லரால் ஜெர்மனியில் யூதர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சூழலில், யூதர்களை கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, கொலைசெய்வது என இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. யூதர்கள் நெருக்கடியான பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர் வண்டிகள் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர்.

இரண்டு வகையான முகாம்களை நாஜிக்கள் அமைத்தனர். ஒன்று, சாதாரண கைதி முகாம். இதில் கைதிகளை அடிமைபோல் நடத்தி, அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவார்கள். தேவையில்லாமல் கொல்லமாட்டார்கள். இன்னொன்று வதை முகாம்கள், இவை யூதர்களை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டது.

3. கம்போடியா இனப்படுகொலை (1975-1979)

1953-ம் ஆண்டு கம்போடியா ஃபிரான்ஸிடமிருந்து விடுதலை அடைந்தது. சிஹானக் கம்போடியா அரசனாகப் பொறுப்பேற்றார். கம்போடியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (கிமேர் ரூஜ் ) தலைவர் ஆன பால் பாட் (சலோத் சார்) சிஹானக்கிற்கு மிகவும் பிரச்னையாக இருந்தார். பின்னர் 1976-ல் பால் பாட் பிரதமராகப் பதவியேற்றார். வணிகம், மருத்துவம், தொழில்துறை எனப் பல துறைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்று எண்ணினார் பால் பாட். அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். மக்களின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு, அரசால் கைப்பற்றப்பட்டது. ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்தும் பசி, பட்டினி மற்றும் சட்டவிரோதமான முறையிலும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

குருட்டுத்தனமான கொள்கையும், செயல்முறைப்படுத்தாத திறனும் மக்களை வாட்டின. சுமார் 20 லட்சம் மக்கள் இம்முறையில் செத்து மடிந்தனர். எந்தப் பிரச்னை வந்தாலும், உழைக்கும் வர்க்கம் சமாளிக்கும் என்று பால் பாட் முட்டாள்தனமாக நம்பியதே இதற்குக் காரணம்.

4. ருவாண்டா இனப்படுகொலை (1994)

ஜெர்மனியின் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடு ருவாண்டா, புருண்டி. இங்கு டூட்சி, ஹூட்டு என்ற இரண்டு இன குழுக்கள் வாழ்ந்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக டூட்சி இன மக்கள் ஆண்டுவர, பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு,1972-ல் புருண்டியில் ஹூட்டுகளின் புரட்சி தொடங்கியது. 1994 ஏப்ரல் 7 அன்று ஹூட்டு இன மக்கள், டூட்சி இனத்தவரை கொல்லத் திட்டமிட்டனர். பெரியவர், சிறியவர் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கொன்று குவித்தனர் ஹூட்டு இனத்தினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. போஸ்னியா இனப்படுகொலை (1992-1995)

ஓட்டோமன், ஆஸ்திரியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்த நாடு போஸ்னியா ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட தேசம் என்பதால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. போஸ்னியர்கள், செர்பியர்கள், குரேஷியர்கள் என மூன்று வகையான இன மக்கள் வாழ்ந்து வந்தனர். குரேஷிய அதிபருக்கும், போஸ்னிய அதிபருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட, அங்கிருந்து தொடங்கியது இப்பிரச்னை. போஸ்னியா மீது குரேஷியப் படையினர் 1993-ம் ஆண்டில் 2000 பேர் கொலை செய்யபட்டனர். 64 இஸ்லாமியர்களைக் கைது செய்து பேருந்தில் அடைத்து, தீவைத்துக் கொளுத்தினர். இதில் 56 பேர் இறந்தனர். செர்பிய ராணுவம் 1992-1995 காலகட்டத்தில் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பேர் காணாமல் போனார்கள்.

6. தர்ஃபுர் - சூடான் இனப்படுகொலை

ஆப்பிரிக்காவின் சூடானில் உள்ள தர்ஃபுர் மாநிலத்தில் நடைபெற்ற இப்படுகொலை பொருளாதார ரீதியாக முக்கியமானதாகும். சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் சண்டையிட்டுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்கு சூடானில் உள்ள தர்ஃபுரில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு பிரச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்தது. இவ்வாறாக 1972-ல் உள்நாட்டு யுத்தம் முடிந்தது. 1983-ல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 40 லட்சம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாகினர். 2003 பிப்ரவரியில் 'எல் பஷீர்' விமான நிலையத் தாக்குதலால் ஏற்பட்ட பிரச்னை இன்றளவும் தொடர்கிறது. ஜூலை 2011-ல் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது சூடான் அரசு.

7. இலங்கைத் தமிழர் படுகொலை

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஒரு சில வரிகளில் விவரிக்க இயலாதவை. பெரும் வலியையும், ஆற்றாமையையும் இப்போதும் அந்த மண் ஒளித்து வைத்திருக்கிறது. இலங்கையில், தமிழர்கள் பெரும்பாலும் அரச பதவி வகித்ததைக் காரணம்காட்டி, சிங்கள அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காகத் தூண்டிவிட்ட கலவரச் சுவடு அவ்வளவு எளிதில் மறையாதது. 1983-ம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்ற அந்தச் சம்பவம் இன்றளவும் நீங்காவடுவாக தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. கண்ணில்பட்ட எல்லாரையும் கொன்று, பெண்கள் பலரும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், படுகொலையும் செய்யப்பட்டனர். 1958, 1977, 1983-ம் ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளிலிருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், ஏவுகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை சுமார் லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாயினர். அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பெருந்துயரின் கேவல் அவர்களின் மவுனத்திலிருந்தே இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

1932-33-ல் உக்ரைனில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம், 1975-ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு இனப்படுகொலைகளாக முன்வைக்கின்றனர். அமெரிக்க செவ்வியந்தியர்கள், பாலஸ்தீனியர்கள், காங்கோ, சோமாலியா, கொசாவா என உலக நாடுகளின் வரலாற்றில் 'இனப்படுகொலைகள்' தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது நிதர்சனம்.