Published:Updated:

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்... மலேசியாவில் 12 தமிழர்கள் கைது... தொடரும் உறவினர்கள் போராட்டம்!

மலேசியாவில், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக, சோஸ்மா சட்டத்தின் கீழ் 12 தமிழர்கள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில், காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான சாமிநாதன், நெகிரி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகிய இருவரும் அடக்கம்.

Arrest
Arrest

இந்தக் கைதுகுறித்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய, மலேசிய காவல்துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் டத்தோ அயோப் கான்,

''விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், மலேசியாவில் ஏராளமான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் மலேசியாவில் உள்ள ஆதரவாளர்கள் இந்த நிதியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கைதான நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்தபோது, பெருந்தொகையை உள்ளடக்கிய பரிமாற்றங்கள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

''விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 'ஜனநாயக செயல்' கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன்.''
குலசேகரன், மலேசிய மனிதவள அமைச்சர்.

மேலும், அவர்களுடைய கைப்பேசிகளில் இருந்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது, எல்.டி.டி.ஈ தலைவர்களின் படங்கள், இயக்கக் கொடிகள், சுவரொட்டிகள் ஆகியவை பறிமுதல் ஆகியுள்ளன.

Ayob Khan
Ayob Khan
Malymail.com

மலேசியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது. எனவே, அதைத் தடுத்துநிறுத்தும் வகையில் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கும், குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியைக் குறிவைத்து காவல்துறை செயல்படுவதாகக் கூறப்படுவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது, முற்றிலும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட விஷயம்'' என விளக்கம் அளித்துள்ளார், டத்தோ அயோப் கான்.

''பத்தாண்டுகளைக் கடந்தும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைத்திடாது வஞ்சிக்கப்பட்டு, அடிமை நிலையில் இருக்கிற தமிழ்த் தேசிய இன மக்களைக் கைதுசெய்து, குற்றவாளிகளாக உலகத்தவரின் பார்வையில் நிறுத்த முற்படுவது மிகப்பெரும் அநீதியாகும். ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட எழுவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.''
சீமான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்தக் கைது விவகாரம் குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், ''தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மலேசியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி, அவர்கள் தங்கியிருந்த இடம் ஆகியவற்றை, மலேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Mahathir Mohamad
Mahathir Mohamad
நாம் தமிழர் கட்சியை முந்திய ஹரி நாடார்... இடைத்தேர்தல் நிலவரத்துக்கு சீமானின் பதில் என்ன?

அப்போது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய தகவல்களுடன் சுவரொட்டிகள், அச்சுப்படங்கள் உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டதாக அவர்களைக் கைதுசெய்த போலீஸார் விளக்கமளித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களே” என விளக்கம் அளித்துள்ளார். ஆனால், 'பிரதமரின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. இது, அரசியல் உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள முடிவு' எனப் பல எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், வர்த்தகர் எஸ்.சந்துரு, மலாக்கா ஊராட்சி மன்றக் கவுன்சிலர் பி.சுரேஷ்குமார் ஆகிய மூவரின் மனைவிமார்களும் புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு அருகில், கடந்த திங்கட்கிழமை முதல் பதாகைகளை ஏந்திப் போராடிவருகின்றனர். நேற்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த உண்ணாவிரதம் குறித்து, காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி உமாதேவி பேசுகையில்,

''என் கணவர் சாமிநாதன், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுதாபக் கூட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்தார். தவிர, அவருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்புகளும் இல்லை. அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது குற்றமா?

Protest
Protest

அப்பா எங்கே என எங்களின் குழந்தைகள் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள். அவர்களிடம் என்ன பொய் சொல்வது என எங்களுக்குத் தெரியவில்லை.

எங்களின் கணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அதற்காக அமைச்சர்கள் யாரையும் நாங்கள் சந்திக்கத் தயாராக இல்லை. உதவிகளுக்காக சிலரைச் சந்திக்கச் சென்றோம். அவர்கள், எங்களைப் பார்க்க மறுத்துவிட்டார்கள். எங்களின் வீடு தேடி வந்து பார்த்தவர்களும், எங்களால் எந்த உதவியையும் செய்யமுடியாது என அவர்களின் வருத்தத்தையும், ஆதங்கத்தையும் மட்டும்தான் தெரிவித்துவிட்டுச் சென்றார்கள்.

தமிழ் அமைச்சர்கள் யாரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. இன்று, எங்களுக்கு நிகழ்ந்த கொடுமை நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மக்களுக்காக சேவை செய்துவரும், ஆட்சியில் இருக்கும் என் கணவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவென்று யோசிக்க முடியவில்லை.

Protest
Protest

இன்று நடுரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களின் கணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே, இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இந்த உண்ணாவிரதத்தில் எங்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்தாலும், நாட்டின் பிரதமர் பதிலளிக்க வேண்டும்'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு