Published:Updated:

சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ்!

சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ்!
சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ்!

சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ்!

சிரியாவில் நடத்தப்பட்டு வரும் ரசாயனத் தாக்குதல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஏப்ரல் 7-ம் தேதியன்று, சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் நடந்த ரசாயனத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தும், அவரை ஆதரிக்கும் ரஷிய அதிபர் புதினும், ஈரானும்தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அந்த ரசாயனத் தாக்குதலுக்கு சிரியா அரசோ, அதை ஆதரிக்கும் ரஷியாவோ பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், சிரியா அரசு தன் சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயனத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மக்ரோன், ``ஏப்ரல் முதல் வாரத்தில் சிரியா மக்கள்மீது நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில், குறைந்தபட்சம் குளோரின் வாயுக்களை ஆசாத் அரசு பயன்படுத்தியிருப்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது" என்றார். "இதற்காக சிரியா மீது நீங்கள் பதில் தாக்குதல் தொடுப்பீர்களா?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த மக்ரோன், ``சரியான நேரத்தில் இதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம். அது பயனுள்ள வகையில் அமையுமாறு பார்த்துக்கொள்வோம். அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஃபிரான்ஸ் அதிபர், ``தான்  நினைப்பவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்று சர்வதேசச் சட்டத்தை ஒரு அரசு மீறுமாயின், அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்" என்றார். ரசாயன ஆயுதத்தடை அமைப்பான ஓ.பி.சி.டபிள்யூவுக்கு நான்கு நாள்கள் முன்புவரை சம்பவம் நடந்த டோமாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், ஓ.பி.சி.டபிள்யூவின் உண்மை கண்டறியும் குழு கடந்த சனிக்கிழமை டோமா சென்றடைந்ததாகவும், தங்கள் பணியை சீக்கிரம் தொடங்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறது. 

சிரியா விவகாரம் குறித்து ட்வீட் செய்த ட்ரம்ப், ``சிரியா மீது எப்போது தாக்குதல் தொடுப்போம் என்று சொல்ல இயலாது. மிக விரைவிலும் தொடுக்கலாம் அல்லது சிறிது நாள்கள் ஆனாலும் ஆகலாம்" என்று பொடிவைத்துக் கூறியுள்ளார். 

'பெல்லிங்கேட்' என்கிற சர்வதேச அளவில் போர்க்குற்றங்களை ஆராய்ந்து விசாரணை செய்யும் சமூக விசாரணை அமைப்பை நிறுவியவர் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் எலியட் ஹிக்கின்ஸ். இவர் சிரியாவில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். சிரியா நாட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் பெற்ற காணொளிக் காட்சியில் ரசாயனத் தாக்குதலால் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்து, அது டோமாவில் எடுக்கப்பட்டதுதான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், டோமாவில் தாக்குதல் நடந்த இடங்களை ரஷியப் படையினர் சென்று பார்த்ததுபோல ஒரு காணொளிக் காட்சி ரஷிய வெளிநாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இவ்விரண்டு காணொளிக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், சமூக ஆர்வலர்களும் ரஷியப் படையும் ஒரே கட்டடத்தைத்தான் ஆய்வு செய்துள்ளனர் என்கிறது அந்தக் குழு.

ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கூறுகையில், ``தாக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ததில் அங்கு குளோரினோ அல்லது வேறு எந்த ரசாயனமோ மக்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை"  என்று கூறியுள்ளார். இதைப் பற்றி வெளிநாட்டு பத்திரிகையொன்றுக்குப் பேட்டி அளித்த எலியட் ஹிக்கின்ஸ் ``ரஷியப்படை அந்த கட்டடத்துக்குள் என்ன செய்ததென்று தெரியவில்லை. உள்ளே சென்று 'ஒரு தடயமும் கிடைக்கவில்லை' என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஓ.பி.சி.டபிள்யூவுக்கு ஆதாரங்கள் கிடைக்கக்கூடாது என்ற வகையில் ஆதாரங்களை அழிக்க அவர்கள் முற்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ எண்ணெய் வளத்துக்கும், வல்லரசு நாடுகளின் பணப் பசிக்கும் ஏற்கெனவே செத்ததும், செத்துக் கொண்டிருப்பதும், இனி வருங்காலங்களில் சாகப்போவதும் அப்பாவி பொதுமக்கள்தான்.

இப்பிரச்னைக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ...?!

அடுத்த கட்டுரைக்கு