Published:Updated:

மல்லையா...நிரவ் மோடி மற்றும் பலர்... 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ஏமாந்த வங்கிகள்!

மல்லையா...நிரவ் மோடி மற்றும் பலர்... 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ஏமாந்த வங்கிகள்!
மல்லையா...நிரவ் மோடி மற்றும் பலர்... 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ஏமாந்த வங்கிகள்!

2013-14-ம் நிதியாண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 4,546 வழக்குகள் மூலம் 16,107 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

வங்கிகளில் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகையை திருப்பிக்கட்ட முடியவில்லை என்று கூறி இந்தியாவை விட்டே ஓடிவிட்டார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபரான நீரவ் மோடியோ வங்கி ஊழியர்களின் உதவியுடன் யாராலும் அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதவகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே இந்தளவுக்கு மோசடியில் ஈடுபட்டு வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஒட்டுமொத்த வங்கித்துறையில் நடந்துள்ள நிதி மோசடி எவ்வளவு தொகையை எட்டும் என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

ஆர்.டி.ஐ. மூலம் அண்மையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளில் எவ்வளவு தொகை மோசடி நடந்துள்ளது என்ற விவரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் மூலம் பெறப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன. 2013-14-ம் நிதியாண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 4,546 வழக்குகள் மூலம் 16,107 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதுவே, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் மோசடிகளின் எண்ணிக்கையும், அவற்றின் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பும் மிக அதிகளவு உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 5,114 வழக்குகள் மூலம் 26,196 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை சராசரியாக 4.6 சதவிகிதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு 16.4 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும், கடந்த நிதியாண்டில் மிகவும் அதிகளவிலான மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2018 மார்ச் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 28,459 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தளவு உயர்வைச் சந்தித்திருப்பதற்கு முக்கியக் காரணம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மிகப்பெரிய மோசடிதான் எனத் தெரியவந்துள்ளது. 13,000 கோடி ரூபாய் அளவுக்கு நீரவ் மோடி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது கடந்த நிதியாண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. 

மிக அதிகளவு நிதி மோசடி நடந்த ஆண்டு என்றால் அது 2017-18 தான். இந்திய அளவில் இதுவரை மொத்தமாக வங்கிகளில் மட்டும் நிலுவையில் உள்ள வாராக்கடன் ரூ. 8.4 லட்சம் கோடியாகும். 

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளும் வாராக்கடனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள அனைத்து மோசடிகளுமே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நடந்தவை. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தனிப்பட்ட மிகப்பெரும் தொழிலதிபர்கள் செய்த மோசடியே அதிகளவாக உள்ளது. 

விவசாயத்துக்காக கடன் வாங்கிய விவசாயிகள், தனிநபர் தேவைக்காக கடன் பெறுவோர், ஏதாவதொரு காரணத்துக்காக அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் தாமதமாகும்போது, அவர்களைத் துரத்திச் சென்று வங்கி அதிகாரிகள் பணத்தை வசூல் செய்கிறார்கள். ஆனால், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டும், காணாமல் இருப்பதுதான் வேடிக்கை.
இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தொழிலதிபர்களை இந்தியா வந்து பணத்தை திருப்பிச் செலுத்த சம்பந்தப்பட்ட வங்கிகளும், மத்திய அரசும் அழுத்தம் கொடுக்காதவரை மல்லையா போன்றோர் லண்டனில் இருந்துகொண்டு கிரிக்கெட் பார்த்துக்கொண்டும், கோல்ஃப் விளையாடிக் கொண்டும்தான் இருப்பார்கள். 

இதேநிலை நீடித்தால் இந்தியாவில் உள்ள சில வங்கிகள் திவால் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இனியாவது விழித்துக்கொள்ளுமா வங்கிகள்?

அடுத்த கட்டுரைக்கு