Published:Updated:

உலக அளவில் நாடற்று இருக்கும் 7 கோடி மக்கள்! #WorldRefugeeDay

உலக அளவில், சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதில், 51% பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வருந்தத்தக்கது.

உலக அளவில் நாடற்று இருக்கும் 7 கோடி மக்கள்! #WorldRefugeeDay
உலக அளவில் நாடற்று இருக்கும் 7 கோடி மக்கள்! #WorldRefugeeDay

சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் வட இந்தியர்கள்தாம். ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், முடி திருத்தகங்கள், மெட்ரோ ரயில் வேலைகள் என எல்லா இடங்களிலும் அவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்லும்போது ஒரு முறையாவது, ``பாவம் வேலை செய்றதுக்காகச் சொந்த மாநிலத்திலிருந்து இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுறாங்க" என்று மனதில் நிச்சயம் நினைத்திருப்போம். வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கே இப்படி என்றால், தாய்நாட்டிலிருந்து விரட்டப்பட்டு அல்லது வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களின் நிலை மிகவும் மோசமானது. உலகளவில், நாள்தோறும் சராசரியாக 28,300 பேர் பாதுகாப்பின்மை காரணமாகத் தங்களின் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்கிறது ஐ.நா. அகதிகள் ஆணையம். அவ்வாறு வீடு, உடைமை, சொந்தம், கனவு என அனைத்தையும் தொலைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி வாழும் மக்களுக்கு மனபலமும், நம்பிக்கையும் கொடுக்கும் வகையில் ஜூன் 20- ம் தேதி உலகமெங்கும், `அகதிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது.

அகதிகள் வெளியேற போர்ச்சூழல், பாதுகாப்பின்மை, பசி, பஞ்சம் போன்றவைதாம் முக்கியக் காரணங்கள். இதுபோக பல நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகிய காரணங்களாலும் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலையும் ஏற்படும். மேலும், உடை கட்டுப்பாடு மற்றும் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளிலிருந்து வெளியேறும் பெண்களையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறது ஐ.நா. சபை. பொதுவாக இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சுற்றுச்சுழல் பிரச்னைகளால் வெளியேறுபவர்கள் அந்நாட்டின் வேறு பகுதிகளில் குடியேறுவார்கள். ஆனால், அது தற்போது மாறி, வேறு நாடுகளுக்குக் குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், கடல்நீர் மட்டம் அதிகரிப்பு, மாசுப் பிரச்னைகள், காலநிலை மாற்றங்கள் ஆகிய சுற்றுச்சூழல் பிரச்னைகளால் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. 

உலகளவில், சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இதில், 51 சதவிகிதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வருந்தத்தக்கது. ஆப்கானிஸ்தான், இராக், சோமாலியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்தே அதிக மக்கள் வெளியேறுகின்றனர். உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கென்யாவிலுள்ள டடாப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சுமார் 3.29 லட்சம் அகதிகள் வாழ்ந்துவருகின்றனர்.

அகதிகளாக வெளியேறியுள்ள மக்களில் 86 சதவிகிதம் பேருக்கு அடைக்கலம் கொடுப்பதே வளரும் நாடுகள்தாம் என்கிறது ஐ.நா. அகதிகள் ஆணையம். உலகில் அதிக நாடுகளில் வாழும் அகதி மக்கள் இலங்கைத் தமிழர்கள்தாம் என்கிறது ஐ.நா-வின் கிளை அமைப்பான UNICEF. இலங்கைத் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள 54 நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தில் சுமார் 4.5 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு, நாடற்று இருந்த ஐரோப்பியர்களுக்காக 1950, டிசம்பர் 14- ம் தேதி தொடங்கப்பட்டதுதான் ஐ.நா. அகதிகள் ஆணையம். அகதிகளைக் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அகதி மக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது எனப் பல நாடுகள் எடுக்கும் அதிரடி முடிவுகளைத் தடுக்க, 2016- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்மட்டக் குழு ஒன்றைக் கூட்டியது ஐ.நா. சபை. அதில், ``அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது. மேலும், அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கல்வி, மருத்துவம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்கவேண்டு என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. 

பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்து வரும் அகதி மக்களை ஆறுதல்படுத்தும் வகையில் 2016- ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அகதிகள் அணி சேர்க்கப்பட்டது. இதுபோன்று அனைத்து இடங்களிலுமே அகதிகளுக்கென தனி அங்கீகாரம் கிடைக்கப்பெற்று அவர்கள் மன அமைதி பெற ஐ.நா-வின் அறிவுரைப்படி அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.