Published:Updated:

உலகெங்கும் இவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...! பூர்வகுடிகள் தினம் இன்று

தங்கள் அடையாளத்தை இழந்தோ, அதை மீட்பதற்காகவோ இன்றைய நவீன உலகில் பூர்வகுடியினர் பல சவால்களைச் சந்தித்து வருகிறார்கள்.

உலகெங்கும் இவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...! பூர்வகுடிகள் தினம் இன்று
உலகெங்கும் இவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...! பூர்வகுடிகள் தினம் இன்று

கஸ்ட் 9-ம் தேதியை, சர்வதேச பூர்வகுடிகள் தினமாக ஐ.நா சபை ஆண்டுதோறும் அனுசரித்துவருகிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட்-9) மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை ஐ.நா தலைமைச் செயலகத்தில் பூர்வகுடியினரைப் போற்றும் நிகழ்வு நடைபெற்றது.

`இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருந்தாலும் தங்களுக்கான கலாசாரப் பண்பாட்டு முறைகளுக்குச் சிறிதும் பங்கம் வராமல், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாத்து, அதன் வழியில் வாழ்க்கையை நிறைவாக வாழ்பவர்கள் பூர்வகுடியினர். தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையோடு இன்றைய தொழில்நுட்ப நடைமுறைகளும் கலந்திடுவதற்கான பல்வேறு சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அதிலும் தங்களுக்குரிய தரத்தை எந்த நிலையிலும் இழந்துவிடாது தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் மேம்படுத்தும் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள் இந்தப் பூர்வகுடியினர்' என்று சமூகத்தில் அவர்களுக்கான நிலை எடுத்துச்சொல்லப்பட்டது.

தனித்துவமான கலாசார, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை மரபுவழியாகத் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்துவரும் மனிதர்கள், `பூர்வகுடியினர்' என அறியப்படுகிறார்கள். ஆதிக்கச் சமூகத்தினர், தாங்கள் வாழும் நிலத்தில் அதிகாரம் செலுத்திவந்தாலும், தங்கள் மரபைத் தொடர்ந்து போற்றிவருகிறார்கள். ஒவ்வொரு பூர்வகுடி இனத்துக்கும் தங்களுக்கே உரிய கலாசாரங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் பூர்வகுடி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றுபோலவே இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, உலகில் தற்போது 37 கோடி பூர்வகுடி மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். சுமார் 90 நாடுகளில் வாழ்ந்துவரும் இவர்கள், உலகத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதமே இருக்கிறார்கள். உலகத்தில் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கையின்படி, சுமார் 15 சதவிகித மக்கள் பூர்வகுடியினரே! ஒப்பீட்டளவில் குறைவான மனிதர்களே இருந்தாலும், உலகில் பேசப்படும் 7,000 மொழிகளில் பெரும்பாலான மொழிகள் இவர்களால்தாம் பேசப்படுகின்றன.

பூர்வகுடியினர் தங்கள் அடையாளம், வாழ்க்கைமுறை, நிலத்தின் மீதான உரிமை, அதன் வளங்கள் போன்றவற்றைக் காப்பதற்காகத்  தொடர்ந்து போராடிவருகிறார்கள். ஆனாலும், பன்னெடுங்காலமாகவே அவர்கள் ஒடுக்குமுறைக்குத்தான் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகச் சூழலில்கூடப் பெருமளவிலான பாதிப்பை அடையும் வாழ்க்கையை வாழ்பவர்கள் இந்தப் பூர்வக்குடியினர்தான். 

அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களாலும், பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாகவும் இந்த மக்கள் தங்கள் ஆதி நிலத்தைவிட்டு வெளியேறவேண்டிய நிலை, கடந்த சில நூற்றாண்டாகவே உள்ளது. சொந்த நிலம் இல்லையென்று ஆன பிறகு, இவர்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது நகரங்களைத்தான். சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, நிம்மதியான வாழ்க்கை போன்றவற்றின் தேவை கருதி, இந்த மக்களில் பலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர நேரிடுகிறார்கள். பூர்வகுடியினர் பெரும்பாலும் கிராமங்களில்தாம் இருப்பார்கள் எனும் பொதுவான நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில், இவர்களில் பல இனக் குழுக்கள் நகரங்களிலும் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டுள்ளது. 

ஐ.நா-வின் தகவலின்படி ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவில் உள்ள 40 சதவிகிதப் பூர்வகுடியினர், நகரப் பகுதிகளில்தான் வசிக்கிறார்கள். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் உள்ள சில நாடுகளில் 80 சதவிகிதப் பூர்வகுடியினர் நகரப் பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இப்படி நகரங்களுக்குப் புலம்பெயரும் பெரும்பாலானவர்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பும் மேம்பட்ட பொருளாதார நிலையும் அமைகிறது. ஆனாலும் இவர்கள் பெருமளவிலான இனவெறியையும் தீண்டாமையையும் சந்திக்கவேண்டியிருக்கிறது என்பது கசப்பான ஓர் உண்மை. 

தங்களின் அடையாளத்தை இழந்தோ, அதை மீட்பதற்காகவோ இன்றைய நவீன உலகில் பூர்வகுடியினர் பல சவால்களைச் சந்தித்துவருகிறார்கள். அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேசப் பூர்வகுடியினர் தினத்தை அனுசரிக்கும் ஐ.நா-வின் முன்னெடுப்பு, மிகச்சிறந்த ஒன்று.