Published:Updated:

கட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய பெண்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அந்நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

கட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய பெண்!
கட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய பெண்!

ன்றைய காலகட்டத்தில், 'Socialising' எனப்படும் ஆண் பெண் பேதமில்லாமல் பிறரோடு பழகும் தன்மை முன்னேற்றமடைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எதிர்பாலினத்தவரோடு பழகுவதில் பெரும்பாலானோருக்கு அதிக வரையறைகள் இருந்தது உண்டு. முகம் பார்த்து பேசவே சிரமப்படுவார்கள். கைகுலுக்கிக்கொள்ளக்கூட முகம் சுழிப்பார்கள். இன்றோ அதிகாரபூர்வமாகவோ நட்பு ரீதியாகவோ எதிர்பாலினத்தவர் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது கட்டிப்பிடிப்பதுகூட அடிப்படை வரவேற்பு நிகழ்வாகி வருகின்றது. இவை பலருக்கு அதிகப்படியாகத் தோன்றலாம். ஆனால், இதுவும் நம் நாட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. இவை மேற்கத்திய நாடுகளின் கலாசாரம், இவை நமக்குப் பொருந்தாது என்றும் பலர் கூறி வருகின்றனர். குறைந்தபட்சம் எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் கைகுலுக்கும் அளவுக்குச் சமத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளில்கூட சிலர் எதிர்பாலினத்தவரோடு கைகுலுக்க தயங்கி வரும் நிலை இன்றும் உள்ளது. அதன் விளைவு அந்நாட்டு குடியுரிமையையே அவர்களுக்குக் கிடைக்காமல் போனது.

ஸ்விட்சர்லாந்து நாட்டு குடியுரிமை வாங்க முயன்ற இஸ்லாமியக் குடும்பத்தினர் நேர்காணலில் எதிர்பாலினத்தவரோடு கைகுலுக்க மறுத்ததன் விளைவாக அவர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த முடிவை இறுதி செய்த அதிகாரிகள், `ஆண் பெண் பாலின சமத்துவத்தை வளர்ப்பதிலும் மதிப்பதிலும் இந்தத் தம்பதி தோல்வியுற்றிருக்கிறது.' சில மாதங்களுக்கு முன்னர் இந்தத் தம்பதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாலினத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தம்பதி இருவருமே பதில் சொல்லத் தடுமாறியிருக்கின்றனர்.

இது குறித்து ஸ்விட்சர்லாந்து அதிகாரிகள் கூறுகையில், "ஸ்விட்சர்லாந்து குடியுரிமையில் ஆர்வம்கொண்ட குடிமக்கள் ஸ்விட்சர்லாந்து நாட்டின் சமூகத்தில் நன்கு ஒன்றிட வல்லத்தக்க சமத்துவத்தை கடைப்பிடித்தல் அவசியம். அப்போதுதான் சுவிஸ் சமூகத்தில் உள்ளவர்களோடு நல்லுறவில் இருக்க முடியும். அவ்வாறு நடத்தலே ஸ்விட்சர்லாந்து சட்டம் ஒழுங்கை மதிக்கும் நடத்தையாகும்" என்றார்கள்.

இதைப் போன்றதொரு சம்பவம் சுவீடன் நாட்டில் நடந்துள்ளது. வேலைக்காக நேர்காணலுக்குச் சென்ற இஸ்லாமியப் பெண் ஒருவர் நேர்காணல் எடுத்தவருடன் கைகுலுக்க மறுத்துள்ளார். நீதிமன்றம் வரை சென்ற இந்தச் சம்பவத்தில் இஸ்லாமியப் பெண்ணுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. நேர்காணல் நடத்திய நிறுவனம் அவருக்கு £3,426 பவுண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்ச ரூபாய்) இழப்பீடு தர வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது நீதிமன்றம்.

ஃபரா அல்ஹாஜே என்கிற 24 வயதான இஸ்லாமியப் பெண் சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு மொழிபெயர்ப்பாளர் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றுள்ளார். நேர்காணல் எடுத்தவர் ஓர் ஆண், ஆதலால் அந்தப் பெண் தனது மதநம்பிக்கையின்படி அவருடன் கைகுலுக்க மறுத்திருக்கிறார். அதற்குப் பதிலாக தான் உள்ளே நுழைந்ததும் இஸ்லாமிய சமூகத்தினர் மரபுப்படி தன் நெஞ்சில் கைவைத்து மரியாதைச் செலுத்தியிருக்கிறார். பொதுவாக அல்ஹாஜே, தன் சொந்த பந்தம் தவிர்த்து எந்தவொரு எதிர்பாலினத்தவரையும் தொடக் கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்.

சம்பவம் குறித்து சுவீடன் நாட்டு நீதிமன்றத்தில் கூறிய அவ, "என்னை நேர்காணல் செய்த அந்நிறுவன அதிகாரி முகம் சிவக்க கோபத்துடன் 'இங்கு எல்லோரிடமும் கைகுலுக்குதல் அவசியம்' என்று கடிந்து கூறினார். அவர் கோபமாய் பேசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். சட்டென்று நேர்காணலை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். லிஃப்டுக்குள் சென்ற மறுநொடியே நான் அழ அரம்பித்துவிட்டேன். இதுவரை இப்படி எனக்கு நடந்ததே இல்லை. மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக இது அமைந்துவிட்டது" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அல்ஹாஜேவின் வழக்கறிஞர், "ஒரு நிறுவனத்தின் நிர்வாகி, எல்லா ஊழியர்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்று கூறுவது சரிதான். ஆனால், ஒருவரிடம் இப்படித்தான் கைகுலுக்கி வரவேற்க வேண்டும் என்று சட்டமில்லை" என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அந்நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஃபரா அல்ஹாஜே "நான் கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவள். இந்த விஷயம் சுவீடனில் மிகவும் குறைவு. நான் யாரையும் காயப்படுத்தவில்லை. எனது நாட்டில் ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. அதனால்தான் நான் ஆண், பெண் எவரையும் தொட்டு பழகுவதில்லை. என் மத விதிகள்படி நான் நடந்த போதிலும் என் நாட்டின் விதிகளை நான் மீறவில்லை. ஆண் பெண் இருவரையும் சமமாகவே நடத்துகிறேன்" என்றார்.

கைகுலுக்கி வரவேற்பது அடிப்படை வரவேற்றல் நாகரிகம் என்றபோதிலும் எதிர்பாலினத்தவரோடு நெருங்கிப் பழக அனுமதிக்காத சூழ்நிலையில் வளர்ந்தவர்கள், தொட்டுப்பழகுவதில் ஆட்சேபம் இருப்பது இயல்புதான். எதிர்பாலினத்தவரோடு கைகுலுக்குதல்கூட கூடாது என்பது பிற்போக்குத்தனம் எனில், ஒருவருக்குப் பிடிக்காதவற்றை பழக்கமில்லாதவற்றைத் திணிப்பதும் பிற்போக்குத்தனம்தான். அவர்களுக்கு இதுபற்றி கற்றுக்கொடுக்கலாமே தவிரத் திணித்தல் கூடாது. எல்லாவற்றையும் விடத் தனிமனித உரிமை அவசியம். நம்மைச் சந்திப்பவரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காமல் அவரது விருப்பத்துக்கு ஏற்ப அவரை வரவேற்பதே ஆகச்சிறந்த விருந்தோம்பல்.