சமூகம்
Published:Updated:

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

ளைஞர்களும் இளம்பெண்களும் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த அந்த வளாகத்தில், 50 வயது மதிக்கத்தக்க முதியவர் நுழைந்தார். எல்லோரும் அவரைப் புரியாமல் பார்த்தனர். ‘‘நானும் பயிற்சி பெற வந்துள்ளேன்’’ என்றார். ‘‘ஏன்?’’ என்று கேட்டார், பயிற்சி கொடுப்பவர். ‘‘நேற்றுவரை என் மகன் உங்களுடன் இருந்தான். குண்டுவீச்சில் நேற்றிரவு அவன் இறந்துவிட்டான். அவனைப் புதைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன். அவனது பணியை இனி நான்தானே செய்ய வேண்டும்’’ என்றார் முதியவர். எல்லோரும் ஓடிப் போய் கண்ணீருடன் அவரைக் கட்டிக்கொண்டனர். 

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

தங்கள் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று சிரியாவில் இயங்கிவரும் குழு அது. அவர்கள் போர்ப்பயிற்சி எடுக்கவில்லை; கைகளில் துப்பாக்கி இல்லை. அவர்களுக்கு ‘போராளிகள்’ என்றோ, ‘தீவிரவாதிகள்’ என்றோ அடையாளம் இல்லை. அவர்கள் ‘வெள்ளை ஹெல்மெட்’ தொண்டர்கள். குண்டுவீச்சில் சிதைந்து போகும் கட்டடங்களிலிருந்து, காயம்பட்ட மனிதர்களைக் காப்பாற்றுபவர்கள்.

2013-ம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போர், இந்த மார்ச் மாதத்தில் எட்டாம் ஆண்டைத் தொடுகிறது. இரண்டாம் உலகப் போர்கூட இவ்வளவு நீண்ட காலம் நடந்ததில்லை. போரில் இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது வெறும் எண் அல்ல; அத்தனையும் உயிர்கள். 10 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர், தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அலைகின்றனர். இது, சிரியாவின் மக்கள்தொகையில் சரிபாதி. ‘அரபு வசந்தம்’ வளைகுடா நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்களைத் தூண்டியபோது வீதிக்குவந்த சிரிய மக்களை, அதிபர் பஷார் அல் ஆசாத் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். வளைகுடா நாடுகளின் உள்நாட்டுப் பகைமை உசுப்பிவிட, பல நாடுகளும் இங்கு போராளிக்குழுக்களை வளர்த்துவிட்டன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் தங்கள் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் போர்க்களமாக சிரியா ஆகியுள்ளது. அந்த நாட்டு அரசாங்கமோ, விஷவாயு செலுத்தி சொந்த தேசத்து மக்களையே கொடூரமாகக் கொல்கிறது.

பச்சிளம் குழந்தைகளும்,பெண்களும், முதியவர்களும் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகச் சமூகமோ நிராகரிப்பை மட்டுமே சிரிய மக்களுக்குத் தந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மக்களின் ஒரே நம்பிக்கை ‘வெள்ளை ஹெல்மெட்’. Syrian Civil Defence என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பில், இப்போது 2,790 பேர் உள்ளனர். ‘‘அவர்கள் இதற்காகச் சம்பளம் வாங்குகிறவர்களோ, டாக்டர்களோ கிடையாது. நேற்றுவரை கடை ஊழியராக, ஆசிரியராக, மாணவராக, டாக்சி டிரைவராக இந்தச் சமூகத்தில் இருந்தவர்களே. பெண்களும் உள்ளனர். தங்கள் நாடு வளமாக வேண்டும் என்ற வெறியில் வீதிக்கு வந்தவர்கள். இப்படி வந்த நிறைய பேர் துப்பாக்கி ஏந்திப் போரிடுகிறார்கள். இவர்கள், ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு போய் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவது அதைவிட முக்கியம் எனப் புரிந்துகொண்டு இங்கு வந்திருக்கிறார்கள்’’ என்கிறார், ஜேம்ஸ் லெ மெசூரியே. முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான இவர்தான், இந்த அமைப்புக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

சிரியாவின் பெரும்பகுதி, அந்த நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. பல ஆயுதக் குழுக்களின் ஆளுகையில் இருக்கும் அங்கெல்லாம் தினம் தினம் சிரிய மற்றும் ரஷ்ய விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. முந்தின நிமிடம்வரை உறுதியாக நின்றிருந்த அடுக்குமாடிக் கட்டடம் அப்படியே சிதைந்து விழுந்து, அத்தனை பேரும் உள்ளே சிக்கிக்கொள்ள, அந்த நிமிடங்களில் போய்க் காப்பாற்றுவது இவர்கள்தான். ‘அடிபட்டவர் எந்த இனம் என்று பார்ப்பதில்லை.ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது’ எனும் இவர்கள், இதுவரை சுமார் 24 ஆயிரம் பேரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஒரு போர் விமானம் குண்டுவீசிவிட்டுப் பறந்து சென்று, 15 நிமிடங்களில் திரும்பி அதே இடத்துக்கு வந்து மீண்டும் குண்டு வீசும். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் செயல்பட வேண்டும். வலியில் கதறும் குழந்தைகள், காலை இழந்து கதறும் இளைஞர்கள், பயத்திலும் புகையிலும் தடுமாறித் தவிக்கும் முதியவர்கள், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு ஓலமிடும் பெண்கள்... யாரை முதலில் காப்பாற்றுவது என யோசித்தால்கூட ஒரு நிமிடம் வீணாகிவிடும். இரண்டு கைகளிலும் இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்து காப்பாற்றிய தொண்டர்களும் உண்டு; இடிபாடுகளில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றப் போய் அடுத்த ரவுண்டு குண்டுவீச்சில் சிக்கிச் செத்துப்போனவர்களும் உண்டு. வெள்ளை ஹெல்மெட் அணிந்து வீதிக்கு வந்தவர்களில், நான்கில் ஒருவர் செத்துப்போயிருக்கிறார்கள். நொறுங்கிச் சரிந்த வீட்டுக்குள் சென்று பலரைக் காப்பாற்றிவிட்டு ஆசுவாசமாக வீட்டுக்குத் திரும்பிப் போய், தங்கள் வீட்டில் அத்தனை பேரும் குண்டுவீச்சில் இறந்து கிடப்பதைப் பார்த்துத் திக்பிரமை அடைந்தவர்களும் இவர்களில் உண்டு.

“துப்பாக்கியைவிட ஸ்ட்ரெச்சர் முக்கியம்!”

காலீத் என்ற இளைஞரின் கதை எவரையும் கலங்கச் செய்யும். இரவுமுழுக்க பணிபுரிந்துவிட்டுத் திரும்பித், தூங்க நினைத்தவரை போர் விமானத்தின் குண்டுவீச்சு ஓசைதான் எழுப்பியது. அவர் வீட்டுக்குப் பக்கத்து கட்டடம் நொறுங்கிச் சரிந்துகொண்டிருந்தது. சக நண்பர்களுடன் சென்று 12 பேரைக் காப்பாற்றியவர், தூக்கம் கண்களை அழுத்தியதால், அந்த இடிபாடுகளின் நடுவிலேயே தூங்கிவிட்டார். ஒரு குழந்தையின் அழுகுரல் மெல்லிய ஓசையாகக் கேட்டதும், சட்டென தூக்கம் தொலைந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடிபாடுகளின் நடுவே அந்த அழுகுரலைத் தொடர்ந்து, கட்டடச் சிதைவுகளை அகற்றி, 12 மணி நேரம் போராடிக் குழந்தையை நெருங்கினர். பிறந்து 10 நாள்கள் மட்டுமே ஆன குழந்தை. லேசான சிராய்ப்புகளுடன் அழுதுகொண்டிருந்த அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்துவிட்டு வெளியேற முயன்றபோது, இடிபாடுகள் நொறுங்கிவிழுந்து காலீத்தைச் சாகடித்தது.

இவ்வளவையும் கடந்த இந்த எளிய மனிதர்கள், அசாதாரணமானச் செயல்களைச் செய்கிறார்கள். சர்வ வல்லமை படைத்த தலைவர்களோ, சிரியாவுக்கு ஆயுதங்களையும் மரணத்தையும் மட்டுமே பரிசாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

- அகஸ்டஸ்