Published:Updated:

கூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்!

"இந்த உலகில், வாழ்வதற்கேற்ற காலம் ஒன்று எப்போதும் இருந்ததில்லை. ஒட்டுமொத்த மனித இனமாகப் பெரிய பெரிய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அதைப்போன்றே, கூகுளிலிருந்து வெளியேறியிருக்கும் பணியாளர்களின் உணர்வை மதிக்கிறேன்."

கூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்!
கூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்!

மெரிக்காவில் 2006-ம் ஆண்டு #MeToo இயக்கம் தொடங்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும், 9 நாளில் #MeToo ஹேஷ்டேக் மூலம் 17 லட்சம் ட்வீட்கள் பதிவுசெய்யப்பட்டன. 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன. இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக #Metoo அதிகம் பேசப்பட்டது; இப்போதும் பேசப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த வருடம் அக்டோபர் மாதம், ரயா சர்க்கார் என்னும் சட்டக் கல்லூரி மாணவியால் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம், மெள்ள வளர்ந்து, மிகப்பெரிய அளவில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறது. #MeToo மிகச் சரியான முன்னெடுப்பு என்றும், காழ்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஆபத்து நிறைந்தது என்றும் விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சாமானியர்களின் நிலை, வெளிப்படையாகப் பேசிவிடும் நிலையில் இல்லை. அப்படிச் செய்தாலும், அது அவர்களின் வாழ்வாதாரத்தையும், சமூக மதிப்பையும் பதம்பார்த்துவிடுகிறது. மாறாக, பெரும்பதவிகளில் இருப்பவர்களின் மீது வைக்கப்படும் பாலியல் புகார்களுக்கு வரும் எதிர்நடவடிக்கைக்கு அதிக ஆயுள் இருப்பதில்லை. கடந்த சில வருடத்தில் கூகுள் ஊழியர்கள் மீது வைக்கப்பட்ட புகார்களும்கூட, கொடுக்கப்பட்ட இடத்தைவிட்டு நகராமல் மெளனம் காத்த மின்னஞ்சல்கள்தாம். #MeToo-வின் இந்த அலையில், கூகுள் நிறுவனத்தில் பல பணியாளர்கள் தங்கள் வேலைகளைவிட்டு வெளியேறி தங்களின் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆண்ட்ராய்டின் மூளையாகச் செயல்பட்ட ஆன்டி ரூபின், சகபணியாளரான பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் காரணமாக, கூகுளிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அவருக்கான தொகையில் எந்தப் பாரபட்சமும் காட்டாமல் தந்துகொண்டிருக்கிறது கூகுள் நிறுவனம். அடுத்த மாதம்தான் அவருக்கான இறுதித்தொகை முடிவடைகிறது. கூகுளின் முக்கிய முகங்கள் மீது அதற்குப் பிறகு வைக்கப்பட்ட புகார்களுக்கும் பெரிய நடவடிக்கைகள் எதுவுமின்றி மெளனம் சாதித்திருக்கிறது கூகுள்.

கடந்த இரண்டு வருடத்தில், 48 பணியாளர்களை அவர்களின் மீதான பாலியல் புகார்களுக்காகப் பதவிநீக்கம் செய்திருப்பதாக, #MeToo இயக்கம் வலுவடைந்த நிலையில் கணக்குக் காட்டியிருக்கிறது கூகுள். பணியிடங்களில் மதுபானங்கள் பயன்பாட்டுக்குத் தடைவிதிப்பது முதல் இன்னும் பல உறுதிமொழிகளுடன்கூடிய நீண்ட கடிதத்தை கூகுள் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார் சிஇஓ சுந்தர் பிச்சை.

`ஒரு நிறுவனத்தில் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான ஒழுக்க விதிகளிலிருந்து தவறியிருக்கிறதா கூகுள்?' என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர், ``இந்த உலகத்தில் பல சவால்கள் நிறைந்திருக்கின்றன. உலகின் பல காலகட்டங்களில் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன். முதலாம் உலகப்போரின்போது ஃப்ளூ காய்ச்சலையும், இரண்டாம் உலகப்போரையும் இன்னும் பலவற்றையும் எதிர்கொள்ளவேண்டியதாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த மனித இனமாக பெரிய பெரிய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அதைப்போன்றே, கூகுளிலிருந்து வெளியேறியிருக்கும் பணியாளர்களின் உணர்வை மதிக்கிறேன். இந்தப் பணியிடத்தை இன்னும் சிறப்பாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இப்படியான நடவடிக்கைகளை மதிக்கிறேன். உலகத்தை இன்னும் சிறப்பாக்குவதற்கு மனிதர்கள் உத்வேகம்கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். கூகுளை அடுத்து ஃபேஸ்புக்கும் தனது பணியாளர்களின் பாலியல் புகார்கள் தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு #MeToo புகாருக்குப் பிறகும், அந்தப் புகாருக்கு எழும் எதிர்வினைக்குப் பிறகும் நமக்கு எழும் கேள்வி ஒன்று இருக்கிறது.

சாமானியர்கள் #MeToo புகார் அளிப்பதற்கு, சமூகம் எந்தெந்த வழிகளைத் திறந்துவைத்திருக்கிறது?