Published:Updated:

உலக வரைபடத்தில் இடமற்றவர்கள்!

உலக வரைபடத்தில் இடமற்றவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலக வரைபடத்தில் இடமற்றவர்கள்!

லீனா மணிமேகலை - படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், ரபீக் இஸ்மாயில்

யோலா கல்லூரியின் சமூகப்பணித்துறை நடத்திய `இடம்பெயர்தலைப் புரிந்துகொள்வோம்’ என்ற ஆசிய அளவிலான ஐந்து நாள் பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாக, சென்னைக் கேளம்பாக்கத்தில் வசிக்கும் மியான்மர் ரோஹிங்கியா அகதி மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசும் ஏற்பாட்டில் கலந்துகொள்ள, பேராசிரியர் ஞா.அசோக் கிளாட்சுடன் சேவியர் அழைப்பு விடுத்தார்.

உலக வரைபடத்தில் இடமற்றவர்கள்!

நண்பர் கிளாட்சுடன், ஆச்சர்யமான ஒரு மனிதர். ஒடிசாவில் கரை ஒதுங்கும் சிங்கள மீனவர்களை மீட்பதற்கு, ஒரு பக்கம் இந்திய-இலங்கைத் தூதரகங் களோடு போராடிக் கொண்டே,  இந்தோனேஷி யாவில் கரை ஒதுங்கிய ஈழத்தமிழ் அகதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு களையும் செய்துகொண்டி ருப்பார்.அவர் ஏற்பாடு செய்திருந்த நேரடிக் களப் பயணம், மியான்மரிலிருந்து சென்னை வந்து சேர்ந்தி ருக்கும் 22 ரோஹிங்கியக் குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தந்தது.

ஐ.நா அகதிகள் முகமை (United Nations High Commission of Refugees UNHCR), உலகில் இன்று ஒவ்வொரு 122 பேருக்கும் ஒருவர் தங்கள் மண்ணை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறது. 2005-2016-ம் ஆண்டுகளில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து கட்டாயமாக  வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும், அதில் 21.3 மில்லியன் மக்கள் நாடற்ற அகதிகள் என்றும், அதில் பாதி விழுக்காடு 18 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்பதையும் ஐ.நா ஏடுகள் குறிப்பிடுகின்றன. அதன் ஒரு பகுதிதான் மியான்மரிலிருந்து தூக்கியெறியப்படும் ரோஹிங்கியா மக்கள்.

50 மில்லியன் பௌத்தர்கள் வாழும் மியான்மரில், சுமார் ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மதம் மற்றும் மொழி சிறுபான்மையினராக வரலாறு நெடுக பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வருபவர்கள். 1982 குடியுரிமைச் சட்டத்தின் மூலம் `ரோஹிங்கியா மக்கள், மியான்மரின் குடிமக்கள் அல்லர்’ எனத் தடாலடியாக அறிவித்தது அரசாங்கம். அடையாள அட்டைகளைப் பறித்ததுடன் அவர்கள் குடியிருப்புகளுக்கும் தீவைத்து, கூண்டோடு கொல்வதற்கும் ஆணையிட்டது. அதன்காரணமாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர் ரோஹிங்கியா அகதிகள்.

2012-ம் ஆண்டு மியான்மரில் நடந்த உச்சக்கட்ட இன மோதல் களில் உயிர் பிழைத்த வர்கள்,  பார்டர் தாண்டி பங்களாதேஷ் வந்தடைந்து அங்கு சோற்றுக்கும் வழியில்லாமல், `தலால்’ என்றழைக்கப்படும் ஏஜென்ட்களுக்குக் காசு கட்டி கொல்கத்தாவுக்குக் கடத்தப்பட்டு, ஹௌரா ரயில்நிலையத்தில் சென்னைக்கு ரயில் ஏறியவர்கள்தாம், இன்று கேளம்பாக்கத்தில் இருக்கும் 22 குடும்பங்கள்.

`சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை’ என ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட மக்கள் இப்போது குப்பை பொறுக்கும் வேலைகளில் சேர்ந்து புதுப்பாக்கம், கோவளம் என ஒவ்வொரு பகுதியாய் இடம்பெயர்ந்து பல்வேறு பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு, கேளம்பாக்கத்தின் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழக்கூடிய புயல் நிவாரணக் கட்டடம் ஒன்றில் தங்கியிருக் கின்றனர். அந்தக் கட்டடத்தின் உள்ளும் சுற்றியும், கிழிந்த பாய்களாலும் சேலை களாலும், உடைந்த மரத்துண்டுகளாலும் பாகம் பிரித்து, கூரை போட்டுச் சிறு அறைகள் அமைத்து வாழும் இந்த மக்களுக்குப் பெரிய சவாலாக இருப்பது `மொழி’ என நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலக வரைபடத்தில் இடமற்றவர்கள்!

நான்கே வருடத்தில் தமிழை உடைத்துப் பேச முடிகிற இந்த மக்களுக்கு, முஸ்லிம் தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற உள்ளூர் மக்களின் சந்தேகத்தை உடைப்பதுதான்  பெரும்பாடாக இருக்கிறது. அகதிகள் நலனுக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட எந்தச் சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிராத இந்தியாவுக்கு வந்து சேரும் வெவ்வேறு நாட்டு அகதிகளில் ஒப்பீட்டளவில்  அரசியல் ஆதரவு பெற்றவர்கள் திபெத் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள்தாம். தமிழகத்தில், ஓரளவு அடிப்படை உரிமைகளும், ஊடகக் கவனமும் பெற்ற ஈழத்தமிழ் அகதிகளின் நிலையே சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனும்போது, ரோஹிங்கியா மக்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கும் என்பதை நீங்கள் யூகிக்கலாம்.

அவர்களால் சிறிய அளவில் நடத்தப்படும் மதரஸாவில் குரான் படிப்பித்துக்கொண்டிருக்கும் முஹம்மது  ஹுசைன், மியான்மரில் அவர்களின் மதரஸா கொளுத்தப்பட்டதையும், குடும்பத்தார் அவரின் கண் முன்னே வெட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தபோது, அவரின் கண்கள் எங்கேயோ நிலைகுத்தியிருந்தன. விவசாயத்திலும், ஏரி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டிருந்த ரோஹிங்கியா மக்களுக்கு, மியான்மரில் கல்வி வாய்ப்புகள் அறவே  மறுக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்குக் கல்வி என்றால் குரான்தான்; பள்ளி என்றால் மதரஸாதான்.

சென்னையில், சமூக ஆர்வலர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கட்டாயப்படுத்தியும்  ரோஹிங்கியா குழந்தைகளை இழுத்துக்கொண்டு போய் பள்ளியில் விட்டாலும், மொழிப் பிரச்னையாலும் அந்நியப்படுத்தலாலும் படிப்பைத் தொடராமல் நின்றுவிடுகின்றனர்.

குப்பை பொறுக்குவதில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிப்பதாகச் சொல்லும் யூசுப்புக்கு, மூன்று குழந்தைகள். கலாசாரரீதியாகக் குடும்பக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லாததால், சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து முதல் ஏழு குழந்தைகள் வரை இருக்கிறார்கள். மியான்மரில் முஸ்லிம்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், அரசாங்கத்துக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டுமாம். மீறித் திருமணம் செய்தாலோ, பிள்ளை பெற்றுக்கொண்டாலோ, அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காகவே யூஸுப்பின் குடும்பம் மியான்மரிலிருந்து வெளியேறியிருக்கிறது.

ரோஹிங்கியப் பெண்கள், பெரும்பாலும் இறுகியவர்களாக, பேச மறுப்பவர்களாக, புகைப்படம் எடுக்கப்படுவதற்குக்கூடத் தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வயதுக்கு வந்தவுடனேயே திருமணம் செய்துகொள்வதும், பிள்ளை பெற்றுப் போடுவதும், சமைப்பதும், கழுவுவதும், முக்காட்டுக்குள் ஒளிந்து கொள்வதுமாய் இருப்பதால், பெண்கள் குரலற்றவர்களாகவே நீடிக்கிறார்கள். தேசம் இருந்தும், இல்லாமலிருந்தும் இதே நிலைமைதான்.

இரண்டு நாளுக்கு முன் தன் 10 வயதுக்  குழந்தையுடன் தரைவழியாகவே மியான்மரி லிருந்து சென்னை வந்து சேர்ந்திருக்கும் ருக்கியா பேகம், தன் கதையைச் சொன்னதில் தொற்றிய நடுக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை.

போக்குவரத்துத் தொழில் செய்ததால் சற்று வசதியாக இருந்த ருக்கியாவின் கணவர் நோய்வாய்ப்பட, அவருக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்பு மியான்மரில் மறுக்கப்பட்டு இறந்து போயிருக்கிறார். விரக்தியிலும் பீதியிலும் 10 வயதுப் பெண் குழந்தையோடு மலைவழிப் பாதைகளில் ராணுவத்தின் பார்வையில் விழாமல் பதுங்கிப் பதுங்கி நடந்தே பங்களாதேஷுக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் நதிவழி, கடல்வழியே பயணித்து இந்திய எல்லையைக் கடப்பதற்குத் தன் நகைகளைக் கையூட்டாகத் தந்து ஒடிசா வந்தடைந்து, சென்னையில் இருக்கும் தன் சகோதரனை வரவழைத்துச் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

முதல் சந்திப்புக்குப் பிறகு, பக்ரீத்துக்கு அவர்களால் அழைக்கப்பட்டு ரோஹிங்கியா மக்களைப் பார்க்க மீண்டும் சென்றேன். உடைமைகள் என்று எதுவுமே இல்லை யென்றாலும், ஈகை கொடுக்க மனம் இருந்தது. கூட்டுச் சமையலறையில் சமைக்கப்பட்ட உணவை, அவர்களின் குடிசைகளைச் சுற்றியிருக்கும் தேநீர்க் கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும், பழவண்டிக்காரர்களுக்கும் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். சின்ன ஹோட்டல் வைத்திருக்கும் எஸ்தர் அக்கா, ``எந்த நிலையிலும் கொடை தர்ற மனுஷங்க மாதிரி, இருக்கப்பட்டவங்க யாருமே இல்ல” என்று சொல்லிக்கொண்டே பக்ரீத் பரிசுகளைக் கொண்டுவந்த ரோஹிங்கியக் குழந்தைகளை வாரி முத்தமிட்டார். உள்ளூர் போலீஸ் வந்தது. அவர்களுக்கும் பிரியாணி பார்சல்கள் தரப்பட்டன.  ``ஆடு வெட்டுவதைப் புடைப்படம் எடுக்க வேண்டாம். வெளியில் தெரிந்தால், மாட்டைக் கொல்கிறோம் என நினைத்து எங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்று என்னிடம் அவர்கள்  கேட்டுக்கொண்டபோது, அதிர்ச்சியும் வெட்கமும் கோபமுமாய் இருந்தது. இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பதற்றத்தில் இதயம் வேகமாய் அடித்துக்கொண்டது!