Published:Updated:

இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?

இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?
பிரீமியம் ஸ்டோரி
News
இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?

இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?

ட்டினியைப் பரிசளித்து அமல் ஹுசைனின் உயிர் பறிக்கப்பட்டபோது, அவளது அந்த நிலைக்குத்தியக் கண்களைப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. தான் இறந்த அந்தக் கடைசி நொடியில் என்ன நினைத்திருப்பாள் அமல்? எதற்காக, தான் இறக்கிறோம் என்று தெரியாமலேயே தனது உயிரை விட்டிருக்கிறாள் அமல். அமெரிக்கா, அரேபியா உட்பட உலகின் மொத்த ஏகாதிபத்தியத்தையும் குற்றவுணர்ச்சிக்கொள்ள வைக்கும் குறியீடாக மாறியிருக்கிறாள் எலும்புக்கூடாய் உடலுருக்கி இறந்த அமல்!

ஒரு காலத்தில் உலகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புராதன நாடாக இருந்த ஏமன் இன்று சூடான், சோமாலியாவுக்கு அடுத்தபடியாக மிகக்கொடிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்று ஐ.நா-வால் அறிவிக்கப்படக்கூடிய பரிதாப நிலையில் உள்ளது. 2004-ல் மதகுரு ஹுசைன் அல் ஹௌதி தலைமையின் கீழ் செயல்பட்ட ஷியா பிரிவினர், ஆட்சியில் இருந்த சன்னி பிரிவின் தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது, அது ஏமனை இந்த அளவுக்குப் பாதிக்கும் என்று யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.

இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?

2017-ல் அரேபியா தலைமையிலான கூட்டணி, ஹௌதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டுப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படைகள் வான் மற்றும் கடல் வழிகளைக் கட்டுப்படுத்தியதால், உணவுப்பொருள்கள் கொண்டுசெல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. இதனால், கடும் உணவுப்பஞ்சம் எற்பட்டது. அரசு அலுவலர்கள் முதல் கூலித்தொழிலாளர்கள் வரை ஒருவேளை உணவுக்காக வீதியில் அலைகின்றனர். உணவுப்பஞ்சத்தால் குழந்தைகள் கண் முன் இறப்பதைத் தடுக்க முடியாமல் பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர். இருபது லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ‘எங்களிடம் ஆயுதம் இல்லை. இங்கு ராணுவத்தளம் இல்லை. எதிர்க்கும் சக்தியும் இல்லை. ஆனாலும், கூட்டுப்படை எங்கள்மீது ஏன் தாக்குதல் தொடுக்கிறார்கள் என்று புரியவில்லை’ என்று ஏமன் மக்கள் கதறியது எவர் காதுகளையும் எட்டவில்லை.

இதற்கெல்லாம் உச்சமாக அங்கு மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால், ஏழே வயதான சிறுமி அமல் ஹுசைன் உயிரை இழந்த சம்பவம் உலகையே உறைய வைத்திருக்கிறது. ஏமன் நாட்டில் தொடரும் உள்நாட்டுப் போரின் கொடூர விளைவுகள், உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்ததற்கு முக்கியக் காரணம் சிறுமி அமல் ஹுசைன்தான். நான்கு மைல் தொலைவில் மருத்துவமனை இருந்தும், ‘என் மகளை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல என்னிடம் பணம் இல்லை. அகதிகள் முகாமில் ஒரு வாரமாக அவதிப்பட்டு என் கண் எதிரிலேயே அவள் உயிர்விட்டாள்’ என்று சிறுமியின் தாயார் கதறியது உலக மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.

ஏமன் - அரேபியா எல்லையில் உள்ள சாடா என்ற பகுதியில் வாழ்ந்த அமலின் குடும்பம் குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க, பக்கத்து ஊரிலுள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தது. ஒருவேளை உணவுகூட வாங்க முடியாமல் அக்குடும்பம் தவித்ததால் பட்டினியால் துவண்ட அமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டாள். முதல்உதவிக்காக அகதிகள் முகாமில் உள்ள மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு மருந்துகள் தீர்ந்து போய் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. முகாம் மருத்துவர்கள் அவளை மேல் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அந்த ஏழைத் தாயால் மருத்துவமனைக்கு அமலை அழைத்துச்செல்ல முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்?

அமலைப்போல, கிட்டத்தட்ட 40,000 குழந்தைகள் ஏமன் நாட்டில் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் சேவைக்காக உயிர்தேக்கிக் காத்திருக்கிறார்கள்.

‘2015-ம் ஆண்டில் ஏமனில் தீவிரமடைந்த உள் நாட்டுப் போரால், இன்றுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஆறாயிரத்துக்கு அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்’ என ஐ.நா-வின் அறிக்கை தெரிவிக்கிறது. ‘பட்டினியால் 1.3 கோடி மக்கள் அவதிப்படுகின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட 18 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. மருத்துவச் சேவை முற்றிலும் செயலிழந்துவிட்டது’ என யுனிசெப் மண்டல இயக்குநர் கீத் கெப்ளர் சமீபத்தில் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஒவ்வோர் ஆண்டும் 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றன.

ஏமனில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா சபை எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அரேபியா - அமெரிக்கப் பொருளாதார வர்த்தக உறவுகள் பலப்பட்டதால் அரேபியாவின் எல்லைமீறல்கள் கண்டுகொள்ளப்படவில்லை. சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகள், அமெரிக்காவை அரேபியா மீதான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவைத்துள்ளன. எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கவும் இடைத்தேர்தல் முடிவுகளை நினைவில் கொண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘சவுதி தலைமையிலான கூட்டணி, விமானத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். ‘ஒருமாதத்துக்குள் நடைபெற உள்ள ஐ.நா தலைமையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும்’ என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் என்.மாட்டிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ‘உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டும் போதாது; மக்களை மையமாகக் கொண்ட அரசாங்க அமைப்பை உருவாக்குவதும் முக்கியம்’’ என்கிறார் ஏமனுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதர் மார்ட்டின் க்ரிஃபித்ஸ்.

தற்போது சவுதி அரேபியா, ஹொடேய்டா துறைமுக நகரத்தைக் கைப்பற்ற பத்தாயிரம் துருப்புகளை அனுப்பியுள்ளது. சமீப வான்வழித் தாக்குதல்களில் இருபது ஹௌதிப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹொடேய்டா துறைமுகம் வழியாகத்தான் ஏமனின் 70 சதவிகிதப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வழியும் அடைக்கப்பட்டால் உணவுப் பற்றாக்குறை அதிமாகும்.

அமைதியை நிலைநாட்டுவதில் ஏற்படும் காலதாமதம், குழந்தைகளின் உயிரிழப்புகளை அதிகரிக்கத்தான் செய்யும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையைச் சந்திக்கும் ஈரான், எவ்வளவு தூரம் இதற்கு ஒத்துழைக்கும் என்பதும் தெரியாது. ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்பு என்பது ஏமனின் அமைதிக்காக அமெரிக்கா முன்னெடுக்கும் ஓர் அர்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்குமா அல்லது முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்ததைப்போல இதுவும் அரசியல் நாடகமா என்று சந்தேகிக்கின்றனர் நிபுணர்கள்.

அமலின் உயிரிழப்பு, ஏமனின் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும்!

- கே.ராஜு