Published:Updated:

`இயற்கையை பயமுறுத்தும் நெகிழி!’ - துப்புரவுப் பணியாளர்களைப் பெருமைப்படுத்தும் பாடல்

`இயற்கையை பயமுறுத்தும் நெகிழி!’ - துப்புரவுப் பணியாளர்களைப் பெருமைப்படுத்தும் பாடல்
`இயற்கையை பயமுறுத்தும் நெகிழி!’ - துப்புரவுப் பணியாளர்களைப் பெருமைப்படுத்தும் பாடல்

இயற்கையை பயமுறுத்தும் ஆறாவது பூதம்தான் நெகிழி. நெகிழியின் தீமையை தத்ரூபமாகப் பாடல் ஆக்கியிருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார். நாம் பூமியை குப்பை ஆக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் துப்புரவாளர்கள்தான் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களைப் பெருமைப்படுத்தவேண்டும் என்று யூடியூப் பதிவைத் துப்புரவுத் தொழிலாளர்கள் வெளியிட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி (துவரங்குறிச்சி) அலுவலகத்தில் செயல் அலுவலர் சாகுல்ஹமீது, டாக்டர் ராஜசேகரன் தலைமையில் பள்ளி மாணவிகள் குறுந்தகட்டை வெளியிட இதன் யூடியூப் பதிவைத் துப்புரவுத் தொழிலாளர்கள் வெளியிட்டனர். நெழிகி ஒழிப்பு விழிப்பு உணர்வு பாடலை ஷைனி மற்றும் ஜார்ஜ் ஆகியோர் பாட ஈரோடு சாம் இசையில் இசையமைத்து இருந்தார் மடைவாசல் குழுவைச் சேர்ந்த காட்வின், ஆம்ஸ்ட்ராங், பிரபாகர், கார்த்திசாலமன், சுசி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 

நடிகர், பாடலாசிரியர் எம்.எஸ்,மதுக்குமார் பேசுகையில், ``நீர், நிலம், ஆகாயம், மற்றும் பூமின்னு இயற்கையின் ஐந்து பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம்தான் பிளாஸ்டிக். ஒரு நெகிழிப் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். கடலில் மிதந்துகொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவிகிதம் நெகிழியே!. தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக்கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக்கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுகள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம். எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுப்பொருள்களை கண்டுபிடிப்பதிலும்

சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கப் பழகுவோம். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்பாடலை எழுதினேன். இதைப் பாடலாக நினைத்துக் கடந்து செல்லாமல் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் உங்களிலிருந்து மாற்றங்கள் பிறக்கட்டும்’’ என்று முடித்தார்.