அலசல்
சமூகம்
Published:Updated:

அகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்!

அகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்!

அகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்!

புகலிடம் தேடிவருபவர்களை கொடூரமாக நடத்தும் அமெரிக்கா உள்ளிட்ட பல பணக்கார நாடுகள், ‘அகதிகள் இடம்பெயர்வு நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது நாங்கள்தான்’ என்று அலறுகின்றன. “ஆனால், அது அப்பட்டமான பொய். உலகம் முழுவதும் இடம்பெயரும் அகதிகளின் நெருக்கடிகளைத் தாங்கிக் கொண்டு, அவர்களுக்குப் புகலிடமும் பாதுகாப்பும் கொடுப்பது வளரும் மற்றும் ஏழை நாடுகள்தான்” என வல்லரசுகளின் முகமூடியைக் கிழித்துள்ளது ஐ.நா-வின் ஆண்டறிக்கை.

சில ஆண்டுகளுக்கு முன், துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய ஏலான் என்ற நான்கு வயது சிறுவனின் சடலம் அகதிகளின் இடப்பெயர்வு பிரச்னையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது. வீடு, வாழ்விடம், உறவு என அனைத்தையும் இழந்து, பட்டினியால் வாடி... உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு, அண்டை நாட்டு எல்லைகளில் காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு, பாதுகாப்பு மட்டுமே. அவர்களுக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பது பணக்கார நாடுகள் அல்ல என்பதுதான் ஐ.நா-வின் உலகளாவிய ஆண்டறிக்கையின் முக்கிய அம்சம்.

உலகம் முழுவதும் சொந்த நாட்டைவிட்டு இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7.07 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பாதி பேர் குழந்தைகள். அகதிகள் 2.59 கோடி; உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த வர்கள் 4.13 கோடி; அடைக்கலம் வேண்டி காத்திருப்பவர்கள் 35 லட்சம் பேர். ‘இரண் டாம் உலகப்போருக்குப்பின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடம்பெயர்தல் இதுதான்’ என்கிறது அந்த அறிக்கை.

அகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்!

சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்குச் சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து மட்டுமே மூன்றில் இரண்டு பங்கு அகதிகள் வெளியேறியுள்ளனர். வெனிசூலாவிலிருந்து 40 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். கடந்த 2012-15-ல் தான் இடம்பெயர்தல் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் சிரியாவின் உள்நாட்டுப் போர். இனக்கலவரம், வன்முறை, அடக்குமுறை, உள்நாட்டு மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், கொடூர துன்புறுத்தல்கள் ஆகியவை மற்ற காரணங்கள்.

“சராசரியாக ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் 37,000 பேர் இடம்பெயர்கிறார்கள். ‘ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில்தான் அகதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது’ என்று கூறுவதில் உண்மை இல்லை. பெரும்பாலான அகதிகள் யுத்தம் நடக்கும் இடத்துக்கு அருகிலிருக்கும் நாடுகளில்தான் தஞ்சம் புகுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அவற்றில் பெரும்பாலானவை ஏழை அல்லது வளரும் நாடுகள். அகதிகள் யாரும் விருப்பப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. வாழும் சூழல் அழிக்கப்பட்டதால், வேறு வழியின்றி வெளியேறுகிறார்கள்” என்கிறார் அகதிகளுக்கான ஐ.நா-வின் ஹை கமிஷனர் ஃபிலிப்போ க்ராண்டி.

நாட்டைவிட்டு வெளியேறும் அகதிகளுக்குக் கிடைக்கும் ஒருசில வசதிகள்கூட, உள்நாட்டில் இடம்பெயர்பவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தங்கள் சொந்த நாட்டில் வறுமையிலும் பட்டினியிலும் உழல்கின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர், சோமாலியாவில் இருக்கின்றனர். “சர்வதேச சமூகத்தால் உலகில் அமைதியை நிலைநாட்ட இயலவில்லை என்பதைத்தான் இது உறுதி செய்கிறது” என்கிறார் ஐ.நா அகதிகள் நிறுவனமான யு.என்.ஹெச்.சி.ஆரின் மாத்யூ சால்ட்மார்ஷ்.

குடியேறிகள் பிரச்னையைப் பூதாகரமாகச் சித்திரிக்கும் வல்லரசுகள், இடம்பெயர்பவர்களுக்கு மறுகுடியேற்றம் வழங்குவதைக் கடந்த 2018-ம் ஆண்டில் பாதியாகக் குறைத்துவிட்டன. அவர்களுக்கு அகதி என்கிற அந்தஸ்தைக்கூட வழங்க முன்வருவதில்லை. கடந்த ஆண்டில், வெறும் ஏழு சதவிகிதப் பேருக்குத்தான் மறு குடியேற்ற உரிமை வழங்கப்பட்டது.

தற்போது, இடம்பெயர்ந்தவர்களில் 80 சதவிகிதம் பேர் 127 வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ளனர். உலகில் அதிக அகதிகளை வரவேற்ற நாடுகளில் துருக்கியும் ஒன்று (35 லட்சம்). நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்கூட 14 லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இனக் கலவரத்தால் சீரழிந்து கிடக்கும் உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் 22 லட்சம் அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன. லெபனானில் ஆறு பேரில் ஒருவர் அகதி. இங்கிலாந்து 6,000 குடியேறிகளை 2020-ல் அனுமதிப்பதாக அறிக்கை மட்டுமே விட்டுள்ளது. அமெரிக்கா எட்டு லட்சம் குடியேற்ற விண்ணப்பங் களைப் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.

மெக்சிகோவை மிரட்டி, குடியேறிகளின் வருகையை தடுத்த அமெரிக்காவையும் இந்தப் பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடும் ஐரோப்பிய தலைவர் களையும் வன்மையாகக் கண்டித்திருக்கும் க்ராண்டி, “அரசியல் சூதாட்டத்துக்குக் குடியேறிகளின் பிரச்னையைப் பகடைக்காய் ஆக்க வேண்டாம்.அகதிகளைக் குடும்பத்துடன் வாழவைக்க முயற்சிசெய்தல், சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் இருக்கும் தடைகளை உடைத்தல், சாதகமான சூழலை உருவாக்கு தல்... இவையே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். பணக்கார நாடுகளின் பங்கு இதில் அதிகமாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

குடியேறிகளைத் தடுக்கச் சுவர் எழுப்புவதுடன் குழந்தைகளையும் பெற்றோரையும் தனித்தனியே பிரித்துவைக்கும் கொடூர மனநிலையில் இருக்கும் ட்ரம்ப் போன்ற தலைவர்களிடம் எப்படி நிரந்தரத் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

- கே.ராஜு