இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான `Marion Biotech’ உற்பத்தி செய்யும் டாக் -1 மேக்ஸ் (Doc -1 Max) என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஆப்பிரிக்காவின் காம்பியாவில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள், இறந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை கூறுகையில், ``குழந்தைகள் அதிகப்படியான இருமல் மருந்தை எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த மருந்துகளில் எத்திலீன் கிளைகால் (Ethylene Glycol) இருந்துள்ளது. சுவாச நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருந்தை எடுத்துக்கொண்ட 21 குழந்தைகளில் 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமாக இம்மருந்து வழங்கப்பட்டுள்ளது. இறந்த குழந்தைகள் 2.5 - 5 மில்லி மருந்தை 2 - 7 நாள்களுக்கு, தினமும் 3 முதல் 4 வேளை எடுத்துள்ளனர். பார்மசியில் இருந்து இந்த மருந்து தவறுதலாகப் பரிந்துரைத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே குழந்தைகளின் நிலைமை மோசமடைந்ததற்கு காரணம்.

ஆரம்பகட்ட ஆய்வகச் சோதனையில், டாக் -1 மேக்ஸ் சிரப்களில் எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டது. இது நச்சுத்தன்மை உடையது. 95 சதவிகித செறிவூட்டபட்ட கரைசலில் 1- 2 மில்லி/கிலோ எடுத்துக்கொள்வதுகூட நோயாளியின் ஆரோக்கியத்தில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாந்தி, மயக்கம், வலிப்பு, இதய பிரச்னைகள் மற்றும் தீவிர சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
டாக் -1 மேக்ஸ் மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் நாட்டின் அனைத்து மருந்தக விற்பனையில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றன’’ எனத் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள், இரண்டாவது முறையாக இறந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.