Published:Updated:

`2007ம் ஆண்டு போர்ச்சுகலில் மாயம்; சர்வதேசத் தேடல்!’- 13 ஆண்டுகளாக மகளைத் தேடும் பிரிட்டிஷ் தம்பதி

சிறுமியின் பெற்றோர்
சிறுமியின் பெற்றோர் ( AP )

``மேடெலினை உயிருடன் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை ஒருபோதும் தளரவிடமாட்டோம். அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை.”

போர்ச்சுக்கல்லில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மூன்று வயதான மேடெலின் மெக்கான் என்ற பிரிட்டிஷ் சிறுமி காணாமல் போனார். தனது குடும்பத்துடன் போர்ச்சுக்கல்லில் உள்ள அல்கார்வே பகுதியில் விடுமுறையைக் கழிக்கச் சென்றபோது, அவரது படுக்கை அறையிலிருந்து சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அப்போது, மெக்கானின் பெற்றோர்கள் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. உலகின் பல நாடுகளிலும் சிறுமி குறித்த தகவல்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. `சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவரை கடத்தியவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்’ என்றும் குரல்கள் கடுமையாக ஒலித்தன.

சிறுமி
சிறுமி
AP

சர்வதேச அளவில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இந்தச் சிறுமியின் வழக்கு தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ப்ரவுன்ஷ்வெக் மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் ஹான்ஸ் கிறிஸ்டியன் வால்டர்ஸ், ``மேடெலின் மெக்கான் இறந்துவிட்டதாக நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஜெர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரை ப்ரவுன்ஷ்வெக் அரசு விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழிந்த பிறகும் இதுவரை சிறுமியின் உடல்கூட கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனி அரசு இதனை அறிவித்தாலும், சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் எங்காவது உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருந்துவருவதாகக் கூறுகின்றனர்.

Vikatan

ஜெர்மனி காவல்துறை தரப்பில், ``சரியாக என்ன நடந்தது என்பது இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. எனினும், குழந்தையைக் கடத்தியவர்கள் பாலியல் நோக்கத்துடன் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். குற்றவாளி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழையும்போது சிறுமி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவளைக் கடத்த வேண்டும் என அந்த நிமிடத்தில்கூட முடிவை எடுத்திருக்கலாம்” என்று கூறியுள்ளனர். காவலர்கள் இதனை சந்தேகத்திற்கு உரிய கொலை எனக் கருதுவதாகக் கூறினர். ஆனால், பிரிட்டிஷ் காவலர்கள் இதனைக் காணாமல் போன நபரின் வழக்காகவே கருதி விசாரித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஜெர்மனியைச் சேர்ந்த அந்தக் குறிப்பிட்ட நபர் மிகவும் சந்தேகத்துக்கு உரியவர் எனச் சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர்களான கேட் மற்றும் கேர்ரி ஆகியோர் பேசும்போது, ``எங்களுடைய விருப்பம் எல்லாம் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இதுதொடர்பான உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும். எங்கள் மகளைக் கடத்தியவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். மேடெலினை உயிருடன் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை ஒருபோதும் தளரவிடமாட்டோம். அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் அமைதியை அடைய வேண்டும் என்றால் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்

சிறுமியின் பெற்றோர்
சிறுமியின் பெற்றோர்

பெயர் குறிப்பிடப்படாத சந்தேகத்துக்கு உரிய அந்த நபர் 1995-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அல்கார்வேயில் வசித்து வந்துள்ளார். அங்கு கேட்டரிங் துறை, ஹோட்டல்கள், ஹாலிடே ஃபிளாட்கள் போன்றவற்றில் பணியாற்றி வந்துள்ளார். போதைப்பொருள் விற்பனையிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக ஜெர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் தற்போது வேறு சில வழக்குகள் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேடெலின் மாயமான 2007ம் ஆண்டு மே 3-ம் தேதி போர்ச்சுக்கல் தொலைபேசி எண்ணிலிருந்து ஜெர்மனியில் உள்ள இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படாத ஒரு நபருக்கு அழைப்பு வந்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தல் தொடர்பாகச் சந்தேகத்திற்கு உரிய வகையிலான கார்களின் புகைப்படங்களையும் காவலர்கள் வெளியிட்டனர். இந்த கார்களின் பதிவு எண்கள் ஜெர்மனியைச் சேர்ந்தது என்கிறார்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். மாயமான சிறுமி குறித்த தகவல் கிடைத்தால் பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியிலிருந்து வந்த போன் கால்; காணாமல் போன சிசிடிவி வீடியோ! - இறந்த மகளுக்கு நீதிகேட்டுப் போராடும் பெற்றோர்
அடுத்த கட்டுரைக்கு