Published:Updated:

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு : தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் ஏன் அழிக்கப்பட்டது?

எரிக்கப்பட்ட யாழ் நூலகம்
எரிக்கப்பட்ட யாழ் நூலகம்

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது.

தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981-ம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் பல இடங்களிலிருந்து காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் ஒன்றாம் தேதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. ஆம், சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன!

தொடக்கம்

1930-களில் யாழ்ப்பாணத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்ந்த கே.எம்.செல்லப்பாவின் மனதில் உதித்த எண்ணம்தான் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கான அடிப்படை. தன்னுடைய சொந்த சேகரிப்பிலிருந்த நூல்களையும், பத்திரிகைகளையும் கொண்டு, 1933-ல் வாடகை நூலகம் ஒன்றை தன்னுடைய வீட்டிலிருந்தே தொடங்கிய செல்லப்பா, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார்.

அதைத் தொடர்ந்து நகரின் மற்ற முக்கியப் பிரமுகர்களின் ஆலோசனையின் பேரில், 1934 ஆகஸ்ட் 1 அன்று யாழ்ப்பாண பொது மருத்துவமனை சாலையில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொதுசன நூலகம் தொடங்கப்பட்டது; ஒருகட்டத்தில் இங்கு இட நெருக்கடி ஏற்படவே, 1936-ல் நகரக் கட்டடம் அமைந்துள்ள டவுன் ஹாலுக்கு அருகே நூலகம் மாற்றப்பட்டது.

யாழ் நூலகம்
யாழ் நூலகம்

தொடங்கப்பட்ட தினத்திலிருந்தே நூலகம் மிக வேகமாக வளரத் தொடங்கியது. பாதிரியார்கள் லோங், டேவிட் உள்ளிட்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினரும் நூலகத்துக்கான நிரந்தமான நவீனக் கட்டடம் ஒன்றை உருவாக்க முயன்றனர். கட்டடக் கலைஞர் வி.எம். நரசிம்மன் கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுக்க, யாழ் நூலகம் சர்வதேசத் தரத்தை எட்டுவதற்கான ஆலோசனைகளை இந்திய நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதன் வழங்கினார். 1953-ல் நூலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, திராவிடக் கட்டடக் கலையில் அமைந்த புதிய நூலகக் கட்டடம் 1959 அக்டோபர் 11 அன்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்த ஆல்ஃபிரட் துரையப்பா நூலகத்தைத் திறந்துவைத்தார்.

நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி 1967-ல் தொடங்கப்பட்டது; உரைகள், கருத்தரங்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக நிகழ்வரங்கம் ஒன்று 1971-ல் திறக்கப்பட்டது. உலகம் முழுவதும் தனி நபர்கள், அயல் தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கின; நூலகக் குழுவும் அரிய நூல்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது; யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடமும் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் போன்றவை இங்குப் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.

ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள்
1585-ல் கத்தோலிக்க மதத் தலைவர்களால் தமிழில் எழுதப்பட நூல்கள், கண்டி சிறையிலிருந்தபோது ராபார்ட் க்னாஸ் எழுதிய ‘History of Ceylon' நூலின் பிரதி, முதலியார் ராசநாயகத்தின் 'பண்டைய யாழ்ப்பாணம்', தமிழின் முதல் இலக்கியக் கலைக்களஞ்சியமான முத்துத் தம்பிப் பிள்ளையின் ‘அபிதான கோசம்', சிங்காரவேலு முதலியார் தொகுத்த ‘அபிதான சிந்தாமணி’ ஆகியவற்றின் பிரதிகள், சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் போன்ற எண்ணிடலங்காதவை இந்நூலகத்தின் சேகரிப்புகளாக விளங்கின.

சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுச் சமூகத்தால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுப் போற்றப்பட்டது; அதைவிட முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியாக யாழ் நூலகம் விளங்கியது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஓர் இனத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்த நூலகத்தைத்தான் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டு அழித்தனர். யாழ்ப்பாணம் நூலக எரிப்பு என்பது ஒரு தனி சம்பவமல்ல; அது இலங்கைத் தமிழர் பிரச்னையில், தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வு!

எரியும் நினைவுகள்

தமிழர் பண்பாட்டு வரலாற்றின் துயரங்களில் ஒன்றான யாழ் நூலக எரிப்பு பற்றிய ‘எரியும் நினைவுகள்’ என்ற ஆவணப்படத்தை எடுத்த ஈழத் தமிழரான சோமிதரன், நூலகம் எரிக்கப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு பிறந்தவர். தன்னுடைய பத்து வயதிலேயே முதல்முறையாக இதுபற்றி அறிய நேர்ந்த சோமிதரன், ஓர் ஊடகவியலாளராக உருவாகி யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய ஆவணப்படத்தை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் எடுத்து முடித்தார்.

எரிந்து நிற்கும் யாழ் நூலகம்
எரிந்து நிற்கும் யாழ் நூலகம்

“1991-ல் யாழ்ப்பாணக் கோட்டையை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். அப்போது கோட்டையில் துப்புரவுப் பணிக்காக உயர்நிலைப் பள்ளியளவில் இருந்த மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை இருந்ததால், பெட்ரோல் டீசல் எதுவுமின்றி வாகனங்கள் ஓடவில்லை. புலிகளின் தேவைக்காக மட்டும் மண்ணெண்ணெய் கொண்டு சில வாகனங்கள் இயக்கப்பட்டன. அப்படியான ஒரு பேருந்து மாணவர்களை அழைத்துச் செல்ல வந்தபோது, என்ன ஏதென்று அறியாமல் பேருந்தில் பயணிக்கும் ஆசையில் நானும் என் நண்பனும் ஏறிக் கொண்டோம்.

நாங்கள் கோட்டைக்குள் சென்றோம். நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்ததால் எங்களைத் துப்புரவு பணியில் ஈடுபடுத்தாமல், மரத்தடியில் போராளிகள் அமரச் செய்தனர். அப்போதுதான் அருகிலிருந்த மாளிகையைப் பார்த்தேன். அது என்ன என்று போராளி ஒருவரிடம் கேட்டபோது, ‘அதுதான் இயக்கத்தின் படைத்தளம்’ என்றார். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். வீட்டுக்கு வந்து அம்மாவிடம், ‘இங்கெல்லாம் வீடுகளில் தான் இயக்கத்தின் தளங்கள் இருக்கின்றன... யாழ்ப்பாணத்தில் மாளிகையில் தளம் அமைத்திருக்கிறார்கள்’ என்றேன். அதுதான் ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகமாக இருந்தது என்று அம்மா அப்போது எனக்குச் சொன்னார். யாழ்ப்பாண நூலகம் பற்றி நான் முதன்முறையாக அறிந்தது அப்போதுதான்!” என்று யாழ் நூலகம் பற்றி முதன்முறையாகத் தான் அறிய நேர்ந்த கதையை விவரிக்கிறார் சோமிதரன்.

சோமிதரன்
சோமிதரன்

“என்னுடைய பத்தாம் வயதில்தான் எரிந்து நின்ற யாழ்ப்பாண கட்டடத்தை முதன்முதலாகப் பார்த்தேன். எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

“யாழ் நூலக எரிப்பு என்பது ஓர் இனப்பிரச்னையின் பகுதி கிடையாது; உலக தமிழர்களின் சொத்தாகத் திகழ்ந்த அந்த நூலகத்துக்குப் பெரும் வரலாறு இருக்கிறது. 15-ம் நூற்றாண்டில் மதுரையில் முகமதிய படையெடுப்பின்போது, அங்கிருந்த சுவடிகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை வல்லங்களில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்; சிலப்பதிகாரத்தின் மூலப் பிரதியை உ.வே.சாமிநாதர் யாழ்ப்பாணத்திலிருந்துதான் எடுக்கிறார்; பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் அவை பாதுகாக்கப்பட்டன. அது தமிழர்களின் பண்பாட்டு மையம், அறிவுத் தேடலின் அடையாளம்” என்று யாழ்ப்பாணத்தின், அதன் நூலகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சோமிதரன் விளக்குகிறார்.

யாழ் நூலகம்
யாழ் நூலகம்
MAHI
“1983 கருப்பு ஜூலை கலவரத்துக்கு முன்பே தமிழர்களின் உளவியல் மீதான தாக்கம் தான் யாழ்ப்பாண நூலக எரிப்பு. 1983-க்குப் பிறகுதான் ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்களில் இணைந்தார்கள். ஆனால், அதற்கு முன்பே இளைஞர்களின் உளவியலில் ஆழமாகத் தாக்கத்தை இந்த நூலக எரிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்; கைகளிலிருந்து புத்தகங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்படும்போது, அவர்கள் ஆயுதம் ஏந்துவதன் நியாயத்தை அந்த நூலக எரிப்பு சொல்லியது. எரிந்து நின்ற அந்தக் கட்டடம் ஈழப்போராட்டத்தின் நியாயத்தைச் சொல்லியது; அதற்குச் சாட்சியாக நின்றது!” என அச்சம்பவத்தின் அரசியல் வெளிப்பாடுகளாகச் சோமிதரன் பார்க்கிறார்.

எரிக்கப்பட்ட யாழ் நூலகக் கட்டடத்தை இலங்கை அரசாங்கம் 2003-ல் புதுப்பித்து, திறக்க முயன்றது. ஆனால், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு எந்த விழாவும் இன்றி, எதிர்ப்புகளை மீறி நூலகம் செயல்படத் தொடங்கியது. கண் முன்னே ஒரு வரலாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு சோமிதரன் அதை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

“அது வெறும் நூலகக் கட்டடம் மட்டுமல்ல; 25 ஆண்டுக்கால ஈழப் போராட்டத்தின் சாட்சி. 97 ஆயிரம் புத்தகங்களை இழந்து நின்ற அந்த நூலகம் பிறகு புலிகளின் தளமாகவும் இருந்திருக்கிறது. யாழ் நூலகம் இருந்தபோதும் ஓர் அரசியல், எரிக்கப்பட்டதிலும் ஓர் அரசியல், அதைப் புதுப்பிப்பதிலும் அரசியல் என இன்றுவரை அதைச் சுற்றி அரசியல் இருக்கிறது. இந்த வரலாறு, அரசியல் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினேன். அப்போது பத்திரிகையாளராக இருந்த நான், ‘கலாசார படுகொலை’ என்று இதுபற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினேன். தொடர்ந்து ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினேன்.

ஆவணப்படம் எடுக்கத் தயாரானபோது ஈழத்தில் மறுபடியும் போர் மூண்டுவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வழியே இல்லாமல் போய்விடும் என்பதால், என்ன நடந்தாலும் சரி எனச் செயலில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தேன். எதிர்காலத்தில் யாராலும் அந்த வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் போய்விடலாம் என்ற அச்சத்தில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ‘எரியும் நினைவுகள்’ ஆவணப்படத்தை எடுத்து முடித்தேன். அது இப்போது யூடியூப்பில் காணக்கிடைக்கிறது” என்று ஆவணப்பட அனுபவங்களைப் பகிர்கிறார் சோமிதரன்.

யாழ் நூலகம் இன்று
யாழ் நூலகம் இன்று
Anton Croos
“வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நூலகத்தைப் புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக் கொண்டுவந்திருப்பது நல்ல நோக்கமாக இருந்தாலும், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது. இன்று யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் எவரும், புதுப்பிக்கப்பட்ட நூலகத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், எரிந்து நின்ற கட்டடம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தால் காலத்துக்கும் வரலாற்றுச் சாட்சியமாக இருந்திருக்கும். தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்” என மௌனமாகிறார் சோமிதரன்!
அடுத்த கட்டுரைக்கு