Published:Updated:

#CoronaOutbreak - அமெரிக்காவில் 7 லட்சம் பேர் வேலையிழப்பு!

Donald Trump  - அமெரிக்கா
Donald Trump - அமெரிக்கா ( AP / Alex Brandon )

கொரோனா தாக்கத்தின் விளைவாக மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 7 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் அதி தீவிரமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா. நாளுக்கு நாள் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்போதுவரை அமெரிக்காவில் 3,36,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் சுகாதார பாதிப்புகள் மட்டுமல்ல, கடும் பொருளாதாரப் பாதிப்புகளையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

கொரோனா தாக்கத்தின் விளைவாக மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 7 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலான வேலையிழப்புகள் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளிலும், அதற்கடுத்தபடியாகச் சில்லறை வர்த்தகத் துறையிலும் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடியால் 8 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அதன் பிறகு, இப்பொழுதுதான் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

`புதிதாக 29 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..' - எண்ணிக்கை அதிகரிப்பால் அதிர்ச்சியில் கோவை

அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் ஆணையம், வேலையின்மை 3.5 சதவிகிதத்திலிருந்து 4.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழில், மார்ச் 14-ம் தேதி, எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான மாநிலங்களில் மக்களை வீட்டிற்குள்ளேயே தங்கும்படி அறிவுறுத்துவதற்கு முன்பே உணவகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் எல்லாம் மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்தவாரம் மேலும் 6.6 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்மை கோரிக்கைகளைத் தாக்கல் செய்ததாக அமெரிக்கத் தொழிலாளர் துறை தெரிவித்தது.

America
America

மார்ச் மாதத்திற்கான வேலையிழப்புகள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான வேலையிழப்புகள் குறித்த செய்திகள் மே 8-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. 'கொரோனா தொற்று காரணமாக வணிகங்கள் தடைப்பட்டதாலும், மக்கள் வீட்டில் தங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் முதல் முறையாக 10 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை கோரிக்கைகளைத் தாக்கல் செய்யலாம்' எனச் சி.என்.என் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு