Published:Updated:

"விசாரணைக் கைதிகள் விநோத மரணம்... ஆக்கிரமிக்கப்படும் இணையச் சுதந்திரம்!" - சீனாவின் பிடியில் திபெத்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகத் திபெத்
சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகத் திபெத்

உலகில், இணையச் சுதந்திரத்தை மிக மோசமாகக் கட்டுப்படுத்தும் நாடாக சீனா இருந்துவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் அண்டை நாடான திபெத், சீனாவின் நேரடி ஆக்கிரமிப்பின்கீழ் இருந்துவருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் திபெத்தில் ஊடுருவிய சீன ராணுவம், இன்றுவரை அதைத் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. திபெத்தியர்களின் தலைவரான தலாய் லாமா அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். தர்மசாலாவில், நாடுகடந்த திபெத் அரசும் அதன் நிர்வாகமும் இயங்கிவருகின்றன.

மத்திய திபெத் நிர்வாகத்தின் தகவல் மற்றும் அயல்நாட்டு உறவுகள்துறை சார்பில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை திபெத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்தரங்குகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திவருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த திபெத் குறித்த உரையாடல்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த திபெத் குறித்த உரையாடல்

அதன் ஒரு பகுதி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் நடைபெற்றது. மத்திய திபெத் நிர்வாகத்தின் சார்பில் தக்தென் கீ மற்றும் தின்லே சூக்கி ஆகியோர் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

முதலில் பேசிய தக்தென் கீ, “சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அனைத்திலும் கையெழுத்திட்டுள்ள சீனா, அதை திபெத்தியர்களுக்கு வழங்குவதே இல்லை. திபெத்தில் மதச் சுதந்திரமே கிடையாது. திபெத் பௌத்த விகாரங்கள் சீனாவால் தொடர்ந்து இடிக்கப்பட்டுவருகின்றன. மிகச் சமீபமாக, 2016-ம் ஆண்டில் புகழ்பெற்ற லாருங் கர், யாசேன் கர் ஆகிய விகாரங்கள் இடிக்கப்பட்டுள்ளன. திபெத்தில் நடைபெறும் எந்தவோர் அத்துமீறல் குறித்த தகவலும் வெளியுலகிற்குத் தெரிய வராத அளவிற்கு இணையக் கட்டுப்பாடுகள் இருந்துவருகின்றன. உலகில், இணையச் சுதந்திரத்தை மிக மோசமாகக் கட்டுப்படுத்துகிற நாடாக சீனா இருந்துவருகிறது. பௌத்தர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தீம் பார்க்குளாக, பொழுதுபோக்கு கேளிக்கை இடங்களாக மாற்றப்பட்டுவருகின்றன. திபெத்தின் எந்தவொரு தனித்துவமான அடையாளத்தையும் விட்டுவைக்கக்கூடாது என்பதில் சீனா குறியாக உள்ளது” என்றார்.

தக்தேன் கீ மற்றும் தின்லே சூக்கி
தக்தேன் கீ மற்றும் தின்லே சூக்கி

அடுத்து பேசிய தின்லே சூக்கி, “மதச் சுதந்திரம் மட்டுமல்லாது திபெத்திய மாணவர்கள், திபெத் மொழியைப் படிப்பதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை சீனா விதித்துவருகிறது. சர்வதேச சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள சீனா, அதை வெளிப்படையாக மீறிவருகிறது. பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான சேர்க்கை மற்றும் ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ள மாணவர்கள் பலருக்கும் சீனா பாஸ்போர்ட் தர மறுக்கிறது. இதனால் பலரும் கல்வியே பெற முடியாமல் தவித்துவருகின்றனர். 'தேசப்பற்று கல்வி' என்கிற பெயரில் தலாய் லாமாவின் புகைப்படங்களில் காரி உமிழ்ந்து அவமதிக்குமாறு மாணவர்களை வற்புறுத்துகின்றனர். சீன அரசைப் புகழ்ந்தும் சீனப் பாசுரங்களைப் பாடச்சொல்லியும் திபெத்திய மாணவர்களை வற்புறுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீன அரசமைப்பில் சிறுபான்மையினரான திபெத்தியருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநிறுத்தக்கோரி, பெய்ஜிங்கை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்த செயற்பாட்டாளர் தாஷி வாங்சாக், சீன அரசால் கைதுசெய்யப்பட்டார். அமைதியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தவருக்கு, பிரிவினையைத் தூண்டினார் எனக்கூறி ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளனர். அரசால் விசாரணையே செய்யப்படாமல், சிறையில் சித்ரவதை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். திபெத்தின் உரிமைகுறித்துப் பேசுபவர்களெல்லாம் பிரிவினைவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். இந்தியாவிலுமே பேராசிரியர்கள், மாணவர்களை திபெத்தைப் பற்றி ஆய்வுகளும் கட்டுரைகளும் மேற்கொள்ள வேண்டாம் எனச் சொல்லிவருகின்றனர்” என்றார்.

பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்

திபெத்தின் கோரிக்கையை வலுயுறுத்திப் பேச இந்திய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். சீனாவை திபெத்தியர்களுடன் உரையாட கேட்டுக்கொண்டனர். மதச் சுதந்திரத்துடன் தன்னாட்சி கோரும் திபெத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து பேசுமாறும் கோரிக்கை விடுத்துச் சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு