Published:Updated:

`குழந்தை பயப்படுகிறான் என்று சொன்ன மறுகணம்..!’ -லெபனான் போராட்டக்களத்தில் நெகிழ்ந்த தாய் #ViralVideo

லெபனான் நாட்டின் நிலைமை இப்படி பரபரப்பாக இருக்க, லெபனான் போராட்டக்கார்களின் செயல் தொடர்பாக ஒரு வீடியோ இணையத்தை வேகமாகப் பரவியது.

Lebanon
Lebanon

உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளிலும், மக்கள் விரோத திட்டங்களை அரசு மக்கள் மீது திணிக்கும்போது பெரும் போராட்டம் வெடிக்கும். இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இப்படி நடக்கும் போராட்டங்களால் நடக்கும் நன்மைகள் பல. சில நேரங்களில் அரசாங்கத்தின் பிடிவாதத்தால், போராட்டங்கள் வன்முறையாக வெடிப்பதும் உண்டு.

லெபனான்
லெபனான்

லெபனான் நாட்டில் தற்போது, அங்குள்ள மக்கள் அந்நாட்டு அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தைக் கடந்த வாரம் முதல் நடத்திவருகிறார்கள். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. மக்கள் போராட்டத்தால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அரசின் நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும்படியான அறிவிப்புகளும் போராட்டக்களத்தில் இருந்து ஒலிக்கிறது. சில இடங்களில் இந்தப் போராட்டம் வன்முறையாகவும் வெடித்துள்ளதால் லெபனானில் பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமை இப்படி பரபரப்பாக இருக்க, லெபனான் போராட்டக்கார்களின் செயல் தொடர்பாக ஒரு வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.

லெபனான்
லெபனான்

அதில் ஒரு குழந்தை காரில் அமர்ந்திருக்க, சாலையில் போராடிய மக்கள், அந்த காரை சுற்றி குழந்தைகளுக்கான பேபி ஷார்க் பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் ஒரே குரலில் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தபடி பாடுகிறார்கள். இவர்கள் யாரிடம் எப்படி போராட வேண்டும் எனத் தெரிகிறது என பலரும் லெபனான் போராட்டக்காரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பிட்ட அந்தக் குழந்தையின் தாயான எலியனே ஜாபுவார், தன் 15 மாதக் குழந்தையை காரில் அழைத்துச் செல்கிறார். அப்போது பாப்டா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டக் குழுவை அவர் எதிர்கொள்கிறார். போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக சாலையில் போராடிக்கொண்டிருக்க, குழந்தையின் தாயான எலியனே அவர்களிடம், ``காரில் என் குழந்தை இருக்கிறது. அதிக சத்தம் வேண்டாமே. குழந்தை பயப்படுகிறது” என கேட்டுக்கொள்கிறார்.

லெபனான்
லெபனான்

அடுத்தகணமே அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் இணைந்து குழந்தைக்குப் பிடித்தமான பேபி ஷார்க் பாடலை பாடத் தொடங்குகின்றனர். இந்தக் காட்சிதான் இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய எலியனே ஜாபுவார், ``நான் அவர்களிடம் காரில் குழந்தை இருக்கிறது.. பயப்படுகிறது என்று சொன்ன மறுகணமே அனைவரும் பாடத் தொடங்கிவிட்டனர். ஒருகணத்தில் எல்லாம் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. குழந்தை ராபினுக்கு அந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும். வீட்டில் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அவன் சிரித்துக்கொண்டே இருப்பான்.

இந்த விஷயத்தை நான் என் கணவரிடம் சொல்லும் முன்னரே இந்த வீடியோ அவர் மொபைலுக்குச் சென்றிருக்கிறது. அத்தனை வேகமாக எல்லாம் நடந்தது. லெபனானின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும். ராபின் வளர்ந்த பின்னர் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். லெபனானின் போராட்டக்காரர்கள் அவனுக்காவும் போராடினார்கள் என அவனுக்குத் தெரிய வேண்டும்” என்றார்.

Thanks for the animation on road from baby Robin Haddad Chabeb furn el cheback And the shark Elie-joe Nehme

Posted by Eliane Jabbour on Saturday, October 19, 2019

லெபனான் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக, வன்முறையை கையில் எடுத்துப் போராடுபவர்களாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இந்த வீடியோ அந்த போராட்டக்காரர்களின் குழந்தை மனநிலையைக் காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.