Published:Updated:

`சந்தோஷம் + வருத்தம்!’ மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பை சீனா எப்படிப் பார்க்கிறது?

ஒரு தலைவரின் வருகையைச் சீனா எப்படி எதிர்கொள்கிறது?

மோடி - ஷி ஜின்பிங்
மோடி - ஷி ஜின்பிங்

புயலடித்து ஓய்ந்ததுபோல இருக்கிறது, சென்னை மாமல்லபுரம் பகுதி. சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பு டீக்கடை முதல் தலைமைச் செயலகம் வரை பேசுபொருளானது. சர்வதேச நாடுகள் எல்லாம் உற்றுநோக்கிய இந்தச் சந்திப்பினைப் பற்றிய சின்னச் சின்ன செய்தியும் வைரலானது.

மோடி - ஷி ஜின்பிங்
மோடி - ஷி ஜின்பிங்
Twitter

இந்திய ஊடகங்கள், குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் இந்தச் சந்திப்பினை பற்றிய A to Z விஷயங்களைச் செய்திகளாக்கின. அதேநேரத்தில், சீன ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பற்றி என்ன சொல்கின்றன என்று சற்று அக்கரை பக்கம் எட்டிப்பார்த்தோம்... உடன் வந்த அதிகாரிகள், குறுக்கே போன நாய், பரிமாறப்பட்ட உணவு வகைகள், மோடியின் வேட்டி சட்டை காஸ்டியூம் பற்றியெல்லாம் நம் அளவுக்கு அலட்டிக்கொள்ளாமல், சீன ஊடகங்கள் இந்தச் சந்திப்பைக் குறித்து தேவையான அளவே பேசியிருக்கின்றன.

பொதுவாக, இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் அவர்கள் என்ன பேச வேண்டும், எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பது வரை திட்டமிட்ட பின்னரே நடக்கும். ஆனால், அவ்வாறு இல்லாமல், மிகவும் வித்தியாசமாக அளவளாவுவது, பல இடங்களைச் சுற்றிப்பார்ப்பது, புல்வெளியில் அமர்ந்து கதைப்பது ஆகிய முறைசாரா சந்திப்பாக இது நிகழ்ந்திருக்கிறது என்பது பற்றிச் சீன ஊடகங்கள் பேசியிருக்கின்றன.

மேலும், சீன அதிபருக்கு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பைப் பற்றிய பதிவுகளில், `தென்னிந்தியாவில் உள்ள நகரமான சென்னையில், ஷி ஜின்பிங் தரையிறங்கியதும் அவருக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு பாரம்பர்ய நடனங்கள் ஆடி அங்குள்ள மக்கள் அவரை வரவேற்றனர். மாணவர்கள் உட்பட ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு, சீன அதிபர் செல்லும் வழியெல்லாம் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் கொடிகளை அசைத்து அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னை சந்திப்பு
சென்னை சந்திப்பு

இவை தவிர்த்து, இரு தலைவர்கள் சந்திப்பினால், இந்திய - சீன உறவு மேம்படுவது குறித்தும் எழுதப்பட்டுள்ளன. `சீன ட்ராகனும் இந்திய யானையும் இணைந்து நடனமாடுவது இரு நாடுகளுக்கும் உகந்தது' என இந்தச் சந்திப்பு குறித்த சீன அதிபரின் கருத்தும், மோடியின் கருத்தும் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கின்றன, அவ்வளவே.

சரி, ஊடகங்கள் இந்தச் சந்திப்பை எப்படிக் கையாண்டது என்பது இருக்கட்டும். இரு நாட்டு அரசுகளும் இந்தச் சந்திப்பைக் கையாண்ட விதமும் முற்றிலும் வேறுபட்டது. இரு நாட்டுத் தலைவர்கள், முதலில் கடந்த ஆண்டு சீனாவின் வூ ஹான் நகரிலும், இரண்டாவதாக இந்தியாவிலும் இப்படி முறைசாரா சந்திப்பு நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மோடி கடந்த ஆண்டு சீனா சென்றடைந்தபோது, நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அப்போது சீனாவின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர், அரசு தூதர், ஹூபே மாகாணத்தின் துணை ஆளுநர் ஆகியோர் உட்படப் பல அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, சீனாவில் இரு தினங்கள் தங்கினார் மோடி. ஷி ஜின்பிங் - மோடி ஆகிய இருவர் சந்திப்பின்போது ஹூபே அரசு அருங்காட்சியக வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர், முக்கிய அதிகாரிகளோடு ஒரு மீட்டிங் நடந்தது. அதன்பிறகு மோடி - ஜின்பிங் இருவரும், சீன இசைக்கலைஞர்கள் இந்தித் திரைப்படப் பாடல்கள் இசைத்ததை ரசித்தனர்.

இரண்டாவது தினம், தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் ஒரு நடைப்பயணம், ஒரு மணி நேரம் படகு சவாரி, தேநீர் விருந்து என இரு தலைவர்களின் நட்பு பாராட்டுதல் முடிந்தது. மொத்தமாக இரு தலைவர்களும் அப்போது 9 மணி நேரம் உரையாடியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தச் சந்திப்பின் அவசியம், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றிய அரசு அறிவிக்கையை ஊடகங்கள் வெளியிட்டன.

வூ ஹான் சந்திப்பு
வூ ஹான் சந்திப்பு

இவைதவிர, சீன மக்கள் அந்தச் சந்திப்பு குறித்து பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், அந்தச் சந்திப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. ஒரு தலைவரின் வருகையைச் சீனா எப்படி எதிர்கொள்கிறது என்று அங்கு வசிக்கும் ஒருவரிடம் கேட்டோம்.

சீனாவில் 8 வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழரான நாகராஜன் மணி இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், "சில வருடங்களுக்கு முன்னர், மோடி ஷாங்காய் வந்திருந்தார். அப்போது சீன ஊடகங்களைவிட, மோடியுடன் வந்திருந்த இந்திய ஊடகங்கள்தான் இந்தியாவில் அந்தச் சந்திப்பை பற்றி நிறைய பேசின, எழுதின. மோடி வந்தபோது ஒரு பெரிய ஹால் முன்னாடி `இண்டியன் அசோசியேஷன் வெல்கம் மோடி' என்று ஒரு சின்ன பேனர் வைக்கப்பட்டது. அவ்வளவுதான், அதை மீறி இங்கே கொடி கட்ட முடியாது, பேனர் வைக்க முடியாது. டிராஃபிக் ப்ளாக்லாம் நெனைச்சே பார்க்க முடியாது. சீனாவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யுற மாதிரி எதுவும் நடக்காது. இங்க நான் 8 வருஷமா இருக்கேன். அதிபர் ஷி ஜின்பிங் ஒரு திறப்புவிழாவுக்கு வந்தா இங்க ஒரு தடபுடலும் இருக்காது. அடுத்த நாள் பேப்பர்ல பார்த்தாதான் இங்க அவர் வந்துபோனாருனு தெரியும். இந்தியாவுல நடந்த மாதிரி, ஒரு வாரத்துக்கு மாமல்லபுரத்தையே கண்காணிப்புல எடுத்து, ஹோட்டல்களை எல்லாம் காலி பண்றது, கடையைப் பூட்டறதுனு எதுவும் நடக்காது. பீஜிங், ஷாங்காய்னு இங்க அடிக்கடி வெளிநாட்டுத் தலைவர்கள் வர்றதும் போறதும் நடக்கும். எங்கே விழா நடக்குதோ, அங்கே வி.ஐ.பி-க்குனு தனிப்பட்ட ஒரு நுழைவாயில் இருக்கும். அதுல அவங்க போய், விழா நடத்தி முடிச்சுட்டு அமைதியா வெளில போய்டுவாங்க.

மோடியின் சீனா வருகைக்கு இண்டியன் அசோசியேஷன் வைத்த வளைவு பேனர்
மோடியின் சீனா வருகைக்கு இண்டியன் அசோசியேஷன் வைத்த வளைவு பேனர்
மோடி - ஜின்பிங் சந்தித்த சனிக்கிழமை கோவளம் எப்படி இருந்தது? #SpotVisit

பொதுமக்களுக்குனு இருக்கற நுழைவாயில்ல ஒரு பிரச்னையும் இருக்காது. பெரும்பாலான நிகழ்வுகள் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமதான் நடக்கும். அங்கே, அப்படி ஒரு விழா நடந்ததே அடுத்த நாள் செய்தியைப் பார்த்துத்தான் தெரியும்.

`தலைவர்கள் வர்றாங்க. டிராஃபிக் ஜாமாகும்... பாத்துப் போங்க!'ன்னெல்லாம் அறிவிக்கிற சூழலே இங்க இருக்காது. ஒரு டிரெய்ன், பஸ், ஃப்ளைட் எதுவுமே கேன்சல் ஆகாது. ப்ரேக்கிங் நியூஸ், லைவ் கவரேஜ் எல்லாம் இல்லை. இங்க ரெண்டு மூணு மீடியாதான். எல்லாமே அரசுக் கட்டுப்பாட்டுலதான் இருக்கும். தலைவர்கள் வரவை ஒரு செய்தியா வெளியுடுவாங்க. அவ்வளவுதான்.

இந்தியாவில் கொடி கட்டினது, தோரண வாயில், பேனர் கட்டினது பார்த்து சீன அதிபர், பொதுமக்களை ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்துறாங்கனு நெனைச்சிக்கற வாய்ப்பு உண்டு. ஏன்னா, ஷி ஜின்பிங் இங்க பொது மக்களோட ஒருவராதான் போவார், வருவார்.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

அங்க மக்களுக்கு ப்ரேக்கிங் நியூஸ் குடுத்துக்கிட்டே இருக்கற மீடியாக்கள் நிறைய இருக்கு. இங்க, அப்படி இல்லை. மக்களுக்குத் தங்களோட பெர்சனல் லைஃப்தான் முக்கியமா இருக்கு.

அதைத் தாண்டி அரசைப் பத்தியோ, அரசாங்க விழாக்கள் பத்தியோ பேசி விமர்சிச்சுட்டு இருக்க மாட்டாங்க. அதுக்கும் ஒரு முக்கியக் காரணம் இருக்கு. 8 வருஷமா நான் சீனாவுல இருக்கேன், பல விஷயங்களுக்கு அரசு அலுவலகங்களை நாடியிருக்கேன். ஆனா ஒரு பைசா லஞ்சம், எதுக்கும் யாருக்கும் கொடுத்ததில்லை. நமக்குத் தேவையானதைச் சொன்ன நேரத்துல செஞ்சு கொடுத்துடுவாங்க. நாம நம்ம லைஃபைப் பாத்துகிட்டா போதும். நம்மளை அரசாங்கம் பாத்துக்கும்.

அடிப்படைத் தேவைகளான தண்ணீர் வசதி, சிறந்த சாலை வசதி, வைஃபை வசதி, டி.வி லைன் என இப்படி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ல சீனா எங்கயோ இருக்கு. மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அரசே செஞ்சு கொடுத்துடுது. இந்தியாவுக்கு சீன அதிபர் வந்தப்ப, அவ்ளோ போலீஸ். ஏன், சாதாரண நாள்கள்லகூட இந்தியாவுல ரோட்ல போலீஸ் இருக்கும். ஆனா இங்க போலீஸ் தலைகளையே பார்க்க முடியாது. சட்டம் - ஒழுங்கு எல்லாமே சர்வைலன்ஸ் கேமரா வெச்சுதான் கண்காணிப்பு நடக்குது. கவர்மென்ட் எல்லா நேரமும் கண்காணிச்சுட்டே இருப்பாங்க. அரசாங்கம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும், சிறந்த பாதுகாப்பையும் தர்றப்ப, அவங்களபத்தி நாம தேவையில்லாத விமர்சனங்களையும் வைக்க வேண்டியதில்லை" என்றார்.

சீன அதிபருக்கு சாலையில் காத்திருந்து மக்கள் வரவேற்பு
சீன அதிபருக்கு சாலையில் காத்திருந்து மக்கள் வரவேற்பு

ஆக, ஒன்று புரிந்தது. இதே சந்திப்பு அங்கே நடந்திருந்தால் இத்தனை போலீஸ் தலைகள் இருந்திருக்காது; போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டிருக்காது; ஓ.எம்.ஆர் சாலையில் இப்போது நடந்திருப்பதுபோல ஸ்பீட் பிரேக்கர்கள் எல்லாம் கரைக்கப்பட்டிருக்காது; பேனர் வைக்கும் வழக்கமே இல்லையென்பதால், வைக்க அனுமதி கேட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்காது; இத்தனை செய்திகள் பகிரப்பட்டிருக்காது. இரு நாட்டுத் தலைவர்கள் இங்கு சந்தித்துக் கொண்டது முக்கியமான சந்தோஷமளிக்கக்கூடிய நிகழ்வே. ஆனால், அதற்காக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது வருத்தமளிக்கும் விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.