Published:Updated:

``இந்தியா அளிக்கும் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை!'' - பாகிஸ்தான் இந்து கவுன்சில்

பாகிஸ்தான் இந்து கவுன்சில்
பாகிஸ்தான் இந்து கவுன்சில்

மோடி அரசின் செயல்பாடு இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் கருதுகின்றனர்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, எதிராக மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில், போலீஸார் தடியடி நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, பிரதமர் மோடி, ''குடியுரிமை சட்டத்தால் இந்தியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா இரக்கம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒரு நாடு. பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் துன்புறுத்தப்பட்டவர்கள் மற்றும் இந்தியாவை விட்டால் வேறு நாடுகளுக்குச் செல்ல போக்கிடம் இல்லாதவர்களுக்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எதிர்ப்பு என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது நம் பண்பாட்டில் இல்லை. புரளிகளுக்கு இடம் கொடுக்காமல் அவற்றைச் செய்வோரிடத்திலிருந்து தள்ளியிருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட மசோதா எரிப்பு
குடியுரிமை சட்ட மசோதா எரிப்பு

இந்த நிலையில், புதிய குடியுரிமைச் சட்டத்தின்படி, யார் யாருக்கெல்லாம் இந்திய குடியுரிமை வழங்கப்படவுள்ளது என்கிற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 31,313 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 25,441 பேர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள். அடுத்தபடியாக 5,807 சீக்கியர்களுக்கு அதிகபட்சமாகக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது. 55 கிறிஸ்துவர்கள் 2 புத்தமதத்தவர் 2 பார்ஸிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படவுள்ளன.

குடியுரிமை பெறும் இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த நாட்டில் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டவர்கள். தாங்கள் துன்புறுத்தப்பட்டதை ஆவணங்கள் வழியாக நிரூபித்தவர்கள் என்று ஐ.பி உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வந்த சமயத்தில் தாங்கள் மத ரீதியாகத் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். அதோடு, இந்திய குடியுரிமைக்கும் விண்ணப்பித்தவர்கள். இந்தியாவுக்குள் நுழையும் சமயத்தில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாதவர்கள் குடியுரிமை பெறுவது கடினம் என்றும் ஐ.பி சொல்கிறது.

இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 600 இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். மேலும், 6 லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 'ஆஜ் தக்' தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். ''இந்தியாவில் வாழும் முஸ்லிம் இனத்தின் மக்கள் தொகை குறையவில்லை. ஆனால், அண்டை நாடுகளில் வாழும் இந்துகளின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளது'' எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.

புதிய குடியுரிமை மசோதா இந்திய மக்களிடையே மதரீதியிலான பிரிவினைக்கு வழி வகுக்கும்.
பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர்
`பினராயி விஜயனுடன் போராட்டம்!' - ரமேஷ் சென்னிதலாவைக் கைவிட்ட கேரள காங்கிரஸ்

அதேவேளையில், பாகிஸ்தான் இந்து கவுன்சில் அமைப்பு இந்தியாவின் புதிய குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ராஜா அசார் மங்லானி, 'எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''இந்தியாவின் புதிய குடியுரிமைத் திருத்த மசோதா இந்திய மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும். உண்மையான இந்து இது போன்ற சட்டத்தைக் கண்டிப்பாக ஆதரிக்க மாட்டான். இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானின் ஒட்டு மொத்த இந்துக்களும் தெரிவிக்கும் செய்தி இதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் இது. இந்தியா அளிக்கும் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை'' என்கிறார்.

பாகிஸ்தான் வாழ் சீக்கியர்களின் பாபா குருநானக் அமைப்பும் இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கோபால்சிங், ''இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நாங்கள் சிறுபான்மையினர்தான். மோடி அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரை மோடி அரசு கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளது.

கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் இணைந்திருந்த காலத்திலேயே பாகிஸ்தானில் 23 சதவிகித சிறுபான்மையினர் வாழ்ந்ததில்லை.
பாகிஸ்தான் சீக்கிய அமைப்பின் தலைவர் கோபால்சிங்
``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

'1947-ம் ஆண்டு பாகிஸ்தானில் 23 சதவிகித சிறுபான்மையினர் வாழ்ந்ததாகவும் தற்போது அதுவே 3.7 சதவிகிதமாக சுருங்கி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். 'சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது மதமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது குடி பெயர்ந்திருக்கலாம்' என்றும் அவர் கூறியுள்ளார். இது தவறான புள்ளி விவரம். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் இணைந்திருந்த காலத்திலேயே 23 சதவிகித சிறுபான்மையினர் பாகிஸ்தானில் இல்லை. 1961-ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் 2.83 சதவிகிதம் சிறுபான்மையினராக இருந்தனர்'' என்கிறார் கோபால்சிங்.

பாகிஸ்தானில் படிப்படியாகச் சிறுபான்மையினர் அதிகரித்து வருவதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சிறுபான்மையினர் மக்கள் தொகை 3.25 சதவிகிமாக உயர்ந்தது. அதாவது, 0.42 சதவிகிதம் அதிகரித்திருந்தது. 1981-ம் ஆண்டு 3.30 சதவிகிதமாகவும் 1998-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 3.70 சதவிகிதமாகவும் சிறுபான்மையின மக்கள் தொகை பாகிஸ்தானில் உயர்ந்துள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணம்

இது குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் தொகை 4 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என்று இந்து கவுன்சில் அமைப்பின் தலைவர் மங்கலானி கூறியுள்ளார். பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 21 கோடி ஆகும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்களில் 80 சதவிகிதம் பேர் சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள். இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த மாகாணத்தின் தலைநகர்தான் பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரான கராச்சி.

அடுத்த கட்டுரைக்கு