Published:Updated:

நாடற்றவர்களை நோக்கி நம்பிக்கைக்கரங்கள்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

அகதிகளுக்கான அமெரிக்கக் குழுமமான USCRI, அமெரிக்காவில் கால்பதிக்கும் ஒவ்வொரு ஆப்கானியருக்கும் 1,200 அமெரிக்க டாலர்களை உதவியாகக் கொடுக்கும்.

நாடற்றவர்களை நோக்கி நம்பிக்கைக்கரங்கள்!

அகதிகளுக்கான அமெரிக்கக் குழுமமான USCRI, அமெரிக்காவில் கால்பதிக்கும் ஒவ்வொரு ஆப்கானியருக்கும் 1,200 அமெரிக்க டாலர்களை உதவியாகக் கொடுக்கும்.

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்த வாரத்தில், ஒரு தேசத்தின் மக்கள் தங்களை நாடற்றவர்களாக அறிவித்துக்கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் போனாலும் உயிராவது தங்களிடம் மிஞ்சியிருக்கும் என்ற நம்பிக்கையில், தற்போது வெளிநாடுகளை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். முறிந்த மரங்களைப் புதிய நிலங்களில் வேரூன்ற வைத்து மீண்டும் துளிர்க்க வைப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. அதைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன சில நிறுவனங்கள்.

அகதிகளுக்கான அமெரிக்கக் குழுமமான USCRI, அமெரிக்காவில் கால்பதிக்கும் ஒவ்வொரு ஆப்கானியருக்கும் 1,200 அமெரிக்க டாலர்களை உதவியாகக் கொடுக்கும். பெரியவர், சிறியவர் எனப் பாகுபாடு இல்லாமல் கொடுக்கப்படும் இத்தொகையை 90 நாள்களுக்குள் செலவு செய்திருக்க வேண்டும். அமெரிக்காவில் குடிபெயர்வதற்கான செலவினங்கள் என்பது, ஒரு நாடற்றவருக்கு விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் ஆரம்பித்துவிடும். டெக்சாஸ் மாகாணத்தில் இப்படியானவர்களுக்குப் புதிய இடங்களில் வாழ உதவி செய்துவருகிறது RAICES.

நாடற்றவர்களை நோக்கி நம்பிக்கைக்கரங்கள்!

அமெரிக்கா வந்திறங்கியதும், பல அகதிகள் விர்ஜினியா மாகாணத்துக்குத்தான் அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு அங்கு மருத்துவச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அரிசோனா, கலிபோர்னியா, மேரிலாந்து, நியூ யார்க் எனப் பல மாகாண கவர்னர்கள், அகதிகளை அனுமதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

லூதரன் என்கிற தன்னார்வ அமைப்பு, இதுவரை 250 ஆப்கானியர்களுக்கு அமெரிக்காவில் மறுவாழ்வு வழங்கியிருக்கிறது.Uber, Lyft போன்ற நிறுவனங்கள் வேலை நிமித்தமாகவும், மளிகைப் பொருள்கள் வாங்கவும் தங்கள் வாகனங்களில் அகதிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்திருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு இக்குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள், குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது போன்றவற்றையும் கவனித்துக்கொள்கிறது லூதரன் அமைப்பு.

வீடுகளில் இருக்கும் கூடுதல் அறைகளை உள்வாடகைக்கு விட்டுப் பணம் ஈட்டும் தொழிலை 2007-ம் ஆண்டு ஆரம்பித்தது airbnb. தற்போது உலகெங்கும் 4 லட்சம் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் airbnb ஆப்கன் மக்களின் துயர்மிகு நாள்களுக்கான தற்காலிக நிவாரணியாக உருவெடுத்துள்ளது. ஆம், உலகெங்கிலும் நாடற்றவர்களாகத் தத்தளிக்கும் 20,000 ஆப்கன் மக்களுக்கு இலவசமாகத் தங்கள் நிறுவனம் மூலம் அறைகளைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். மனிதப் பாதுகாப்புக்கான ஆதாரப் புள்ளி என்பது ஓர் இருப்பிடத்திலிருந்துதான் தொடங்குகிறது. எத்தனை மாதங்களுக்கு இந்த இலவசம் தொடரும் என அந்நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய ஊக்கம் இது. கொரோனாச் சூழலில் தெரிந்த மனிதர்களையே நாம் வீட்டினுள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்துக்காகப் பல்வேறு தேசங்களில் இருக்கும் 20,000 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் அறைகளை முகவரியற்றவர்களுக்கு ஒதுக்க முன்வந்திருக்கிறார்கள். புக்கிங் கட்டணங்களை airbnb இந்தக் குடும்பங்களுக்குக் கொடுத்துவிடும் என்றாலும், யாருமற்றவர்களுக்கான இந்தக் குடும்பங்களின் விருந்தோம்பல் அளப்பரியது.

அமெரிக்காவுக்கான சிறப்பு விசாக்களை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதை விரைவுபடுத்த உதவுகிறது No One Left Behind என்கிற தன்னார்வ அமைப்பு. அமெரிக்காவுக்குள் கால் வைத்துவிட்ட ஆப்கன் மக்கள் பலரின் சொந்தங்கள் இன்னும் ஆப்கனில் இருக்கிறார்கள். தந்தையை விட்டு வந்த மகள், குடும்பத்தை அங்கிருந்து கொண்டு வரப் போராடும் மகன் என நாடற்றவர்களின் கதைகள் ஏராளம்.

அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரைசான் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானுக்கு அழைக்கப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறது. வால்மார்ட் மாதிரியான பெருநிறுவனங்கள் நேரடியாக உதவாமல், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை, உதவி செய்யும் நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

நாடற்றவர்களை நோக்கி நம்பிக்கைக்கரங்கள்!

பிற தேசங்களில் தஞ்சமடையும் மக்களோடு, இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. “அகதிகளுக்கு உதவும் அதே வேளையில், எல்லாப் பிரச்னைகளையும் மீறி ஆப்கானிஸ்தானிலேயே இருக்க விரும்பும் மக்களுக்கும் நாம் உதவ வேண்டியது அவசியம்’’ என்கிறார் Islamic Relief USA அமைப்பின் செய்தித் தொடர்பாளரான கிறிஸ்டினா டோபியாஸ். காபூல், பால்க், ஹெராத், நங்கர்ஹர் என ஆப்கனின் பல இடங்களில் முகாம்களை அமைத்திருக்கும் இந்த அமைப்பு அடிப்படை உதவிகளை வழங்கிவருகிறது. 2021-ம் ஆண்டு மட்டும் 2,70,000 மக்கள் ஆப்கனுக்குள்ளேயே இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

சிரிய மக்களின் அழுகுரல்கள் இன்னும் ஓய்ந்திடாத சூழலில், உலகம் அதன் அடுத்த மாபெரும் மனித நகர்வை உற்றுநோக்க ஆரம்பித்திருக்கிறது. RAICES நிறுவனத்தின் துணைத் தலைவரான கிரீல்லா, “தற்போது சூழல் யாருக்கும் ஏதுவானதாக இல்லை. ஜூலை மாதம் ஆறு குடும்பங்களுக்கு உதவினோம். ஆனால், தற்போது அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நாங்கள் இருக்கிறோம்” எனப் பேட்டியளித்திருந்தார். ‘நாங்கள் இருக்கிறோம்’ என்கிற நம்பிக்கை வரிகளை நம்பித்தான் இந்தப் பிரபஞ்சம் அதன் மிச்ச ஆயுளை நோக்கிச் சுழன்றுகொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism