Published:Updated:

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு யாருடையது, அவர்களுக்கும் தாலிபன்களும் சம்பந்தம் இல்லையா?

தாலிபன்களின் கதை 10: இன்றைய பகுதியில் கடந்த இரு நாள்களாக ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவரும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் அமைப்பின் பின்னணியை அலசுவோம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காபூலில் ஆகஸ்ட் 26-ம் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள், ஆப்கானிஸ்தான் இனி எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் உதாரணங்கள். அமெரிக்க ராணுவத்தினர் உட்பட நூறு பேருக்கும் மேல் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். தாலிபன்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கும் இடையிலான மோதல் களமாக மட்டுமே இதுவரை ஆப்கானிஸ்தானை பார்த்துவந்த பலருக்கு இந்த குண்டுவெடிப்பு ஆச்சர்யம் தந்திருக்கும். காரணம், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் என்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு.

அமெரிக்காவுடன் தாலிபன்கள் சமாதான ஒப்பந்தம் போட்டபோது, 'ஆப்கானிஸ்தானை ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் புகலிடமாகப் பயன்படுத்த மாட்டோம்' என உறுதி அளித்திருந்தனர். ஆனாலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

‘'மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். தேடிவந்து வேட்டையாடுவோம்’' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கர்ஜித்திருக்கிறார். தாக்குதலை தாலிபன்களும் கண்டித்துள்ளனர். ‘ஐ.எஸ் அமைப்புக்கு தாலிபன்கள் எதிரிகள். இந்த தீவிரவாதிகளை தாலிபன்கள் நொறுக்கிவிடுவார்கள்' என்றெல்லாம் யூகங்களைப் பலர் சொல்கிறார்கள்.

தாலிபன்களின் வரலாறு தெரிந்த யாரும், இப்படிப் பேச மாட்டார்கள். தாலிபன்களுக்கு நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர நண்பர்களும் இல்லை. நண்பர்களையேகூட முதுகில் குத்துவார்கள். யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்; தாலிபன்களின் துப்பாக்கி யாரையும் சுடும். அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
Mohammad Asif Khan

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாலிபன்களுக்கு நிறைய நிதியுதவி செய்த நாடு. தாலிபன்கள் சமாதானப் பாதைக்குத் திரும்பவும் அந்த நாட்டின் சுல்தான்கள் உதவி செய்தனர். ஆனால், ஆப்கனின் காந்தஹார் நகரில் இருக்கும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தூதரகத்தில் தாலிபன்கள் குண்டுவெடிப்பு நிகழ்த்தி பலரைக் கொன்றனர். இதன்பிறகு தாலிபன்கள் சகவாசத்தைக் கத்தரித்துக் கொண்டது எமிரேட்ஸ்.

தாலிபன் அமைப்பு உருவான முதல் நாளிலிருந்து அவர்களைத் தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான். ஆப்கனில் அமெரிக்கர்களிடம் அடி வாங்கிய போதெல்லாம் பாதுகாப்பு தேடி தாலிபன்கள் போனது பாகிஸ்தானுக்குத்தான். தாலிபன் தலைவர்கள் பலரை அரசு விருந்தினர்கள் போல பாகிஸ்தான் ராணுவம் இப்போதும் பாதுகாக்கிறது. ‘'எங்கள் மண்ணில் உங்கள் துப்பாக்கிகள் முழங்கக் கூடாது'’ என்பதுதான் பாகிஸ்தான் ராணுவம் விதித்திருக்கும் நிபந்தனை.

ஆனால், பாகிஸ்தானிலேயே கிளை தொடங்கினார்கள் தாலிபன்கள். தெஹ்ரிக் இ தாலிபன் என்பது, பாகிஸ்தானுக்கான தாலிபன் அமைப்பு. '’எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை’' என்று ஆப்கன் தாலிபன் தலைவர்கள் ஆரம்பத்திலிருந்து சொல்கிறார்கள். ஆனால், தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பினர் ஆப்கனில் இருந்தபடிதான் பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் விரைவிலேயே விஸ்வரூபம் எடுத்து, பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தைக் கைப்பற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தபோது திகைத்துவிட்டது பாகிஸ்தான் ராணுவம். அந்த மாவட்டத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாகிஸ்தான் ராணுவத்துக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகிஸ்தான் தாலிபன்களைக் கொன்றபடியும், ஆப்கன் தாலிபன்கள் பக்கம் நின்றபடியும் பாகிஸ்தான் ராணுவம் டபுள் கேம் ஆடுகிறது.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
Wali Sabawoon

தாலிபன்களை முரட்டுத்தனமாக ஆதரிக்கும் சீனாவுக்கும் இதேபோல பிரச்னை இருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் வீகர் இஸ்லாமிய சிறுபான்மையினர் அந்த அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். வீகர் இளைஞர்கள் இணைந்து ஈஸ்ட் துர்கிஸ்தான் இஸ்லாமிக் மூவ்மென்ட் என்ற தீவிரவாத இயக்கத்தை உருவாக்கி, சீன ராணுவத்துடன் ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் ஆப்கன் மண்ணில் இருந்தபடி ஆயுதப் பயிற்சி பெறுகின்றனர். எல்லை தாண்டி சீனாவில் போய் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களுக்கு அடைக்கலமும் பயிற்சியும் தருவது தாலிபன்கள்தான்.

இப்போது காபூலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் அமைப்பும் இதேபோல ஒன்றுதான். இராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐ.எஸ் அமைப்பு தங்கள் அரசை நிறுவியது. அப்போது ஐ.எஸ் தலைவராக இருந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி. ஐ.எஸ் அமைப்பின் அந்த வெற்றி, பல நாடுகளில் இருந்த தீவிரவாதிகளை ஐ.எஸ் நோக்கி இழுத்தது.

தாலிபன்கள் அப்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருந்தனர். 'நாம் நினைப்பது போல தாலிபன் அமைப்பு போர்குணத்துடன் இல்லை' என்று நினைத்த பல இளைஞர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஐ.எஸ் அமைப்பை உருவாக்கினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பழைய பெயர் கோரசான். இன்னமும் அந்த நாட்டில் பலர் தங்கள் நாட்டின் பெயரை இப்படித்தான் சொல்கிறார்கள். அந்தப் பெயரிலேயே இந்த அமைப்பு 2014-ம் ஆண்டு உருவானது. ஆப்கன் தாலிபனிலும் பாகிஸ்தான் தாலிபனிலும் இருந்து பிரிந்த பலர் இந்த அமைப்பில் இணைந்தனர். ஹபீஸ் சயீத் கான் என்பவர் இதற்குத் தலைவரானார். 'ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் ஆட்சி அமையும்' என்று அவர் சபதம் எடுத்தார். இராக் மற்றும் சிரியாவிலிருந்து பலர் வந்து இதில் இணைந்தார்கள்.

அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்த ஹபீஸ் சயீத் கானை டிரோன் மூலம் தாக்கி 2016-ம் ஆண்டு கொன்றது. அந்த அமைப்பில் இருந்த முக்கால்வாசி பேரைக் கொன்றுவிட்டதாகவும் அறிவித்தது. ஆனாலும் ஆப்கன் ஐ.எஸ் அமைப்பினர் இன்னமும் பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றனர்.

ஆப்கன் கிராமங்களில் பழங்குடித் தலைவர்களைக் கொல்வது, பள்ளிகளை மூடுவது என தொடர்ந்து இவர்கள் வன்முறைகளை நிகழ்த்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இவர்கள் இப்போதும் நடத்துகிறார்கள். அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகள் இவர்களிடம் பலத்த சேதத்தை சந்தித்திருக்கின்றன.

தாலிபன்
தாலிபன்
Wali Sabawoon

தாலிபன்கள் இவர்களை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். தாலிபன் படையில் இருக்கும் எந்த ஒரு வீரருக்கு அங்கு பிரச்னை வந்தாலும், உடனே போய் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் அமைப்பில் இணைந்துவிடுகிறார். 'எங்கள் விரோதிகள் அவர்கள்' என்கிறார்கள் தாலிபன் தலைவர்கள்.

ஆனால், தாலிபன்களுக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தாலிபன் துணைத் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சிராஜுதீன் ஹக்கானி. பாகிஸ்தானில் இருந்தபடி தாலிபனுக்கு உதவும் பயங்கரவாத அமைப்பான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் இவர். இதே ஹக்கானி நெட்வொர்க்தான் ஐ.எஸ் அமைப்புக்கும் நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்கிறது. சொல்லப் போனால், பாகிஸ்தானில் ஒரே இடத்தில் பயிற்சி பெறும் இளைஞர்கள்தான் தாலிபனுக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் கிளை பிரிந்து செல்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.எஸ் அமைப்பும் ஹக்கானி நெட்வொர்க்கும் இணைந்தே ஆப்கனில் பல தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. '’அமெரிக்காவுடன் தாலிபன்கள் சமாதானம் பேசிக் கொண்டிருந்ததால், தாக்குதல் நடத்தும் வேலையை இவர்களுடன் சேர்ந்து செய்தது ஹக்கானி நெட்வொர்க்’' என்கிறார், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் அமைப்பில் சுமார் இரண்டாயிரம் பேர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மாகாணமாக பிடித்தபடி தலைநகர் காபூலுக்கு வந்த தாலிபன் படையுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளும் இருந்தனர். இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளைச் செய்யும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினரும் இருந்தார்கள். காபூல் வீழ்ந்ததுமே, 'ஆப்கானிஸ்தானிலிருந்து அந்நிய நாட்டு ஜிகாதிகள் அனைவரும் வெளியேற வேண்டும்' என தாலிபன் அமைப்பு உத்தரவு போட்டது. ஆனால், அதை ஐ.எஸ் தீவிரவாதிகள் கண்டுகொள்ளவில்லை.

தாலிபன்களின் கதை - 9 |ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா செய்த துரோகமும், அதன் தோல்வியும்!

காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள், அங்கு கடும் பாதுகாப்புடன் இருந்த சிறையை உடைத்து கைதிகளை விடுதலை செய்தனர். அப்படி வெளியில் வந்த பலரும் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள். ஆப்கன் ஐ.எஸ் அமைப்பின் தலைவராக கடந்த ஆண்டு வரை இருந்தவர் அபு உமர் கோரசானி. அவரும் அந்த சிறையில்தான் இருந்தார். அவரை மட்டும் தாலிபன்கள் கொன்றுவிட்டதாக தகவல்.

இப்போது ஆப்கன் ஐ.எஸ் நடத்திய இந்த ஒற்றைத் தாக்குதலுடன் எல்லாம் நின்றுவிடப் போவதில்லை. இத்தனை ஆண்டுகளாக உளவு அமைப்புகளை ஏற்படுத்தி, கண்காணித்து, தீவிரவாதிகளை ஒடுக்கிவந்த அமெரிக்கப் படைகள் இப்போது ஆப்கன் மண்ணில் இல்லை. அவர்களுக்கு உதவிவந்த ஆப்கன் உளவுத்துறையும் இல்லை. எனவே, தீவிரவாதச் செயல்களைக் கண்காணிப்பதும் தடுப்பதும் கடினமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு

ஒரு தீவிரவாத அமைப்பின் வெற்றி, அதை நோக்கி பலரையும் இழுக்கும். அமெரிக்கத் தூதரகங்களை வெடிகுண்டுகளால் பின்லேடன் சிதைத்தபோது, அல் கொய்தாவுக்கு பல நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் வந்து இணைந்தார்கள். ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும் இராக்கிலும் புதிய அரசை அமைத்தபோது, இந்தியாவிலிருந்து கூட பலர் போய் அந்த அமைப்பில் இணைந்தார்கள். இப்போது ஆப்கனில் தாலிபன்கள் பெற்றிருக்கும் வெற்றி, அதுபோல பலரை அந்த மண்ணுக்குப் போக வைக்கும். அதுதான் உலகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது.

அல் கொய்தா என்ற அமைப்பின் தாக்குதலே அமெரிக்காவை ஆப்கன் மண்ணுக்குக் கூட்டிவந்தது. 20 ஆண்டுகளில் அந்த அமைப்பை முழுமையாக வேரறுக்க முடியாமல் அமெரிக்கா திரும்பிப் போகிறது. அமெரிக்கா இந்த மண்ணுக்கு வந்தபோது ஆப்கன் ஐ.எஸ் என்ற அமைப்பே இல்லை. திரும்பிப் போகும் அமெரிக்கர்களை இந்தப் புதிய அமைப்பு தாக்குகிறது.

தீவிரவாதத்தின் மீதான போர், இன்னும் பல தீவிரவாத அமைப்புகளையும் போர்களையும் புதிதாக உருவாக்கி விடுவதுதான் உலகின் விந்தை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு