Published:Updated:

"அவர்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதற்கு?" - ஆப்கனைக் கை கழுவும் ஜோ பைடன்!

கார்த்தி
ஜோ பைடன்
ஜோ பைடன் ( Evan Vucci )

"இன்னொரு நாட்டின் பிரச்னைக்காக இனியும் எங்கள் வீரர்களை நான் இழக்க விரும்பவில்லை ரத்தம் தோய்ந்த இந்த இருபது ஆண்டுகால நீண்ட போரை முடித்துக்கொள்கிறோம்." - ஜோ பைடன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இருபதாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆப்கன் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கிறது தாலிபன். ஆப்கானிஸ்தானை விட்டு, தன் படைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்ட சில மாதங்கள் கழித்தே இச்சம்பவங்கள் அரங்கேறும் என நினைத்திருந்த சூழலில் அதற்கு முன்பாகவே எல்லாம் நடந்தேறிவிட்டது.
Afghan people
Afghan people
Shekib Rahmani

அமெரிக்கா செய்தது தவறு எனப் பலர் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்க, முதல்முறையாக இந்த முடிவுகுறித்து பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்கு சரியான திட்டமிடல்களுடன்தான் சென்றோம். 2001, செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) சம்பவத்துக்குப் பின்னர், மீண்டும் அல் கொய்தா ஆப்கானிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு எவ்வித தாக்குதலையும் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தோம். அதை நாங்கள் நிறைவேற்றியும் இருக்கிறோம். அல்கொய்தா அமைப்பை முற்றிலுமாகச் சிதைத்திருக்கிறோம். ஒசாமா பின் லேடனுக்கான தேடுதல் வேட்டையை நாங்கள் ஒருநாளும் குறைத்துக்கொள்ளவில்லை.

ஆனால், இதெல்லாம் நடந்து ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. ஆப்கானிஸ்தான் என்னும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் நோக்கமுமில்லை. அமெரிக்க தேசியத்தின் மீது மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்கக்கூடாது. அந்த அளவில் மட்டுமே ஆப்கன் மீதான எங்களின் கரிசனம் இருக்கிறது. இருக்கும்.

American troop
American troop
Shekib Rahmani

இப்போது பயங்கரவாதம் என்பது ஆப்கானிஸ்தனைக் கடந்து பல்கிப் பெருகியிருக்கிறது. சொமாலியாவில் அல் ஷபாப், அரேபியன் தீவில் அல் கொய்தா, சிரியாவில் அல் நுஸ்ரா, ஈராக் சிரியாவில் ISIS என ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகமாகியிருக்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் எங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறோம். நிரந்தர ராணுவ முகாம்கள் அமைக்காமலே, இந்த அச்சுறுத்தல்களை நாங்கள் சமாளித்துவருகிறோம். அதேபோல், இனி ஆப்கானிஸ்தானிலும் செய்வோம். முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்ட ஒப்பந்தத்தின் நீட்சியைத்தான் நான் தற்போது செய்திருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதும் என் முடிவில் நான் தீர்க்கமாக நிற்கிறேன். இருபது ஆண்டுகள் கழிந்தபின்னும், அமெரிக்கப்படை ஆப்கானிலிருந்து வெளியேற தக்க தருணம் இல்லை என்பதே உண்மை. அதனால்தான் இன்னும் அங்கு இருக்கிறோம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும், வேகமாக அங்கு சில சம்பவங்கள் அரங்கேறிவிட்டன. ஆப்கன் அரசியல் தலைவர்கள் அந்த நாட்டை கைவிட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். ஆப்கன் படைவீரர்கள் சமயங்களில் சண்டையிடக்கூட மனமில்லாமல் மண்டியிட்டுவிட்டனர். கடந்த சில வாரங்களாக நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது, அங்கிருந்து வெளியேற வேண்டும் என நாங்கள் எடுத்த முடிவு சரியென்றே தோன்றுகிறது.

Afghan troop
Afghan troop
Shekib Rahmani

ஆப்கானுக்காக சண்டையிட விரும்பாத ஆப்கன் வீரர்களுக்காக இனியும், அமெரிக்க வீரர்கள் சண்டையிடக்கூடாது, சண்டையிடாது. 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறோம். 3 லட்சம் ஆப்கான் வீரர்களுக்கு அனைத்து வசதிகளுடன் ராணுவ பயிற்சி கொடுத்திருக்கிறோம். தாலிபன்களிடம் இல்லாத பல கருவிகளை அவர்களுக்கு நல்கியிருக்கிறோம், சம்பளம் கொடுத்திருக்கிறோம். தாலிபன்களிடம் விமானப்படை கிடையாது. ஆப்கன் வீரர்களுக்கு அதையும் கொடுத்தோம். அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள எல்லா உதவிகளையும் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால், அந்த எதிர்காலத்துக்காக சண்டையிடும் உத்வேகத்தை எங்களால் அவர்களுக்கு வழங்கமுடியவில்லை.

தாலிபன்கள் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததன?! - ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இனி என்னவாகும்?

ஆப்கனில் சில சிறந்த படைத்தளபதிகள் இருக்கிறார்கள். ஆனால், ஆப்கன் வீரர்களால் தாலிபன்களை இப்போது கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால், ஓராண்டு என்ன இருபதாண்டுகள் என்ன, எத்தனை ஆண்டுகள் அமெரிக்க படைவீரர்கள் அங்கு இருந்தாலும், அதனால் எந்த மாற்றமும் நடைபெறப்போவதில்லை. நாங்கள் ஆப்கனுக்கு செலவு செய்துகொண்டிருப்பதை எங்கள் போட்டியாளர்களான சீனாவும், ரஷ்யாவும் விரும்புகின்றன. ஏனெனில் அவை விழலுக்கு இறைத்த நீர் என அவர்கள் அறிவார்கள். ஆப்கான் அதிபர் கனியிடம், அமெரிக்க வீரர்கள் வெளியேறிய பின்னர் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி கடந்த மாதம் கூட பேசினேன். ஆனால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆப்கனுக்கே இல்லாத அக்கறைக்கு, நாங்கள் ஏன் எங்களின் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Manuel Balce Ceneta

எங்களின் தற்போதைய இலக்கு ஒன்றுதான். ஆறாயிரம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள். அமெரிக்க மக்கள், ஆப்கன் கூட்டாளிகள், சிக்கலில் இருக்கும் ஆப்கன் மக்கள் போன்றவர்களை ஆப்கனிலிருந்து வெளியேற்ற இவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். சிறப்பு விசா மூலம் குடியுரிமை பெற இயலும் ஆப்கன் மக்களை நாங்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க இருக்கிறோம்.

இன்னொரு நாட்டின் பிரச்னைக்காக இனியும் எங்கள் வீரர்களை நான் இழக்க விரும்பவில்லை. ரத்தம் தோய்ந்த இந்த இருபது ஆண்டுகால நீண்ட போரை முடித்துக்கொள்கிறோம்" எனத் தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு