Election bannerElection banner
Published:Updated:

சீனா: காணாமல்போன ஜாக் மா காணொலியில் தோன்றினார்! - `அலிபாபா' நிறுவனருக்கு என்ன நடந்தது?

ஜாக் மா
ஜாக் மா

`சீன அரசுதான் ஜாக் மாவைச் சிறைப்பிடித்துள்ளது' என்று ஒரு தரப்பினர் கூறிவந்த நிலையில், மற்றொரு தரப்பினர் வேறுவிதமாகக் கூறினர். `அலிபாபா' நிறுவனர் ஜாக் மா-வுக்கு நடந்தது என்ன?

ஜாக் மாவும் அலிபாபாவும்!

1999-ம் ஆண்டு 17 பேரோடு இணைந்து சீனாவின் ஹங்சூ பகுதியில் `அலிபாபா' நிறுவனத்தைத் தொடங்கினார் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா. அதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து உலகின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றானது அலிபாபா. சீனாவின் முக்கியத் தொழிலதிபராக உருவெடுத்திருந்தார் ஜாக் மா. ஏராளமான இளைஞர்கள் ஜாக் மாவைத் தங்கள் முன்னோடியாகக்கொண்டு செயல்படத் தொடங்கினர்.

 ஜாக் மா
ஜாக் மா
சீனாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகச் செயல்பட்டுவரும் அலிபாபா, அந்நாட்டின் இணைய வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சந்தைகளைத் தன் வசப்படுத்தியது. அலிபாபா நிறுவனத்தின் அசுர வளர்ச்சியில் ஜாக் மாவின் பங்கு மிக அதிகம்!

ஜாக் மாவைக் காணவில்லை?!

கடந்த அக்டோபர் மாதம் வரை பொது வெளியில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜாக் மா, திடீரென மாயமானார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்குகொள்ளவில்லை. வெளியில் தலைகாட்டவும் இல்லை. இதையடுத்து ஜாக் மாவை, சீன அரசுதான் கடத்திவைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. அரசு, அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இதற்குக் காரணமாக அவருடைய ஆதரவாளர்கள் சில காரணங்களை முன்வைத்தனர். ``அலிபாபா நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்திருந்த நிலையில், சீன அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து. அந்தச் சமயத்தில் சீன அரசைக் கடுமையாக ஜாக் மா விமர்சித்த காரணத்தால்தான் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் ஜாக் மா. தொடர்ந்து பொது நிகழ்வுகளில் கலந்துகொள்பவராக இருக்கும் நபர், இரண்டு மாதங்களுக்கு மேலாக வெளியே வரவில்லையென்றால் அதற்குக் காரணம் சீன அரசாக மட்டுமே இருக்க முடியும்'' என்று அவருடைய நலம் விரும்பிகள் சிலர் குற்றம்சாட்டினர்.

அலிபாபா குழுமம்
அலிபாபா குழுமம்
(AP Photo/Ng Han Guan
அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?!

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ``அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் சீன அரசு சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறது. பழைமைவாதத்தை அரசு கைவிட வேண்டும்'' என்று வெளிப்படையாகவே அரசை ஜாக் மா விமர்சித்ததாகச் செய்திகள் வெளியாகின. அதன் பிறகுதான் ஜாக் மா பொது வெளியில் தோன்றவில்லை. எனவே, `அரசுதான் அவரை வீட்டுச் சிறைப் பிடித்திருக்க வேண்டும்' என்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்தநிலையில், புதிய தொழில்முனைவோரைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்த ஜாக் மா, அந்த நிகழ்ச்சியின் இறுதித் தொடரில் பங்குகொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து `ஜாக் மாவை சீன அரசுதான் சிறைப் பிடித்து வைத்திருக்கிறது' என்று சீன மக்கள் நம்பத் தொடங்கினர்.

வேறு காரணம்?

`சீன அரசுதான் ஜாக் மாவை சிறைபிடித்துள்ளது' என்று ஒரு தரப்பினர் கூறிவந்த நிலையில், மற்றொரு தரப்பினர் வேறுவிதமாகக் கூறினர். அலிபாபாவின் ஆன்ட் நிறுவனம் ஐ.பி.ஓ (Initial Public Offering - முதன்முறையாக ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் தன் பங்குகளை வெளியிடுவதாகும்.) வரவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஐ.பி.ஓ-வை நிறுத்தியது சீன அரசாங்கம். ஜாக் மா வெளிநாடு செல்லத் தடை விதித்தது. அலிபாபா நிறுவனத்தில் சட்ட விதிமீறல் நடந்தாகக் கூறி அபராதம் விதித்தது. சில மாதங்களுக்கு முன்பு, `அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பைத் தராமல், சுயநலமாகச் செயல்படுகிறது' என்று சொல்லி புதிய விசாரணையைத் தொடங்கியது அரசு.

ஜாக் மா
ஜாக் மா
AP Photo/Firdia Lisnawati, File
காணாமல் போனாரா அலிபாபா நிறுவனர் ஜாக் மா... சீனாவில் நடப்பது என்ன?
``அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசாங்கம் இப்படித் தொடர் தாக்குதல் நடத்திவரும் காரணத்தால்தான் கடந்த மூன்று மாதங்களாக வெளியில் வராமலே இருக்கிறார் ஜாக் மா'' என்றும் சிலர் கூறிவந்தனர்.

காணொலியில் ஜாக் மா!

இந்தநிலையில், இன்று காலை காணொலி வாயிலாக நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார் ஜாக் மா. சீனாவின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாகக் கல்வி சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார் ஜாக் மா. இது குறித்த வீடியோவை சீனப் பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு காணொலி வாயிலாக ஜாக் மா தோன்றியிருந்தாலும், `அவர் எங்கு இருக்கிறார்... எதற்காக இவ்வளவு நாள்கள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார்..?' என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு