Published:Updated:

எரியும் அமெரிக்கா... எண்ணெய் வார்க்கும் ட்ரம்ப்!

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரம்ப்

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட நான்கு கோடிப் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிவிடுவதால் மட்டுமே தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு கிடைத்து விடாது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பராக் ஒபாமா போன்ற தலைவர்கள் அதிகாரத்தில் இருந்ததால் மட்டுமே அங்கு நிறவெறிக் கொடூரங்கள் நின்று போகாது என்பதை மீண்டும் ஒரு முறை அந்த மண் நிரூபித்திருக்கிறது.

பேரழிவு ஏற்படுத்தும் ஒரு கொள்ளைநோய், அலட்சியமும் அபத்தமுமாகச் செயல்படும் ஓர் ஆட்சியாளர், இதயத்தைக் கழற்றிவைத்துவிட்டு இரும்புக்கரத்துடன் வீதியில் இறங்கும் காவல் துறை... இந்தக் கூட்டணி மிகவும் அபாயகரமானது. இதுதான் அமெரிக்காவைக் கடந்த ஒரு வார காலமாகக் கோபத்தீயில் எரியவைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் கிழக்குக்கரை தொடங்கி மேற்குக்கரை வரை பல மாகாணங் களுக்கும் கலவரம் பரவியுள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 1,600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான சிறு பொறி, மின்னியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்டு (George Floyd) என்ற 46 வயது கறுப்பின மனிதருக்கு நேர்ந்த துயரம். மே 25-ம் தேதி மாலை 20 டாலர் நோட்டு ஒன்றைக் கடையில் கொடுத்து சிகரெட் வாங்கினார் ஃபிளாய்டு. ஆனால், அது கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் கடையில் வேலை பார்க்கும் நபருக்கு எழுந்தது.

கடைக்காரர் போலீஸுக்கு போன் செய்ய, ஏழே நிமிடங்களில் போலீஸ் படை வந்துவிட்டது. ஃபிளாய்டு அந்த நேரத்தில் கடைக்கு அருகிலேயே காரில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். போலீஸார் அவரை காரிலிருந்து வெளியில் இழுத்து, கையில் விலங்கு போட முயற்சி செய்தனர். ஃபிளாய்டு எதிர்ப்பு தெரிவித்து, ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ என்று வாதாடினார். அப்போதும் அவர் கையில் விலங்கு போட்டுவிட்டனர். ஆனால், போலீஸ் வாகனத்தில் அவர் ஏற மறுத்தார்.

உடனே போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் (Derek Chauvin) என்பவர் அவரைத் தரையில் பிடித்துத் தள்ளி, அவர் கழுத்தில் தன் கால் முட்டியை வைத்து முழு பலத்தையும் பிரயோகித்து அழுத்தினார். சாலையில் சென்றவர்கள் அதைப் பார்த்துப் பதறினர். சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். ‘இப்படி வன்முறையைப் பிரயோகிக்க வேண்டாம்’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், டெரெக் சாவின் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

எரியும் அமெரிக்கா... எண்ணெய் வார்க்கும் ட்ரம்ப்!

கழுத்தில் இப்படி அழுத்தியதால், ஃபிளாய்டு திணறினார். ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’’ என்று கதறினார். ‘‘தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்’’ என்று பலமுறை கெஞ்சினார். எதற்கும் டெரெக் சாவின் அசைந்து கொடுக்கவில்லை. அருகிலிருந்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். எட்டு நிமிடங்களுக்கும் மேல் இப்படிக் கழுத்தை டெரெக் சாவின் அழுத்தியபடி இருக்க, ஃபிளாய்டின் அபயக்குரல் அதன் பிறகு கேட்கவில்லை. கால் வலித்திருக்குமோ என்னவோ, கடைசியாக டெரெக் சாவின் எழுந்த பிறகு ஃபிளாய்டை மற்ற அதிகாரிகள் புரட்டிப்போட்டனர். ஒரு சடலம்போல அசைவற்றுக் கிடந்தார் அவர். மருத்துவமனைக்குத் தூக்கிப் போய், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டனர் போலீஸார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபிளாய்டு சித்ரவதை செய்யப்படும் காட்சி, அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்காத, கைகளில் விலங்கிடப்பட்ட ஒருவரை இப்படிப் போலீஸார் நடத்தியது, அமெரிக்க மக்கள் அனைவரையும் கொதிப்பில் ஆழ்த்தியது.

ஃபிளாய்டு சமீபத்தில்தான் மின்னியாபோலிஸ் நகரில் குடியேறி யிருந்தார். இளம் வயதில் ஒரு கொள்ளை வழக்கில் சிக்கி சில ஆண்டுகள் சிறையில் இருந்தவர், விடுதலை பெற்ற பிறகு மனம் திருந்திய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். சமீபகாலம் வரை அவர் பார்த்துவந்த வேலை, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட அந்தக் கடைக்கு அவர் அடிக்கடி வருவதுண்டு. ‘‘நட்பான வாடிக்கையாளராகவே அவர் இருந்தார். எப்போதும் எந்தப் பிரச்னையும் செய்ததில்லை’’ என்கிறார் அந்தக் கடையின் உரிமையாளர். ஒரு சின்ன சந்தேகம் ஃபிளாய்டின் உயிரைப் பறித்துவிட்டது.

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட நான்கு கோடிப் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர். இறப்பிலும், வேலை இழப்பிலும் கறுப்பினத்தவர்களுக்கே பாதிப்பு அதிகம். இதனால் நீறுபூத்த நெருப்பாகக் கோபம் கனன்று கொண்டிருந்தது. ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நேர்ந்த முடிவு, அந்தக் கனலை விசிறிவிட்டுவிட்டது. ஃபிளாய்டுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுக்கப் போராட்டங்கள் பரவின. அவை வன்முறையில் முடிந்தன. போலீஸ் வாகனங்களைக் கொளுத்துவதும் கடைகளைச் சூறையாடுவதும் தொடர்கின்றன.

எரியும் அமெரிக்கா... எண்ணெய் வார்க்கும் ட்ரம்ப்!

ஃபிளாய்டைக் கைதுசெய்த நான்கு போலீஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெரெக் சாவின் கைது செய்யப்பட்டார். அவர்மீது, ‘கொலை செய்யும் நோக்கமில்லாமல் கைதியைக் கையாண்டு இறப்பு ஏற்படுத்தினார்’ என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், ‘இதைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும். வேடிக்கை பார்த்த அதிகாரிகளும் குற்றவாளிகள்தான். அவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று கோருகிறார்கள் போராடும் மக்கள்.

இந்தப் போராட்டத்தை அடக்க நினைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்த அபத்தங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டன. போராட்டம் நடத்துபவர்களை ‘அடியாட்கள்’ என்று திட்டிய ட்ரம்ப், ‘வேட்டை நாய்களை அவர்கள்மீது ஏவிவிட வேண்டும்’ என்று கொதித்தார். ‘சூறையாடல்கள் நிகழ்ந்தால், துப்பாக்கி குண்டுகளுக்கு நீங்கள் இரையாக நேரிடும்’ என ட்விட்டரில் எச்சரித்தார். அவரின் இந்தப் பதிவை ‘வன்முறையைப் பெரிதுபடுத்தும்விதமாக உள்ளது’ என ட்விட்டர் இணையதளம் மறைத்தது. அமெரிக்க அதிபர் என்ற பதவிக்கே அவமானம் ஏற்படுத்தும் சம்பவமாக இது அமைந்தது. ‘அமெரிக்க அதிபராக இருந்த யாரும் இதுவரை தங்கள் சொந்த நாட்டின் மக்கள் மத்தியில் வெறுப்பு நெருப்பைத் தூண்டிவிடும் வேலையைச் செய்ததில்லை’ என்பது ட்ரம்ப் ஏற்படுத்திக் கொடுத்த இன்னொரு ‘பெருமை.’

இதனால் போராட்டம் பரவியதே தவிர, குறையவில்லை. நியூயார்க் மற்றும் சிகாகோவிலிருக்கும் ட்ரம்பின் வியாபார நிறுவனங்களை மக்கள் முற்றுகையிட்டனர். அதிபரின் வெள்ளை மாளிகை அருகிலேயே கூடிய போராட்டக்காரர்களை கண்ணீர்ப்புகை குண்டு வீசி கலைக்க வேண்டியிருந்தது. ட்ரம்ப்பைப் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை நிலவறைக்குக் கூட்டிச் சென்றதாகவும் அமெரிக்க மீடியாக்கள் சொல்கின்றன.

ஜார்ஜ் ஃபிளாய்டு - டெரெக் சாவின்
ஜார்ஜ் ஃபிளாய்டு - டெரெக் சாவின்

ஃபிளாய்டு இறந்து ஐந்து நாள்கள் கழித்து, அவர் குடும்பத்தினருடன் பேசி நிலைமையைச் சீர் செய்ய முயன்றார் ட்ரம்ப். அவருக்கு அனுதாபம் தெரிவித்தோ, துக்கம் விசாரித்தோ பழக்கமில்லை அல்லவா... அதனால் அதுவும் சொதப்பல்தான். ஃபிளாய்டின் அண்ணன் பிளோனிஸ் அதை விளக்குகிறார். ‘‘அவர் பேசியதை மட்டும் நான் கேட்க வேண்டும் என நினைத்தார். நான் அவரிடம் எங்கள் துயரத்தைச் சொல்ல முயன்றேன். ஆனால், ‘நீங்கள் சொல்லும் எதையும் நான் கேட்கத் தயாராக இல்லை’ என்று ட்ரம்ப் கோபமாகச் சொன்னார்.’’

பல பிரபலங்கள் ட்ரம்ப்பை கண்டித்துள்ளனர். ‘‘அநீதி மற்றும் முட்டாள்தனத்தின் அடையாளம் ட்ரம்ப். அவர் ஒரு நிறவெறியர்’’ என்கிறார், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.

மக்கள்மீது அக்கறையில்லாத ஒருவர் பதவிக்கு வந்தால், அந்த நாடு என்ன பாடுபடும் என்பதற்குச் சாட்சியாக மாறியிருக்கிறது அமெரிக்கா.