Published:Updated:

அமெரிக்க தேசியக் கொடியுடன் மருகிய மனைவி! போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் இறுதிச்சடங்கில் சோகம்

மக்களின் உரிமைக்காக மட்டுமல்ல, தன் உரிமைக்காகவும் போராடியவர் சந்தீப் சிங்.

சந்தீப் சிங் குடும்பம்
சந்தீப் சிங் குடும்பம்

சமீபத்தில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் தலிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹூஸ்டன் நகரில், கார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உள்ளேயிருந்த நபர் சுட்டதில் சந்தீப் சிங் இறந்தார். அவர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கக் காவல் துறையையும் கலங்கடித்தது. அமெரிக்காவில், கடமையில் கண்ணும்கருத்துமாக இருக்கும் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து கொலைசெய்யப்பட்டு வருகின்றனர். தன் போலீஸ் பணிக்கிடையே பல்வேறு சமூகப் பணிகளிலும் சந்தீப் சிங் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் சிங் இறுதி ஊர்வலம்
சந்தீப் சிங் இறுதி ஊர்வலம்

கடமையில் நேர்மை, மக்களின் உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறைகொண்ட போலீஸ் அதிகாரியாக சந்தீப் சிங் இருந்தார். எதற்காகவும் தன் உரிமையை சந்தீப் சிங் விட்டுக்கொடுத்ததில்லை. சீக்கியர்களின் முதல் அடையாளம் தலையில் அணியும் டர்பன். இந்திய ராணுவம் மற்றும் போலீஸில் டர்பன் அணிந்து பணியாற்ற அனுமதி உண்டு. ஆனால், அமெரிக்க ராணுவம் மற்றும் போலீஸில் டர்பன் அணிந்து பணியாற்ற அனுமதியில்லை. அமெரிக்க போலீஸில் 10 ஆண்டுகளுக்கு முன் பணிக்குச் சேர்ந்த சந்தீப் சிங், டர்பன் அணிந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று நீதிமன்ற படிக்கட்டு ஏறி, அதில் வெற்றியும்பெற்றார். அமெரிக்காவில் டர்பன் அணிந்து போலீஸ் பணியை மேற்கொண்ட முதல் சீக்கியர் இவர்தான்.

தன் துறைக்குள் தனக்கான உரிமையை விட்டுக்கொடுக்காத சந்தீப் சிங்கின் உடல் அடக்கம் நடைபெற்றது. பல மணி நேரம் நடந்த ஊர்வலத்தில் ஏராளமான சீக்கிய மக்கள், ஹூஸ்டன்வாழ் இந்தியர்கள், போலீஸ் அதிகாரிகள் சோகத்துடன் பங்கேற்றனர். சந்தீப் சிங்கின்மீது அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் மேலே ஹெலிகாப்டர் பறந்துசென்றது. 21 குண்டுகள் முழங்க சந்தீப் சிங்கின் உடல் அடக்கம் நடந்தது.

அற்புதமான குணம்கொண்ட மகனை இந்த நாட்டுக்குப் பெற்றுத் தந்துள்ளீர்கள்.
கமிஷனர் அட்ரியன் கார்சியா
`இதயங்கள் சுக்குநூறாக உடைந்துவிட்டன!'- சீக்கிய அதிகாரி சந்தீப் சிங்குக்காக வருந்தும் ஹூஸ்டன் மக்கள்

முன்னதாக, அவரின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்த அமெரிக்க தேசியக் கொடியை எடுத்து அவரின் மனைவியிடத்தில் ஹாரீஸ் கவுண்டி ஷெரிஃப் எட் கன்ஸாலோஸ் வழங்கினார். அமெரிக்க தேசியக் கொடியைக் கையில் வாங்கிக்கொண்ட அவரின் மனைவி, அதை வாஞ்சையோடு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மருகியது சுற்றியிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது. சந்தீப் சிங்கை போலீஸ் பணியில் அமர்த்திய கமிஷனர் அட்ரியன் கார்சியா சந்தீப்சிங்கின் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு, "பாபா நீங்கள் நல்ல மகனைப் பெற்றெடுத்துள்ளீர்கள். தங்கம்போலக் குணம்கொண்ட உங்கள் மகனை இவ்வளவு சீக்கிரம் நீங்கள் இழந்தது எங்களுக்குப் பெரும் துயரத்தைத் தந்துள்ளது'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் ஆறுதல் கூறினார்.

முன்னதாக ஹூஸ்டன் அருகே சைப்ரஸ் நகரிலுள்ள பெர்ரி சென்டரில் சந்தீப் சிங்குக்காக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அரங்கத்தில் 8,000 பேர்தான் அமர முடியும். கூட்டம் அதிகமாகக் கூடியதால், அரங்கத்துக்கு வெளியேயும் மக்கள் வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.

சந்தீப் சிங்குக்கு இறுதி அஞ்சலி
சந்தீப் சிங்குக்கு இறுதி அஞ்சலி

கடந்த 2015-ம் ஆண்டுமுதல் இதுவரை, டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் சந்தீப் சிங் 50-வது போலீஸ் ஆவார். சந்தீப் சிங்கின் இறுதி ஊர்வலம் ஃபேஸ்புக், யூடியூப்பில் 'லைவ் 'செய்யப்பட்டது. நியூயார்க், நியூஜெர்சி, சான்ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இந்தியாவில் அவர் பிறந்த பஞ்சாப் மாநிலத்திலும் பல இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சந்தீப் சிங்குக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் கல்விச் செலவுக்காக 6,60,000 டாலர்களும் மற்றும் ஹூஸ்டன்வாழ் சீக்கியர்கள் சார்பில் 5,70,000 டாலர்களும், அமெரிக்கவாழ் சீக்கியர்கள் சார்பில் 2,00,000 டாலர்களும் சந்தீப் சிங்கின் குடும்பத்துக்காக நிதியாகத் திரட்டப்பட்டது.