Published:Updated:

இலங்கை: ஊழல், குடும்ப ஆட்சி, போர்க்குற்றம் - மக்களின் போராட்டமும் அரங்கேறும் அரசியல் மாற்றங்களும்!

இலங்கை: ராஜபக்சே சகோதரர்கள்

“நீங்கள் எடுத்ததையெல்லாம் திருப்பி ஒப்படைத்து விட்டுப் போய் விடுங்கள்” என்று கேட்டு நாடு முழுவதிலும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், ராஜபக்ஸக்களின் மீதான ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

இலங்கை: ஊழல், குடும்ப ஆட்சி, போர்க்குற்றம் - மக்களின் போராட்டமும் அரங்கேறும் அரசியல் மாற்றங்களும்!

“நீங்கள் எடுத்ததையெல்லாம் திருப்பி ஒப்படைத்து விட்டுப் போய் விடுங்கள்” என்று கேட்டு நாடு முழுவதிலும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், ராஜபக்ஸக்களின் மீதான ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

Published:Updated:
இலங்கை: ராஜபக்சே சகோதரர்கள்
தன்னை அரசியல் அரங்கிற்குக் கொண்டுவந்து அதிகாரத்தைக் கையளித்த மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ சம்மதம் சொல்லிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. `மகிந்த இல்லாத இடைக்கால அனைத்துக்கட்சி அரசு ஒன்றை உருவாக்க கோத்தபாய ஒப்புக்கொண்டார். 20 பேர் கொண்ட அமைச்சரவை விரைவில் பதவியேற்கும்' என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேன வெள்ளிக்கிழமை மாலை சொல்லியிருக்கிறார். ஆனால், இதை பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ரோகன் வெலிவிட்டா மறுத்திருக்கிறார். மகிந்த ராஜபக்ஸவை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த நோக்கத்தையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என்கிறார் அவர். இலங்கைக்கு புதிய பிரதமர் வருவாரா, அது ராஜபக்ஸ குடும்பத்தில் இது என்னென்ன குழப்பங்களை ஏற்படுத்தும் என்று இனிதான் தெரியும்.
ரணில் - சிரிசேனா
ரணில் - சிரிசேனா

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்ஸ குடும்பத்தினரையும் பாதித்திருக்கிறது. ஆனால் இந்தப் பாதிப்பு வேறு விதமானது. இது ராஜபக்ஸக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் விளைவான பாதிப்பு. அதோடு யார் குற்றவாளி, யார் சுற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கான போட்டியும் கூட.

ஏனென்றால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவை வீட்டுக்குப் போகுமாறு மக்கள் பகிரங்கமாகவே கூறுகிறார்கள். தொடக்கத்தில் இதுகுறித்து அதிகம் கவலைப்படாமல் இருந்த கோத்தபாய ராஜபக்ஸ, இப்பொழுது தவிர்க்க முடியாமல் சில மாற்றங்களைச் செய்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார். இதற்காக அவர் அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சரவையை உருவாக்கினார். இதில் சாமல் ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ என மூன்று ராஜபக்ஸக்கள் அமைச்சர் பதவிகளை இழந்தனர்.

இதில் முக்கியமாகக் குறி வைக்கப்பட்டவர் பஸில் ராஜபக்ஸ. நிதியமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஸ பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டு பகிரங்கமாகவே பேசப்படுபவர். ஊழலில் மிஸ்டர் 10% என்று பேரெடுத்தவர். அரசியலுக்காக ஆட்களை விலைக்கு வாங்கும் குதிரைப் பேரம் போன்றவற்றுக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர். இதனால்தான் நிதியமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஸவின் அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே
Twitter/@GotabayaR

ஆனாலும் மக்களின் கோபம் அடங்கவில்லை. நிலைமை சீராகும்வரையில் அது தீரப்போவதுமில்லை. 'பிரதமராக இருக்கும் மகிந்த ராஜபக்ஸவும் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின. எதிர்க்கட்சிகள் தொடக்கம் ஆளும் கட்சிக்குள்ளும் ஒரு தரப்பு எனப் பல தரப்புகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகக் குரல் எழுப்பின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இதனால் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சி செய்தார். அந்த இடைக்கால அரசாங்கம் எப்படி அமையும், அதில் யார் பிரதமர் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்பதைக் குறித்துப் பல கதைகள், ஊகங்கள் அடிபட்டன.

தன்னை அழைத்தால்தான் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்வேன் என்று அறிவித்தார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஆனால், அவருக்குத் துணையாக எந்தப் பலமும் இல்லை. பாராளுமன்றத்தில் அவருடைய கட்சியான ஐ.தே.க. சார்பில் ஒற்றை ஆளாகவே இருக்கிறார். ஆளும் கட்சியிலிருக்கும் டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ஸ, தினேஸ் குணவர்த்தன போன்றோரின் பெயர்கள் இந்த இடைக்கால அரசாங்கத்துக்குக்கான பிரதமர் பதவிக்குப் பேசப்படுகிறது. ஆனால் 'நானே தொடர்ந்து பதவியில் இருப்பேன்' என்று சொன்னார் மகிந்த ராஜபக்ஸ. இதை உறுதிப்படுத்திக் கூறுகிறார் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ. இது மட்டுமல்ல, அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் (சித்தப்பாவையும்) மறைமுகமாக விமர்சிக்கிறார், சாடுகிறார் நாமல். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று நாமல் கூறுவது, கோத்தபாயவின் மீதான கோபம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாமல் ராஜபக்சே
நாமல் ராஜபக்சே

இதேவேளை ஜனாதிபதியின் செயல்பாடுகள், அதிரடித் தீர்மானங்கள், ராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்துள் உள்நுழைத்துக் கொள்வது உட்பட பல விடயங்களில் தொடக்கத்திலிருந்தே முரண்பட்டுக் கொண்டிருந்தவர் மகிந்த ராஜபக்ஸ. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியின் (சகோதரரின்) தவறான தீர்மானங்களே காரணம் என்று பட்டும் படாமலும் சொல்லி வருகிறார் மகிந்த ராஜபக்ஸ. இதற்கு ஒரு உதாரணமாக மேலும் சொல்லப்படுவது, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி, நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை. அரசியலில் ஜூனியராக இருக்கும் அலி சப்ரிக்கு ஜனாதிபதி எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஏனைய ராஜபக்ஸக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவே இப்பொழுது ராஜபக்ஸ குடும்பத்துக்குள்ளும் நடந்து கொள்கிறார் கோத்தபாய. இது கடுமையான அதிருப்தியை சகோதரர்களிடத்திலே ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரே. தன்னுடைய அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்ஸவை வளர்த்துக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஸவுக்கு இப்பொழுது உருவாகியுள்ள சூழல் எதிர்மறையாகவே உள்ளது. நாமலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி விட்டது என்பதை மகிந்த ராஜபக்ஸ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேறு விடயம். ஆனாலும் தன்னால் முடிந்தளவுக்கு அரசியல் அரங்கில் நிற்க வேண்டும் என்பதே மகிந்தவின் முனைப்பு. இதற்காகவே அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டார்.

அப்படிச் சவால்களை எதிர்கொண்டு தன்னைத் தக்க வைத்தவருக்கு, தன் மூலமே அரசியல் அரங்கிற்கு – அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்ட கோத்தபாய எதிராக – சவாலாக மாறியிருப்பது எரிச்சலையூட்டுகிறது. ஆனாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் முன்னே எதுவும் செய்ய முடியாமல் கையால் ஆகாதவராக இருக்கிறார் மகிந்த. இதனால்தான் தனக்கான ஆதரவை அவர் பல வழிகளிலும் திரட்டிக் கொண்டிருக்கிறார்.

ராஜபக்சே குடும்பம்
ராஜபக்சே குடும்பம்
இதன் வெளிப்பாடாகவே மாகாணசபை உறுப்பினர்களின் அணி தொடக்கம் சில அமைப்புகள் வரையில் மகிந்த ராஜபக்ஸவே தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன. இதேவேளை மௌனமாக இருந்து தனக்குச் சாதகமான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் பஸில் ராஜபக்ஸ.

இதேவேளை “நீங்கள் எடுத்ததையெல்லாம் திருப்பி ஒப்படைத்து விட்டுப் போய் விடுங்கள்” என்று கேட்டு நாடு முழுவதிலும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், ராஜபக்ஸக்களின் மீதான ஊழல், பொதுச் சொத்துகளைக் கொள்ளையிடுதல், குடும்ப ஆட்சி, அதன் நிமித்தமான எல்லையற்ற அதிகாரம், போர்க்குற்றம் எனத் தொடரும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்தளவு குற்றச்சாட்டுகளின் மத்தியில்தான் கடந்த தேர்தலின்போது மக்கள் ராஜபக்ஸக்களை ஆதரித்திருந்தனர். ஆனால், நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்க்கைச் சுமையைக் கூட்டி, அவர்களுடைய தாங்கு சக்தியின் எல்லைக்குத் தள்ளியிருப்பதால் அவர்கள் இப்பொழுது தாங்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்குவதற்கு முன்வந்துள்ளனர். அதன் வெளிப்பாடே ராஜபக்ஸக்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் மக்களின் போராட்டம்.

மக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ராஜபக்ஸக்கள், ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களுக்குள் அடிபடத் தொடங்கியுள்ளனர். கடந்த 18.04.2022 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ, தன்னுடைய கைகள் எப்பொதும் சுத்தமானவை என்று குறிப்பிட்டார். இதன் பொருள், 'ஏனைய ராஜபக்ஸக்களோடு தன்னை இணைத்துப் பார்க்க வேண்டாம்' என்பதாகும். மற்ற ராஜபக்ஸக்கள் கறைப்பட்டவர்கள் என்பதால் அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காகவே ஜனாதிபதி இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று இதைக் குறித்து அரசியல் அவதானிகள் கருத்துரைக்கின்றனர்.

வெளியே நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், தமக்குள்ளே அதிகாரப் போட்டிக்காக அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராஜபக்ஸக்கள். இப்படி ராஜபக்ஸக்களின் உள்ளரங்கில் நெருக்கடியும் முரணும் இடைவௌியும் அதிகாரத்துக்கான போட்டியும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. மக்களோ எந்த ராஜபக்ஸவும் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
AP
ராஜபக்ஸக்களோ எது வந்தாலும் வரட்டும். ஆட்சியை விட்டு, அதிகாரத்தை விட்டுப் போக மாட்டோம். எந்த அலைகளுக்கும் தாக்குப் பிடிப்போம் என்று விடாப்பிடியாக நிற்கிறார்கள். அவர்களுடைய கையை மீறி நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. வரவர நெருக்கடி கூடுகிறது. நெருக்கடி கூடக் கூட மக்களின் கோபம் அதிகரிக்கும். மக்களின் கோபம் கூடக் கூட அதிகாரத்தை அசைக்கவே முற்படுவர்.

இது புரிந்தும் புரியாத மாதிரி, அதிகாரத்தை வைத்திருக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர் ராஜபக்ஸக்கள். ஒரு காலத்தில் 'எதற்கும் அஞ்சமாட்டோம்' என்று மக்கள் ஆதரவோடு நிமிர்ந்து நின்ற ராஜபக்ஸக்கள் இன்று வெளியே வரவே முடியாமல் உள்ளரங்கில் பதுங்கிக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை இருளில் புதைப்பதாகவே அமையும். இப்பொழுது நாடு மின்தடை, எரிபொருள் பற்றாக்குறையினால் இருளில் இருக்கிறது. இந்த இருள்தான் ராஜபக்ஸக்களின் எதிர்காலத்தையும் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

- இலங்கையிலிருந்து கருணாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism