Election bannerElection banner
Published:Updated:

``சீனாவில் இனிமேல் சீக்கிரம் கெட்டது நடக்கும்!''- பா.ஜ.க ஶ்ரீனிவாசன் தரும் புது விளக்கம்!

ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி
ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி

''இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் இருபெரும் நாடுகள். இந்த இரு நாடுகளுக்கிடையே போர் வரவே வராது'' என்கிறார், அரசியல் செயல்பாட்டாளரான ஆழி.செந்தில்நாதன்.

'சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்' என்ற கோஷத்தோடு டி.வி, மொபைல் உள்ளிட்ட சீனத் தயாரிப்புகளை அடித்து உடைத்து தேசப்பற்றை(?!) நிரூபித்துவருகின்றனர் ஒரு பிரிவினர். ஆனால், ''நம் வீட்டுக் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் ஆரம்பித்து, குஜராத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் வல்லபபாய் பட்டேல் சிலை வரை அத்தனையும் சீனா தயாரிப்புதான்... என்ன செய்யப்போகிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டு அதிரவைக்கின்றனர் மற்றொரு பிரிவினர்.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை, சர்வதேச சமூகத்தை உற்றுநோக்க வைத்திருக்கிறது என்றால், இந்தியாவிலோ உணர்ச்சியை உசுப்பி வருகிறது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதையடுத்து, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவின் 20 வீரர்களும் சீனத் தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானதுமே, நாட்டு மக்கள் அனைவரும் சீனாவுக்கு எதிராகக் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

''சீன உணவகங்களை மூட வேண்டும்; சீன உணவு வகைகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்'' என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. இந்தியாவுக்குள் இறக்குமதியாகிவரும் 500 வகையான சீனப் பொருள்களைப் பட்டியலிட்டுள்ள அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு, 'இந்தப் பொருட்களையெல்லாம் இனி புறக்கணிக்கப்போகிறோம்' என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதால், சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை' என்று தடாலடியாக போட்டுடைத்திருக்கிறார்.

இந்தியா - சீனா இடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் பதற்ற சூழ்நிலை குறித்து, அரசியல் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான ஆழி.செந்தில்நாதனிடம் பேசியபோது,

''எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்குமிடையே என்ன நடந்தது என்பதிலேயே இன்னும் ஒரு தெளிவான பதிலைச் சொல்லவில்லை மத்திய அரசு. ஆரம்பத்தில், 'சீன ராணுவம் எல்லை தாண்டி வந்து நமது வீரர்களைத் தாக்கியது' என்றார் பிரதமர். அவரே இப்போது, 'சீன ராணுவம் எல்லை தாண்டி வரவில்லை' என்கிறார். ஆக, இதுகுறித்து மத்திய அரசிடம் உறுதியான ஒரு நிலைப்பாடு இதுவரை இல்லை. அதனால்தான் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசி வருகிறார்கள்.

'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' என்கிறார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். 'சீன உணவுகளைச் சாப்பிடாதீர்கள்; சீன நாட்டு பொருள்களைப் புறக்கணியுங்கள்' என்கிறார் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. உண்மையிலேயே இந்தப் பிரச்னையைத் தீர்க்க நினைப்பவர்கள், இப்படி மக்களிடையே உணர்ச்சிகரமாகப் பேசி தேசபக்தி பிரசாரம் செய்துகொண்டிருக்க மாட்டார்கள். இவர்களது வெறியூட்டும் பேச்சைக்கேட்டு, ஒருசிலர் டி.வி, செல்போனையெல்லாம் தூக்கிப்போட்டு உடைத்துக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் நாடகம். ஆனால், இதையெல்லாம் எடுத்துச் சொல்வதாலேயே நமக்குத்தான் 'தேசத் துரோகி' என்று பட்டம் சூட்டுவார்கள்.

சாதாரணமாக நாம் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய செல்போன், டி.வி போன்ற சின்னச்சின்ன பொருள்கள்தான் சீனா இறக்குமதிப் பொருள்கள் என்று மக்கள் எண்ணிவிடக் கூடாது. இவையெல்லாம் இறக்குமதியின் சின்னதொரு அம்சம்தான். இவற்றையெல்லாம் தாண்டி, உற்பத்தி நிறுவனங்களின் மூலதனப் பொருள்களான இயந்திரங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும்போதுதான், அது இந்தியாவுக்கு லாபகரமானதாக இருக்கும். ஏனெனில், அதே இயந்திரத்தை வேறு வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்கிறபோது, அதன் விலை 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 20 லட்சம் ரூபாயில் ஓர் இயந்திரத்தை சீனாவிடமிருந்து நாம் வாங்கினால், அதே பொருளை ஜெர்மனியிலிருந்து வாங்கும்போது விலை 2 கோடி ரூபாயாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில், சீனா மீது பொருளாதாரத் தடை கொண்டுவந்தால், யாருக்கு நஷ்டம்?

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

இன்றைய சூழலில், சீனாவின் பொருளாதார ஆதிக்கம் என்பது உலகளாவிய அளவில் பரந்து விரிந்திருக்கிறது. எனவே, நேரடியாக நாம் சீனத் தயாரிப்புகளை வாங்காமல் புறக்கணித்து, வேறு நாட்டுத் தயாரிப்புகளை வாங்கினால்கூட, அந்தப் பொருளின் மூலப்பொருளிலும் சீனாவின் பங்கு இருக்கிறது. அதாவது, சீன நாட்டுத் தயாரிப்பு செல்போன்களை இனி வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு, கொரியன் நிறுவனமான 'சாம்சங்' அல்லது அமெரிக்க நாட்டின் 'ஐபோன்'களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு நிறுவனங்களின் செல்போன் தயாரிப்புகளுமே அதிகபட்சமாக சீனாவின் பங்களிப்போடுதான் தயாராகிவருகின்றன. அதாவது, முக்கியமான மூலப்பொருள்கள் சீனாவிலிருந்துதான் தயாராகிறது. அப்படியென்றால், இந்த செல்போன்களுக்காக நாம் கொடுக்கும் விலையில் 75 விழுக்காடு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும், மீதம் உள்ள 25 விழுக்காடு சீனாவுக்குமாகத்தான் போய்ச்சேரும்.

எனவே, சீனாவை நாம் எதிர்ப்பதாக இருந்தால், அவர்களைவிடவும் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை அடைவதுதான் உண்மையான எதிர்ப்பாக இருக்கமுடியும். அதைவிடுத்து, போர், புறக்கணிப்பு என்றெல்லாம் சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதான். எனவே, 'சீனப் பொருள்களை புறக்கணிப்போம்' என்று சொல்வதைவிடவும், 'பொருளாதார ரீதியாக சீனாவை வெல்வோம்' என்று சொல்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.

ஏனெனில், நம் நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களை விடவும் 3 மடங்கு பொருள்களை சீனாவிடமிருந்து நாம் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்கு நாம் ஏற்கெனவே முயற்சி செய்திருக்க வேண்டும். இப்போது, போர்ச்சூழல் வந்தபிறகுதான், 'சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்' என்ற அளவில் யோசிப்பீர்கள் என்றால், அது எப்படி சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும்? ஏற்கெனவே, தொடர்ச்சியாக பொருளாதாரப் பின்னடைவில் இருந்துவருகிற இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்குப் பிறகு இன்னும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

பொருளாதார ரீதியாக சீனாவை நாம் வெல்வதற்கு இப்போது முயற்சி செய்தால்கூட, குறைந்தபட்சம் இன்னும் 20 வருடங்கள் தேவைப்படும். ஏனெனில், 30 வருடங்களுக்கு முன்பே சீனா இந்தப் பொருளாதார மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துதான் இன்றைக்கு இந்த இடத்தில் வந்து நிற்கிறது. மனித வளம் - மாகாணங்களுக்கான முழு உரிமை என இரண்டையும் மிகச்சரியாகப் பயன்படுத்தித்தான் இன்றைய வெற்றியை சீனா பெற்றிருக்கிறது. இந்த முற்போக்குச் சிந்தனைகளையெல்லாம் இந்தியா எப்போது கையாள்கிறதோ அன்றைக்குத்தான் நாம் வல்லரசாக முடியும்.

ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி
ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி

அடுத்ததாக, அரசியல் சமன்பாட்டுக்கான வழிமுறை என்பது, பொருளாதாரம், அரசியல், ராஜதந்திரம்... வேறு வழியே இல்லை என்ற சூழலில்தான் போர்! இன்றைய உலக அரசியலில், யாரையும் நாம் 'எதிரி' என்றே சொல்ல முடியாது. 'போட்டியாளர்' என்றுதான் சொல்ல வேண்டும். ஆக, முதலில் பொருளாதார ரீதியாக நாம் பலம் பெற்றால்தான், அடுத்து அரசியல் ரீதியாக பெரிய ஆளாக முடியும்; அப்போதுதான் நமது ராஜதந்திரமும் பலிக்கும். இப்படி வலுவான நிலையில் இருந்தால்தான், நம் மீது கை வைப்பதற்கு மற்ற நாடுகள் தயங்கும் நிலையும் ஏற்படும். இதில் எதுவுமே இல்லையென்கிறபோதுதான், இறுதியாகப் 'போர்' என்ற நிலைப்பாட்டுக்கு வரமுடியும். ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நாடுகளான இந்தியா - சீனா இடையே போர் வருவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று'' என்றார் தெளிவாக.

இந்த நிலையில், இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையில், மத்திய பா.ஜ.க அரசு மீதான விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்...

''எல்லையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பிரதமர் தெளிவாக விளக்கிவிட்டார். அதாவது, 'எல்.ஏ.சி எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் தலா 3 கி.மீ தூரம் வரை இரு நாடுகளுக்குமே உரிமை கிடையாது. இடைப்பட்ட இந்த 6 கி.மீ தூரத்துக்குள் இரு நாட்டு ராணுவமும் வரக்கூடாது. இதுதான் இந்தியா - சீனா இடையிலான எல்லை ஒப்பந்தம்.

இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

ஆனால் சீன ராணுவம் இந்த ஒப்பந்தத்தை மீறி, எல்.ஏ.சி பகுதியை நோக்கி வந்ததுதான் பிரச்னை. அதனால்தான் நமது ராணுவமும் சீன ராணுவ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக எல்.ஏ.சி -யை நோக்கிப் பயணித்தது. ஆக, சீன ராணுவம் நமது எல்லைக்குள் வரவில்லை. ஆனால், ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது. இதைத்தான் நமது பிரதமரும் குறிப்பிட்டுள்ளார். இதில் குழப்பத்துக்கு எதுவுமே இல்லை.

எல்லையில், நமது ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகிவிட்டனர் என்கிறபோது, மக்கள் உணர்ச்சிவசப்பட்ட கொதிநிலையில் இருக்கிறார்கள். அதனால், சீனத் தயாரிப்புகளை போட்டுடைக்கிறார்கள். இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னை என்று அரசு வேண்டுமானால், மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம்; சமுதாயம் அப்படி கடைப்பிடிக்க முடியாத நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரும் பலியாகியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும்கூட, மக்கள் மத்தியில் உணர்வலைகள் எழாவிட்டால் அது என்ன தேசம்?

சீனாவுக்கு நாம் அனுப்புகிற பொருள்களைவிடவும், அவர்கள் நமக்கு அனுப்புகிற பொருட்கள் அதிகம். எனவே, 50 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையில்தான் நாம் இருந்துவருகிறோம். அதனால்தான் நமது பிரதமர் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்துகிறார்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

இந்த கொரோனா காலகட்டத்தில், 'சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்; இந்தியப் பொருளாதாரத்தை வளர்ப்போம்' என்ற நிலைப்பாட்டையெல்லாம் எடுத்தபிறகு, இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி 6 பில்லியன் டாலர் அளவு வரையிலும் குறைந்திருக்கிறது என்றால், நமது கருத்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.

சீனா, ஒரு சர்வாதிகார நாடு; ஆனால், நாம் ஜனநாயக நாடு. நல்லதோ கெட்டதோ ஜனநாயக நாட்டில் மெதுவாகத்தான் நடக்கும். ஆனால், சர்வாதிகார சீனாவில், நல்லதோ கெட்டதோ சீக்கிரமே நடைபெறும். இத்தனை வருடங்களாக நல்லது நடந்துகொண்டிருந்த சீனாவில், இனிமேல் கெட்டது சீக்கிரமே நடைபெறும்.

'சீனப் பொருட்களைப் பயன்படுத்துவது இல்லை' என்ற முடிவை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். இதை மேலும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இப்போது, அமேசானில் ஒரு பொருளை ஆர்டர் செய்ய முயன்றால், 'இது இந்தியப் பொருள்' என்று விளம்பரம் வருகிறது. ஆக, மக்கள் மனதில் மாற்றம் வந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

1930-களில் கதர் இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது, 'இது எப்படி சாத்தியம்...' என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இந்தியாவில் கதர் இயக்கம் வளர வளர இங்கிலாந்தின் மான்செஸ்டரில் மில்களை மூடவேண்டிய நிலைதானே உருவாயிற்று. அதுபோன்றதொரு நிலை சீனாவுக்கும் வரும். என்ன... இது நீண்டநாள் செயல்முறை; உடனே விடை கிடைத்துவிடாது.

கொரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளின் நம்பகத்தன்மையை - 500 கோடி மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது சீனா. ஆக, வர்த்தகத்தில் வேண்டுமானால் அவர்கள் உயரலாம்... நம்பிக்கையில் இறங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு