Published:Updated:

அமெரிக்கா: செய்யாத குற்றத்துக்கு 44 வருடச் சிறை! - என்ன நடந்தது ரோனி லாங் வாழ்க்கையில்?

ரோனி லாங்
ரோனி லாங் ( AP )

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ரோனி லாங் என்ற கறுப்பின அமெரிக்கர், 44 ஆண்டுகளுக்குப் பிறகு `நிரபராதி' என்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது 64 வயதான ரோனி லாங்-குக்கு, ஒரு வெள்ளையினப் பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது அவருக்கு 20 வயது. செய்யாத தவறுக்காகக் கடந்த 44 ஆண்டுகளாகச் சிறையிலிருந்திருக்கிறார்.

ரோனி லாங்
ரோனி லாங்
AP

வடக்கு கரோலினா மாகாணத்தில், 54 வயதான சாரா போஸ்ட் என்ற வெள்ளையினப் பெண்ணை, 1976-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி மாலை தனது வீட்டில் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரோனி லாங் (Ronnie Long) மீது குற்றம்சாட்டப்பட்டது. தனது வீட்டில் தன்னைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாக சாரா புகார் கூறியிருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சாரா போஸ்ட்டை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். மற்ற வழக்குகளுக்காக அங்கிருந்த குற்றவாளிகளில் அவரை வன்கொடுமை செய்த நபரைப்போல யாரேனும் இருக்கிறார்களா என்று அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவர், விதிமீறல் குற்றம் ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ரோனி லாங்-கை அடையாளம் காட்டியிருக்கிறார்.

ரோனி லாங்
ரோனி லாங்
AP

1976, மே 10-ம் தேதி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை ஆகிய குற்றங்களுக்காக லாங்குக்கு 80 ஆண்டுக்காலச் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கும் லாங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதாடப்பட்டது. விசாரணையின்போது சரியான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என்று அப்போது வெளியான செய்திகள் கூறுகின்றன.

இந்த வாதங்கள் ஏற்கப்படாத நிலையில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது ரோனி லாங் தண்டனையை ரத்து செய்ய, பல ஆண்டுகளாகப் பல முறை முறையிட்டிருக்கிறார். சம்பவ இடத்தில் கிடைத்த டி.என்.ஏ சான்றுகள் லாங் குற்றமற்றவர் என்பதை உறுதி செய்தும், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் சிறையிலேயே இருந்து வநதிருக்கிறார். பின்னாளில் சாரா இறந்துவிட்டார். ஆனால், வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டே இருந்து

ரோனி லாங்
ரோனி லாங்
CNN

2005-ம் ஆண்டு, வழக்கின் விசாரணை தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியிருந்தன. சம்பவ இடத்திலிருந்த ஆதாரங்களை மறு ஆய்வு செய்து, டி.என்.ஏ சோதனைக்குச் சமர்ப்பிக்க ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விசாரணையின் முடிவில் கிடைக்கப்பட்ட தலைமுடி மற்றும் ஆடை இழைகள் அனைத்துமே லாங்குடன் ஒத்துப்போகவில்லை.

`ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு கொரோனா.. ஆனால் இறப்புக்கு காரணம்..?!’ -வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை

கடைசியாக நீதிமன்ற மேல்முறையீட்டில், 44 ஆண்டுகளுக்குப் பிறகு, `லாங் குற்றமற்றவர்’ என்று உறுதியானது. இதையடுத்து, ஸ்டான்லி கவுன்ட்டி சிறையிலிருந்து அவர் கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

இது உண்மையானது. நான் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க முயல்கிறேன்.
ரோனி லாங்

2014-ம் ஆண்டு ரோனி லாங்கை திருமணம் செய்துகொண்ட அவரது மனைவி ஆஷ்லீ லாங், அவர் வெளியான அன்றுதான் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். `இது உலகின் சிறந்த பிறந்தநாள் பரிசு. நான் இன்னும் கனவு காண்கிறேன் என்று நினைக்கிறேன்' என்று ஆஷ்லி தெரிவித்தார்.

பலரின் 44 ஆண்டுக்கால சட்டப் போராட்டமும், ரோனி லாங்கின் குடும்ப உறுப்பினர்களின் கனவும் தற்போது நிஜமாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு