`வாழ்க்கை முழுக்கக் கூடவரும் வலி இது!' - தன் கருச்சிதைவு குறித்து மேகன் மார்கெல் உருக்கம்

தாய்மையின் வலியை உணர்த்தும் இந்தக் கட்டுரை பலராலும் நெகிழ்ச்சியுடன் பார்க்கப்பட்டாலும், ஒரு சில இடங்களில் இது பேசு பொருளாகி இருக்கிறது.
``குழந்தையை இழப்பது என்பது தாங்க முடியாத துயரம்” என்று தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவு குறித்து இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கெல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வருத்தம் மேலிட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
``ஜூலை மாதத்தின் அன்றைய நாள் எல்லா நாளையும் போலவே விடிந்தது. காலை உணவைத் தயார் செய்தேன். நாய்களுக்கு உணவளித்தேன். வைட்டமின் மருந்துகளை எடுத்துக்கொண்டேன். காணாமல் போன சாக்ஸை கண்டெடுத்தேன். என் மகன் முடியைப் பிடித்து இழுக்காமல் இருக்க கூந்தலை போனி டெயிலாகக் கட்டிக்கொண்டேன். பின்னர் என் மகனுக்கு டயபர் மாற்றும்போதுதான் அந்தக் கடுமையான வலியை உணர்ந்தேன். குழந்தையை என் கைகளில் வைத்தபடி அப்படியே தரையில் அமர்ந்துவிட்டேன். பின்னர் என்னையும் என் குழந்தையையும் அமைதிப்படுத்த தாலாட்டுப் பாடல் ஒன்றை முணுமுணுத்தேன். ஆனாலும், ஏதோ சரியில்லை என்கிற உணர்வு மட்டும் எனக்குள் வந்தது” என்று அதில் எழுதியிருக்கும் மேகன், சிலமணி நேரத்தில் தான் மருத்துவமனை படுக்கையில் கிடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஹாரியின் கைகளைப் பிடித்தபடி மருத்துவமனையின் அறை ஒன்றில் இருந்தேன் நான். எங்கள் இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தன. ஈடு செய்ய முடியாத இந்த இழப்புக்குப் பிறகுதான் 100 பெண்கள் இருக்கிற ஓர் அறையில் பத்து முதல் இருபது பெண்கள் கருச்சிதைவு ஆனவர்களாக இருக்கக்கூடும் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். இதுபோன்ற நிகழ்வுகள் பொதுவானவையாகப் பார்க்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது வாழ்நாள் முழுவதும் நீங்காத் துயரத்தைக் கொடுத்துவிடும்” என்றும் மேகன் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தாய்மையின் வலியை உணர்த்தும் இந்தக் கட்டுரை பலராலும் நெகிழ்ச்சியுடன் பார்க்கப்பட்டாலும், ஒரு சில இடங்களில் இது பேசு பொருளாகி இருக்கிறது. பொதுவாக, பிரிட்டன் அரச குடும்பத்தினர் தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் ஒருபோதும் பகிர்வதில்லை. குறிப்பாகத் தங்களது இமேஜ் குறையாமல் பார்த்துக்கொள்வதில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள். ஹாரியின் பாட்டியான எலிஸபத் மகாராணிகூட தன்னுடைய அறுபத்தியெட்டு வருட ஆட்சிக்காலத்தில் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் கட்டுரை அல்லது பேட்டி வழியாக வெளியிட்டதில்லை.

ஆனால் ஒரு தாயாக,பெண்ணியவாதியாக,பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் வழக்கறிஞராகப் பன்முகம் காட்டிவரும் மேகன் மார்கெல், அரச குடும்பத்தின் சில பிற்போக்குத்தனமான புரோட்டோகால்களை எப்போதுமே தைரியமாகப் புறந்தள்ளி வருகிறார். குறிப்பாக, குழந்தையை கருவிலேயே இழந்த ஒரு தாயின் வலிமிகுந்த வார்த்தைகளைச் சுமந்தபடி வந்திருக்கும் அவரது இந்தக் கட்டுரை பக்கிங்ஹாம் அரண்மனையையே சலசலக்க வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.