உலகமே ஒற்றை வைரஸுக்கு பயந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஆரம்பநிலையிலேயே சீனா இதைக் கட்டுப்படுத்தாமல் மூடி மறைக்கப் பார்த்தது’ என்று சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் கோபம்கொண்டுள்ளன. இந்தக் கோபம் சீனாவின் உலக வர்த்தகத்துக்கு வேட்டுவைக்கும். அதனால் அமெரிக்கா அல்லது இத்தாலி மீது பழிபோட துடிக்கிறது சீனா. எப்படி? பார்ப்போம்...

சீனாவின் மிக முக்கியமான உயிரியல் ஆய்வுக்கூடம், வூஹான் நகரில் உள்ளது. இங்கு உயிரியல் ஆயுதங்களை சீனா பரிசோதனை செய்வதாகக் குற்றச்சாட்டு உண்டு. கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் ‘வாஷிங்டன் டைம்ஸ்’ பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டது. ‘கனடா நாட்டின் வின்னிபெக் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் சீன வைரஸ் நிபுணர்கள் சிலர், வைரஸ்கள் சிலவற்றை சீனாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பிவைத்தனர். சார்ஸ் நோய் பரவியபோது சவூதி அரேபியாவில் கண்டறியப்பட்ட புதுவிதமான வைரஸ்களும் அவற்றில் அடக்கம். அந்த வைரஸ்களை உயிரியல் ஆயுதமாக மாற்றுவதற்கு வூஹான் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை நடந்தது. அவைதான் தவறுதலாக வெளியில் கசிந்து கொரோனா நோயைப் பரப்பின’ என்பதுதான் அந்தச் செய்தி.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த வைரஸை ‘சீன வைரஸ்’ என்றே குறிப்பிட ஆரம்பித்தார். அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் சிலரும் இதையே செய்தனர்.

இதனால் கடுப்பான சீனா, ‘`அமெரிக்காதான் கொரோனா வைரஸைப் பரப்பியது’’ என்று சொல்ல ஆரம்பித்தது. ஏழாவது உலக ராணுவ விளையாட்டுப் போட்டி 2019 அக்டோபரில் வூஹான் நகரில் நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து ராணுவ வீரர்களும் அதிகாரிகளுமாக 280 பேர் அடங்கிய குழு இதற்காக வந்தது. ‘‘இவர்கள்தான் கொரோனாவை சீனாவில் பரப்பினர். அதன் ஆபத்து எங்களுக்குத் தெரிய தாமதமாகிவிட்டது’’ என்று சீன வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்தது.

இதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஓர் ஆதாரமும் கிடைத்தது. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், அமெரிக்காவில் கொரோனா தாறுமாறாகப் பரவத் தொடங்கிய மார்ச் ஆரம்பத்தில் அவர் ஒரு தகவல் சொன்னார். ‘‘கடந்த சில வாரங்களில் சில அமெரிக்கர்கள் இறந்துபோனதற்கு ஃப்ளூ காரணம் என நாம் நினைத்தோம். ஆனால், அதற்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது’’ என்றார் அவர். இதை யார் கவனித்தார்களோ இல்லையோ, சீனா கவனித்தது.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லிஜியான். சீன அரசின் சார்பில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலையை இவர் செய்துவருகிறார். ‘2019 செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்காவில் கொரோனா இருந்தது. அதை தவறாக `ஃப்ளூ வைரஸ்’ என நினைத்துவிட்டனர். அந்த வைரஸைத்தான் அமெரிக்க ராணுவத்தினர் சீனாவுக்கு வந்து பரப்பினர். ராபர்ட் ரெட்ஃபீல்ட் கருத்து இதை உறுதிசெய்கிறது. கொரோனா விஷயத்தில் அமெரிக்கா வெளிப்படையாக இல்லை. அமெரிக்காவின் முதல் கொரோனா நோயாளி யார், அவருக்கு எப்போது, எப்படி நோய் தொற்றியது? உண்மையை உலகத்துக்குச் சொல்லுங்கள்’ என்று ஜோ லிஜியான் ட்விட்டரில் எழுதினார்.

இதை அமெரிக்க ராணுவம் கடுமையாக மறுத்தது. வாஷிங்டனில் இருக்கும் சீனத் தூதரை நேரில் வரவழைத்து அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்தது. ட்ரம்ப் கடுமையாக, ‘‘இந்த வைரஸ் உலகம் முழுக்கப் பரவியதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

உண்மையில் என்னதான் நடந்தது? வூஹான் நகரில் உள்ள கடல் உணவு மற்றும் இறைச்சி மார்க்கெட்டில்தான் வைரஸ் தொற்று ஆரம்பித்தது என 2019 டிசம்பர் 31 அன்று உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிகாரபூர்வமாக சீனா அறிவித்தது. சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி லியாங் வான்னியான் இதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘‘வௌவால்களில் இருந்த வைரஸ் எறும்புத்தின்னிக்குப் பரவி, அதிலிருந்து மனிதர்களுக்குப் பரவியது’’ என்றார் அவர்.

அந்த வைரஸ் தொற்றை வாங்கிய முதல் மனிதர் யார்? அந்த மார்க்கெட்டில் இறால் விற்பனை செய்யும் வெய் குய்ஸியான் என்கிற 57 வயதுப் பெண்மணியை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். டிசம்பர் 10 அன்று சிகிச்சைக்குப் போன அவர், நலம் பெற்று வீடு திரும்பி விட்டார். அவரிடமிருந்து சங்கிலித்தொடராகப் பரவிய வைரஸ், உலகம் முழுக்க பல்லாயிரம் பேரை சாகடித்துக்கொண்டிருக்கிறது.

உலகத்துக்கு இப்போது வேறு கதையைச் சொல்கிறது சீனா. அந்த நாட்டின் முன்னணி தொற்றுநோய் நிபுணர் ஜோங் நான்ஷன், ‘‘கொரோனா வைரஸ் முதலில் தாக்கிய இடம் சீனா அல்ல’’ என்று பிப்ரவரி 27 அன்று சொன்னார். சீன அரசின் ஊடகங்கள் இதை உலகம் முழுவதும் கொண்டுபோயின. அதை தொடர்ந்து சீன அரசின் அறிவியல் நிறுவனங்கள் இரண்டின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை பிப்ரவரி 20 அன்று வெளியானது. ‘வூஹான் மார்க்கெட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை’ என்றது அது.

ஐரோப்பாவில் சீனாவுடன் நெருக்கமாக இருந்த நாடு இத்தாலி. ஐரோப்பாவில் சீனர்கள் அதிகம் வாழும் நாடும் அதுவே. கடனில் தவித்த அந்தத் தேசத்துக்கு நிதியுதவி செய்து, தன் முதலீடுகளைக் குவித்தது சீனா. விளைவு, கொரோனாவுக்கு அதிக பலி அங்குதான். அதனால் இத்தாலியில் சீனர்கள் மீதான கோபம் அதிகமாக உள்ளது. அது சீனாவின் வர்த்தகத்துக்கே பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், சீனா அங்கும் ஒரு விளையாட்டை நிகழ்த்துகிறது.

இத்தாலியைச் சேர்ந்த கியூசெப் ரெமூஸி என்ற டாக்டர், புகழ்பெற்ற ‘லேன்செட்’ மருத்துவ இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ‘இத்தாலியில் 2019 நவம்பர் மற்றும் டிசம்பரில் வித்தியாசமான ஒரு நிமோனியா தொற்று ஏற்பட்டது’ என்பதுதான் அந்தக் கட்டுரை சொன்ன செய்தி. இதை வைத்து, ‘இத்தாலியில்தான் கொரோனா முதலில் பரவியது. அதை நிமோனியா எனத் தப்பாக நினைத்துவிட்டார்கள்’ என்று சீனா இப்போது உலகத்துக்கு தகவல் பரப்பிவருகிறது.

இப்படிப்பட்ட பிரசாரங்களை சீனா ஏன் செய்ய வேண்டும்? அரசியல் வல்லுநர்கள் சில காரணங்களைச் சொல்கிறார்கள்.

கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை சுமார் மூன்றாயிரத்தை யொட்டியே குறிப்பிடுகிறது சீனா. ‘உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட 20 மடங்கு அதிகம்’ என மின் மயானங்களின் செயல்பாட்டை வைத்தும், அங்கு குவிந்திருக்கும் அஸ்தியை வைத்தும் சில மீடியாக்கள் சொல்கின்றன. இதனால் சீன மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. ‘இது அமெரிக்கா பரப்பிய வைரஸ். நாம் இந்த மறைமுகப்போரில் வென்றோம்’ என தேசபக்தி உணர்வைத் தூண்டிவிட்டால், இந்த அதிருப்தி மறையும்.

ஆப்பிள், டெஸ்லா என உலகின் முக்கிய நிறுவனங்கள் பலவும் தங்கள் உற்பத்திக்கூடங்களை சீனாவில் வைத்துள்ளன. கொரோனா பீதியைத் தொடர்ந்து அவற்றில் சில நிறுவனங்கள் வெளியேறும் உத்தேசத்தில் உள்ளன. அதைத் தடுக்க இந்தப் பிரசாரம் உதவலாம்.

‘இது சீனாவின் பெயரைக் கெடுக்கும் சதித்திட்டம்’ என சர்வதேச சமூகத்தின் மனதில் சந்தேக விதையைத் தூவுவதன் மூலம், சீனா மீதான கோபத்தைக் குறைக்கலாம்.

அதேசமயம் ‘உலகத்துக்கே தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொரோனா அபாயத்தை வீழ்த்த வேண்டிய நேரத்தில் சீனா இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வது சரியா?’ என்பதுதான் பலரின் ஆதங்கமாக உள்ளது.