
India-China Faceoff: "இந்தியா - சீனா எல்லையில் பிரச்னை என்று கேட்ட உடனேயே மக்கள் மனநிலை எதிர்வினையாற்றுவது தேவையற்ற விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்."
இந்திய சீன எல்லையில் ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், இரு பக்கமும் பல உயிர்கள் பலியாகின. இந்திய வீரர்கள் 20 பேரும் சீன வீரர்கள் சிலரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. உரசலாக இருந்த எல்லைப் பிரச்னை, இந்த மோதலுக்குப் பிறகு கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சீனப் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் போருக்குத் தயாராக வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் குரலெழுப்பிவருகின்றனர். மற்றொருபுறம், அமைதியை நிலைநிறுத்தி சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன.

இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில், குடிமகன்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வகையில் விகடனின் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்திய சீன விவகாரத்துக்கு எந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம், போர்க்களத்தில் சந்திப்போம், அமைதி மட்டுமே தீர்வாக வேண்டும் என்று மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக, 40.3 சதவிகிதம் பேர் பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம் என்று தெரிவித்துள்ளனர். போர்க்களமே தீர்வு என்பதை 35.4 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அமைதியே தீர்வாக வேண்டும் என்பதை 24.3 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், போர் என்ற முடிவுக்குச் செல்லாமல் சமாதானமாகவே செல்ல வேண்டும் என்பது 64.6 சதவிகிதம் பேரின் கருத்தாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள் எழும்போது குடிமக்களிடம் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம் ஆகியவற்றின் பின்னால் இருக்கும் உளவியல் என்ன என்பதை அறிந்துகொள்ள, மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.
"'மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை' என்ற மாவோவின் வார்த்தைகளைப் போல நாம் சும்மா இருந்தாலும் எல்லையில் நம்மைச் சீண்டும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இது தொடர்பாக பல விஷயங்களை ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்கிறோம்.
இது தொடர்பாக நமக்குக் கொடுக்கப்படும் செய்திகள் உண்மையாக இருந்தாலும், செய்திகளை மீண்டும் மீண்டும் கேட்கும்போது நமக்குள் பகைமையுணர்வு வளர்கிறது. பொதுவாகவே, பாகிஸ்தான், சீனா இந்த இரண்டு நாடுகளின் மீதுதான் இந்த உணர்வு எழுகிறது. பிற நாடுகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.
காதலி பெயரை உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்வது மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தத்தானே தவிர, பிரியத்தின் வெளிப்பாடு இல்லை.மனநல மருத்துவர் அசோகன்
நாம் கேள்விப்படும் செய்திகள், தகவல்களின் அடிப்படையில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்போதே அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது. அந்த நம்பிக்கை எதிர்மறையாகவும் இருக்கலாம், சார்ந்தும் இருக்கலாம். நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை இறுக்கமாகும்போது அது மிகைப்படுத்தப்பட்ட விஷயமாக மாறிவிடும். அதன்பிறகு, அதன்மீது தவறான நம்பிக்கை ஏற்படும்.
பாகிஸ்தான், சீனா என்றாலே எதிரி நாடுகள் என்று தோன்றிவிடும். அவற்றைப் பற்றி நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டால்கூட ஒத்துக்கொள்ள மனம் வராது. அவற்றைத் தவறாக சித்திரிக்கக் காரண, காரியங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குவோம். இதுபோன்ற விஷயங்களால் கோபம் ஏற்படும். எந்தவொரு நடத்தையும் (Behaviour) கட்டுக்கடங்காமல் போவதற்கு அந்தந்த தனி மனிதனே பொறுப்பாகிறான்.
கோபமும் அந்த வகையில்தான் வருகிறது. அமைதியாகப் பேச வேண்டிய இடத்தில் அடிப்பதும், அடிக்கவேண்டிய இடத்தில் கொலை செய்வதும் ஒரு மனிதனை மீறிய செயல். கோபத்தினால் கட்டுப்பாட்டை இழக்கும்போது பல பிரச்னைகள் ஏற்பட்டும்.

போர் என்பதே திட்டமிடலோடும் உத்திகளோடும் நடைபெறுவதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த நாடும் போருக்குப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, இந்தியா - சீனா எல்லையில் பிரச்னை என்று கேட்ட உடனேயே மக்கள் மனநிலை எதிர்வினையாற்றுவது தேவையற்ற விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
இரு நாடுகளுக்குள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து, இருநாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கியபடி புகைப்படம் வெளியில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதற்குப் பிறகு எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாது.
அதனால் பொதுவெளியில் சென்று டி.வி-யைப் போட்டு உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது விளம்பரத்துக்காகத்தான். சிலருக்கு அதனால் அரசியல் ஆதாயம் கூட கிடைக்கலாம். தர்மம், தானம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. யார் பயன்பெறுகிறார் என்று தெரிந்து வழங்குவது தர்மம். பயனாளி யார் என்பதே தெரியாமல் வழங்குவது தானம். அதனால் ரத்தம் கொடுப்பதை ரத்ததானம் என்கிறோம். தானத்தைப் போன்றதுதான் நாட்டுப்பற்றும்.

நாட்டுப்பற்றை ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் காண்பிக்கலாம். போரில் பங்கேற்று எத்தனையோ வீரர்கள் தங்கள் அவயங்களை இழந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம். கலாசார ரீதியாக, மொழி ரீதியாகப் பிரிந்து கிடந்தாலும் போர் என்று வந்துவிட்டால் அனைவரும் இணைந்துவிடுவோம்.
இன்று, கொரோனா வந்து வாழ்வில் இருக்கிற மேடு பள்ளங்களையெல்லாம் சமப்படுத்திவிட்டது. அடுத்தவருக்காக கவலைப்பட வைத்துவிட்டது. பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா வந்துவிடக்கூடாது என்று கவலைப்படுகிறோம். அவருக்கு வந்தால் நமக்கு வந்துவிடுமே என்ற பயம்தான். பொதுநலத்தில் சுயநயமும் கலந்துவிட்டது. நம் வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தையும் மாற்றிப் போட்டிருக்கிறது கொரோனா.

காதலி மீது பிரியம் இருந்தால், அதை மனதுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதில் காதலி பெயரை உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்வது, அதை மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தத்தானே தவிர, பிரியத்தின் வெளிப்பாடு இல்லை. தேசப்பற்றும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்காக அது இல்லை. நம் மனதுக்குள் இருக்க வேண்டும்" என்கிறார்.