Published:Updated:

கொரோனாவால் வேலையிழப்பு... வளைகுடாவில் தவிக்கும் 80 லட்சம் இந்தியர்கள் நிலை என்னவாகும்?

கொரோனாவால் வளைகுடாவில் வாழும் 80 லட்சம் இந்தியர்கள் வேலையிழப்பு சம்பளக்குறைப்பு என அடுத்தடுத்துப் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ளனர். நாடு திரும்பவும் வழியின்றி தவிக்கும் அவர்களை அரசு மீட்குமா?

கொரோனாவின் தாக்கம் உலகெங்கும் எதிரொலிக்கிறது. ஒட்டுமொத்த உலகையுமே வீட்டுக்குள் அடைத்திருக்கிறது சிறிய கிருமி. தொழில்கள் முடங்க, தொழிலாளர்களின் அன்றாட வாழ்வும் நசிந்து போயிருக்கிறது. வல்லரசு நாடுகளில் தொடங்கி வளரும் நாடுகள்வரை பாதிப்புக்கு பாரபட்சமேயில்லை.

இதன் பாதிப்பு பணம் கொழிக்கும் வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, பஹரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம் அந்நாடுகளின் பொருளாதாரத்தையும் அசைத்துப்பார்த்திருக்கிறது. கூடவே அங்கே பணியாற்றிக்கொண்டிருக்கிற 80 லட்சத்துக்கு அதிகமான இந்தியர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஓமன், மஸ்கட்
ஓமன், மஸ்கட்

வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு போன்ற பிரச்னைகளை அடுத்தடுத்து சந்திக்கத் தொடங்கி இருக்கிறது வளைகுடாவில் வாழும் இந்தியச் சமூகம். குறிப்பாக ஓமனில் மட்டுமே பணியாற்றுகிற ஆறரை லட்சம் இந்தியர்களில் ஒன்றரை லட்சம் பேர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப நேரிடும் என்கிற அச்சம் பரவியுள்ளது.

இந்த வேலையிழப்பு வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடுதிரும்பும் கோரிக்கையோடு இந்தியத் தூதரகங்களை நாடத்தொடங்கியுள்ளனர்.

வளைகுடாவில் என்னதான் நடக்கிறது... இந்தியர்களின் அச்சத்துக்கு காரணம் என்ன என்கிற உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அங்கிருக்கும் இந்தியர்களோடு பேசினோம்.

இந்தச் சூழலில் பெரிய நிறுவனங்கள் எதிர்பாராத இந்த இழப்பை ஈடுசெய்யவும் தங்களுடைய லாபத்தை தக்கவைத்துக்கொள்ளவும் ஆட்குறைப்பு மற்றும் சம்பளப் பிடித்தத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.
பொறியாளர் ராம சுப்ரமணி
பொறியாளர் ராம சுப்ரமணி

இது குறித்து பொறியாளர் ராம சுப்ரமணியிடம் பேசினோம். மிகுந்த கவலையோடு நம்மிடம் உரையாடிய அவர்...

"ஓமனில் மொத்தம் 11 கவர்னொரேட்கள் உள்ளன. ஒவ்வொரு கவர்னொரேட்டுக்கும் தனித்தனியான லாக்டௌன் அறிவிப்புகள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட லாக்டெளன், வரும் மே 8-ம் தேதி வரை அமலில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த லாக்டௌன் அறிவிப்பதற்கு முன்பிருந்தே ஓமனின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்திக்கத்தொடங்கிவிட்டது. பீப்பாய்க்கு 58 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை 20 டாலராக குறைந்து.. நாளுக்கு நாள் மேலும் மேலும் குறைந்துவருகிறது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் விற்பனை சரிவும் இதையே பிரதானமாக நம்பியுள்ள நிறுவனங்களைப் பாதித்துள்ளன.

மஸ்கட் . ஓமன்
மஸ்கட் . ஓமன்
கொரோனா: வளைகுடா நாடுகளுக்கு இந்தியா செய்த உதவிகள் என்ன?

இந்தச் சூழலில் பெரிய நிறுவனங்கள் எதிர்பாராத இந்த இழப்பை ஈடுசெய்யவும் தங்களுடைய லாபத்தை தக்கவைத்துக்கொள்ளவும் ஆட்குறைப்பு மற்றும் சம்பளப் பிடித்தத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக ஓமன் வர்த்தக அமைப்பும், ஆட்குறைப்பு செய்துகொள்ளத் தடையில்லை என்று அறிவித்துள்ளன. வேலை இழப்புக்கான பிரதானக் காரணம் இதுவே" என்றார்

இது குறித்து மஸ்கட்டில் இருக்கும் ஓமன் தமிழ் குழுமத்தைச் சேர்ந்த ஜாசிம் பேசுகையில், ``இந்த லாக் டௌன் மட்டுமே வேலையிழப்புக்கான காரணம் என்று கூற முடியாது. இதற்கு மற்றொரு மறைமுக காரணமும் இருக்கிறது. சிலமாதங்களுக்கு முன்பே இங்கு பணியிடங்களில் ஓமானியர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அரசாங்க ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக சிறிய அளவிலான ஆட்குறைப்பை (இந்தியர்கள் மட்டும்) இங்குள்ள நிறுவனங்கள் லாக் டௌனுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

ஜாசிம் ஓமன் தமிழ் குழுமம்
ஜாசிம் ஓமன் தமிழ் குழுமம்

அதை மேலும் அதிகரிப்பதற்கு இந்தச் சூழல் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதனால் விற்பனை மற்றும் நிர்வாகத் துறையில் இருப்பவர்கள், கட்டுமானத் துறையில் இருப்பவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வேலையின்றி இங்கு வாழமுடியாது என்பதால் அனைவருமே இந்தியா திரும்பிச்செல்லக் காத்திருக்கின்றனர். ஆனால், இங்கிருந்து இந்தியா செல்ல மத்திய அரசு இதுவரை துரிதநடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்பதே வேதனையான நிலவரம். குறிப்பாக இதுதொடர்பாக கணக்கெடுப்பு மட்டுமே நடந்து வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் வேலையின்றி வருமானமின்றி வாடும் பல ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்.

அந்நியச் செலாவணியில் பெரும்பகுதி வருமானம் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து வருகிறது. அவர்கள் தற்போது வேலை இழந்து நிர்க்கதியாய் இருக்கிறார்கள். அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் இந்தியா செல்வதற்கான விமான சேவையை மட்டுமாவது இலவசமாக வழங்கினால் நன்றாக இருக்கும்" என்றார்.
ஜாசிம், ஓமனில் உள்ள தமிழர்

ஓமனில் பணியாற்றும் ஆண்டனி அங்கே பணியாற்றும் இந்தியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் அவலத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டனி ஓமனில் உள்ள தமிழர்
ஆண்டனி ஓமனில் உள்ள தமிழர்

"இந்தியர்களை அரவணைப்பதில் ஓமன் அரசை பாராட்டியே ஆக வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றை பாகுபாடின்றி அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி வருகிறது. இருப்பினும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சூழல் இந்தியர்களுக்குப் பெரும் மன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் அந்நிய தேசத்தில் வசிப்பதைவிட இந்தியாவில் இருப்பதையே பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள்.

ஆனால், ஊர் திரும்ப வழியில்லை என்பதால் பலரும் மன அழுத்தத்தில் உள்ளனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கொரோனா லாக்டௌன் காலத்தில் என்னுடைய அப்பா காலமாகிவிட்டார். ஆனால், தமிழகம் திரும்ப முடியவில்லை. இந்தச் சூழல் எப்படிப்பட்ட மனவேதனையை என்னில் உண்டாக்கும். இதுபோலத்தான் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஊர்சார்ந்த ஒரு தவிப்பு இருக்கிறது. இன்னொருபக்கம் வேலையிழப்பும் வருமான இழப்பும் அச்சுறுத்த அவர்களுடைய மனநிலை என்னவாகும்...'' என்று கேள்வியெழுப்பினார்.

வேலையிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்குள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து முடிந்தவரை அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து உதவி வருவதையும் குறிப்பிட்டார் ஆன்டணி.

இப்படி வளைகுடா பகுதி முழுக்க நேரடியான பாதிப்பை சந்தித்திருப்பது மிகச் சிறிய வேலைகள் செய்கிற கூலித்தொழிலாளர்கள்தான். அவர்களுடைய சேமிப்பும் உழைப்பும்தான் இந்தக் கொரோனா காலத்தில் கரைந்துகொண்டிருக்கிறது என்று வருந்துகிறார்கள் வளைகுடாவில் வாழும் தமிழர்கள்.

கூலித்தொழிலாளர்கள் நிலைகுறித்து ஓமனில் வாழும் பேராசிரியர் வர்கீஸ் ரிஜ்ஜுவிடம் பேசினோம். "கூலித் தொழிலாளர்கள் பெருமளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் இந்த நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று பயப்படுகிறார்கள். அதன் காரணமாக எப்படியாவது இந்தியா போய் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் தொடர்ந்து இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இங்குள்ள கேரள தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுபோல மற்ற மாநில முதல்வர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.

வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளை மீட்க NORKA
வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளை மீட்க NORKA

கேரளா பத்திரிகையாளர் அஜய் குமார் நமக்கு பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மேலும் சிலதகவல்களை தந்தார்.

பினராயி விஜயன் `நான் ரெசிடென்ட் கேரளைட்ஸ் அஃபயர்ஸ் (NORKA)' என்றத் துறையை உருவாக்கியுள்ளார். அதற்கென NORKA ROOTS என்ற தனி இணையதளமும் தொடங்கப்பட்டு, தற்போது வெளிநாடு வாழ் கேரள மக்கள் அதில் பதிவு செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்த இணையதளம் தொடங்கப்பட்ட இரண்டே நாள்களில் வளைகுடாவைச் சேர்ந்த நான்கு லட்சம் பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென தனி விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கையும் விடுத்துள்ளார். தற்போது இதே பாணியில் தமிழக அரசும் nonresidenttamil.org என்கிற இணையதளத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"வெளிநாடுகளில் இருந்து வருகிற அந்நியச் செலாவணியில் 40 சதவிகிதம் இந்தியத் தொழிலாளர்கள் மூலமாக மத்திய அரசுக்கு வருகிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் ஆறு லட்சத்து 21ஆயிரத்து 741 கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். அப்படிப்பட்ட பங்களிப்பை அளிக்கும் இந்தத் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி
ரூ.1 கோடி நிவாரணம், அகவிலைப்படி, ரேபிட் டெஸ்ட் கிட்:  கொரோனா அரசியல்கள் குறித்து கே.எஸ்.அழகிரி

மத்திய அரசு இவ்விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

"இது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சில தமிழர்கள் என்னிடம் பேசியிருந்தனர். குறிப்பாக இரான், சவுதி கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளேன். மத்திய அரசும் வளைகுடா நாடுகளில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்" என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

பணிக்காக சென்ற இடத்தில் வாழவும் முடியாமல் தாயகம் திரும்பவும் வழியின்றி தவிக்கும் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் அரசு மீட்க வேண்டும். விமானசேவை மீண்டும் தொடங்கும்வரை அவர்களுடைய நாட்டில் பாதுகாப்போடு வாழ்வதையும் உறுதிசெய்ய வேண்டும். அதை மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் உடனே செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு