Published:Updated:

‘‘நோய் பரவினால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும்!’’

ஸ்வீடன் போடும் புதுக்கணக்கு

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு போட்டு வீடுகளின் கதவுகளை அடைத்தாகிவிட்டது. மூடிய கதவுகளை எப்போது திறப்பது, எப்படித் திறப்பது, திறந்தால் என்ன ஆகும்? விடை தெரியாத கேள்விகள் இவை.

கொரோனா வைரஸ் நோயை நேரடியாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் கிடையாது. இந்த நிலையில், ஊரடங்கு முடிந்து வெளியில் வரும் மக்கள் மத்தியில் இந்த நோய் பரவினால் என்ன செய்வது?

‘‘ஊரடங்கு என்பது, குறுகிய காலத்துக்கு நோய் பரவலைத் தடுக்கலாம்... மரணங்களைக் குறைக்கலாம். ஆனால், நீண்டகால நோக்கில் பலன் தராது. எவ்வளவு காலம்தான் மக்களை வீடுகளுக்குள் பூட்டிவைக்க முடியும்? என்றாவது ஒரு நாள் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். அதனால்தான் நாங்கள் முள்ளை முள்ளால் எடுக்கும் உத்தியைப் பின்பற்றுகிறோம்’’ என்கிறார் ஆண்டர்ஸ் டெக்னெல். ஸ்வீடன் நாட்டின் புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணரான இவர்தான், அங்கு கொரோனா பரவலைத் தடுக்கும் குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.

உலகிலேயே வித்தியாசமான அணுகுமுறையாக ‘சமுதாய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது’ (Herd immunity) என்பதுதான் இவர் சொல்லும் புது வியூகம். ஒருவருக்கு நோய் வராமல் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது. இரண்டு, அந்த நோய் தாக்கி, அதன்மூலமாக இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது. ஸ்வீடன் இந்த இரண்டாவது வழியைப் பின்பற்றுகிறது.

ஆண்டர்ஸ் டெக்னெல்
ஆண்டர்ஸ் டெக்னெல்

‘ஒரு சமூகத்தில் இருக்கும் மக்களில் சுமார் 60 சதவிகிதம் பேருக்கு ஒரு தொற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டால் போதும்... அந்தச் சமூகத்தில் தொற்றுநோய் பரவாது’ என்பது மருத்துவக் கணக்கீடு. தடுப்பூசிகளும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாகாத நிலையில், ‘மக்களில் நிறைய பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டால், தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்’ என்று ஸ்வீடன் கருதுகிறது. நோய் பரவாமல் தடுத்து மக்களைக் காப்பாற்ற நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில், ‘நோய் பரவினால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும்’ என்கிறது ஸ்வீடன்.

சுமார் ஒரு கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஐரோப்பிய நாடு, ஸ்வீடன். ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு இருந்தபோதும், ஸ்வீடன் கதவுகளை அடைக்கவில்லை. பள்ளிகள் இயங்கின. கடைகள், ஹோட்டல்கள், பார்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் திறந்து இருந்தன. பேருந்துகள், ரயில்கள் இயங்கின. பெரும்கூட்டம் கூடும் விளையாட்டுகளை மட்டுமே ரத்துசெய்தார்கள். வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

70 வயது தாண்டியவர்கள் வீட்டுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். 50 பேருக்குமேல் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அடிக்கடி கை கழுவுவது போன்றவை வலியுறுத்தப்பட்டன. ஹோட்டல்கள் மற்றும் பார்களில் அதிக இடைவெளிவிட்டு உட்காரச் சொல்லி பரிமாறினர். முதியோர் இல்லங்கள் மற்றும் நர்ஸிங் ஹோம்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடைவிதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோக, சமுதாய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஸ்வீடன் சில உத்திகளைக் கடைப்பிடித்தது. கொரோனா தொற்றினாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரை சமூகத்தில் இயல்பாக இருக்கவிட்டனர். அவர்களுக்கு வைரஸ் பரவும். ஆனால், பாதிப்பு ஏற்படுத்தாது. அவர்கள் விரைவில் குணமடைவார்கள். இதனால் அவர்களும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள். அதன்பிறகு மற்றவர்களுக்கு நோயைப் பரப்பவும் மாட்டார்கள். இப்படி நாட்டில் 60 சதவிகித மக்களுக்கு நோய்த்தொற்று பரவ வேண்டும் என அவர்கள் திட்டமிட்டனர்.

இதுவே 60 வயது தாண்டிய முதியவர்களுக்கோ, நோயாளிகளுக்கோ இது பரவினால் உயிருக்கே ஆபத்து என்பதால், முதியோர் இல்லங்களையும் நர்ஸிங் ஹோம்களையும் தனிமைப்படுத்தி வைத்தனர். வீடுகளிலும் முதியோர்களை தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஸ்வீடன்
ஸ்வீடன்

இந்தத் திட்டம் பலன் தந்ததா? ‘‘கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது தலைநகர் ஸ்டாக் ஹோம். இங்கு இதுவரை சுமார் 20 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்திருக்கிறது. மே மாத இறுதிக்குள் 60 சதவிகித இலக்கை அடைந்துவிடுவோம். படிப்படியாக நாடு முழுக்க இந்த நிலை ஏற்படும்’’ என்கிறார் ஆண்டர்ஸ் டெக்னெல்.

என்றாலும், அண்டைநாடுகளைவிட ஸ்வீடனில் கொரோனா மரணங்கள் அதிகம். ஏப்ரல் 27-ம் தேதி நிலவரப்படி, 18,640 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இறந்தவர்கள், 2,194 பேர். கிட்டத்தட்ட 11 சதவிகிதம் இது. ‘‘ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்காததால்தான் மரணங்கள் அதிகரித்துவிட்டன. சமுதாய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என்பது விஷப்பரீட்சை. இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்று அறிவியல் அறிஞர்கள் பலர் அரசை எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் ஸ்வீடன் அரசு பின்வாங்கவில்லை. ‘‘ஸ்வீடனில் மரணங்கள் அதிகமாகத் தெரிவதற்கு சில காரணங்கள் உள்ளன. வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் நிகழும் மரணங்களை பல நாடுகள் கணக்கில் எடுக்கவில்லை. கொரோனாவில் இறந்த பலரை முறையாகப் பரிசோதிக்காமல் நிமோனியா மரணங்களாகக் காட்டினர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. நாங்களே எதிர்பார்க்காதபடி முதியோர் இல்லங்களுக்கு நோய் பரவியது. வெளியிலேயே வராமல் இல்லங்களில் இருந்தவர்களையும் கொரோனா தொற்றியது. இறந்தவர்களில் 75 சதவிகிதம் பேர் முதியவர்கள்தான். இப்போது மரணங்கள் குறைந்துவிட்டன. புதிய நோயாளிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

தவிர, நாங்கள் அறிகுறிகள் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்தோம். எங்கள் கணக்குப்படி, பரிசோதனை செய்து கண்டறியப்பட்ட பாசிட்டிவ் நோயாளிகளைப் போல், சுமார் 75 மடங்கு அதிகம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும். இதை வைத்து கணக்குப்போட்டால் மரணங்கள் குறைவுதான்’’ என்கிறார் ஆண்டர்ஸ்.

ஸ்வீடன்
ஸ்வீடன்

ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் இடப்பெயர்வு அதிகம் ஏற்படும். இந்த யுகத்தில் பயணங்களைத் தடுக்க முடியாது. ‘‘இப்படி, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வரும் பலரும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவார்கள். சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே அந்த நேரத்தில் பாதுகாப்பு தரும்’’ என்கிறார் ஆண்டர்ஸ்.

ஆரம்பத்தில் இங்கிலாந்தும்கூட இதே போன்ற ஒரு முயற்சியைச் செய்துபார்க்க விரும்பியது. ஆனால், ‘இந்த ரிஸ்க்கை எடுத்தால் நாட்டில் சுமார் இரண்டரை லட்சம் பேர் இறப்பார்கள்’ என்று நிபுணர்கள் சொன்னதும், அரசு பின்வாங்கிவிட்டது.

கொரோனா தொற்றிலிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி உலக சுகாதார நிறுவனம் குழப்பமாகவே கருத்து சொல்லியிருக்கிறது. ‘ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு அது திரும்பவும் வராது என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை’ என, தகவல்கள் வருகின்றன. எனினும், பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லாத சூழலில், இதை எந்த அளவுக்கு நம்புவது என்ற கேள்வியும் எழுகிறது.

ஆக்ரோஷமாகப் பரவும் காட்டுத்தீயின் மத்தியில் ஒற்றைக் காடு பசுமையாக இருக்க முடியுமா? ‘மே மாதம் இதற்கான பதில் கிடைக்கும்’ என்கிறது ஸ்வீடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு