Published:Updated:

COP 26 Summit: காலநிலை உச்சிமாநாட்டின் நோக்கம் நிறைவேறியதா?

197 நாடுகளின் கையொப்பத்தோடு இறுதி வடிவத்தை எட்டியுள்ள க்ளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம் (Glasgow Climate Pact) இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி எனலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது காலநிலை உச்சிமாநாடு, ஸ்காட்லாண்டின் க்ளாஸ்கோ நகரில் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. இது Conference of Parties - COP என்று அழைக்கப்படுகிறது. பொதுவான காலநிலை மாநாடுகளில் இது 26-வது நிகழ்வு என்றாலும் பாரீஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகான முதல் ஐந்தாண்டு ஆய்வு மாநாடு இது என்பதால் இந்த மாநாட்டின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் இரண்டு நாள்கள், உலக நாடுகளின் தலைவர்கள், நிகர பூஜ்ய உமிழ்வுகளுக்கான தங்களது புதிய இலக்குகளைப் பற்றி உரை நிகழ்த்தினர். அதன்பிறகு உலக நாடுகளின் பிரதிநிதிகளோடு தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. தெற்கு பசிபிக் கடலில் உள்ள துவாலு தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃபே முழங்காலளவு கடல்நீரில் நின்றபடி தனது மாநாட்டு உரையை வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலானது. காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் மூழ்கும் அபாயத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த அச்சுறுத்தலின் வீரியத்தைப் பிற உலக நாடுகளுக்கு உணர்த்தவே இப்படி செய்ததாகவும் தன் உரையின்போது அவர் குறிப்பிட்டார்.

துவாலு தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃபே
துவாலு தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃபே
Screenshot grabbed from YouTube

இந்த காலநிலை உச்சி மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாரீஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் தொடர் விவாதங்களுக்குப் பிறகு, பாரீஸ் ஒப்பந்தத்துக்கான விதிமுறைப் புத்தகம் (Paris rulebook) அனைவரின் ஒப்புதலுடன் இறுதி வடிவத்துக்கு வந்திருக்கிறது. அதில் குறிப்பாக, கரிம உமிழ்வுகள், கார்பன் ட்ரேடிங், கரிமங்களை உமிழாமல் இருக்கும்போது கிடைக்கும் க்ரெடிட் புள்ளிகளைப் பயன்படுத்துவது பற்றிய சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதாரத்தில் இவை முக்கிய இடம் பிடிக்கும். இது விலைவாசியையும் பாதிக்கலாம்.

2030-ம் ஆண்டுக்குள் காடுகளை அழிப்பதை முற்றிலுமாக நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 2040க்குள் பூஜ்ய உமிழ்வுகளைக் கொண்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத கார்களை மட்டுமே 100% பயன்படுத்தப்போவதாக 30 நாடுகள் உறுதியளித்துள்ளன. அதாவது, இப்போது வழக்கத்தில் இருக்கும் பெட்ரோல்/டீசல் கார்களைப் பயன்படுத்துவதை 2040ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக நிறுத்துவதற்கான உறுதிமொழி இது. 30 நாடுகள் என்பது குறைவான எண்ணிக்கை என்றாலும் இது ஒரு ஆரோக்கியமான முதல்படி.

2030-ம் ஆண்டுக்குள் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்திலும் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கரிம உமிழ்வுகளுக்கு அடுத்தபடியாக உலகின் சராசரி வெப்பநிலையை உயர்த்துவதில் அதிகப் பங்கு வகிப்பதாகக் கூறப்படும் மீத்தேன், இப்போது உலக நாடுகளின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த மீத்தேன் ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் முன்னெடுத்திருக்கின்றன என்பதால், மீத்தேன் உமிழ்வுகளைக் குறைப்பது தொடர்பாக இந்த நாடுகள் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பிருக்கிறது.

197 நாடுகளின் கையொப்பத்தோடு இறுதி வடிவத்தை எட்டியுள்ள க்ளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம் (Glasgow Climate Pact) இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி எனலாம். இது ஒருவகையில் பாரீஸ் ஒப்பந்தத்தின் நீட்சி என்றாலும் க்ளாஸ்கோ ஒப்பந்தத்திற்கான சில தனிச்சிறப்புகள் உண்டு.
புவி வெப்பமயமாதல் | கார்பன் வெளியேற்றம்
புவி வெப்பமயமாதல் | கார்பன் வெளியேற்றம்

இப்போதைக்கு உலக நாடுகளின் தனிப்பட்ட உமிழ்வு இலக்குகள், செயல்பாடுகள் ஆகியவை சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, உடனடியாக உலகநாடுகள் புதிய இலக்குகளை உருவாக்குவது நல்லது என்று அந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது. இரண்டாவது ஆய்வு மாநாட்டுக்காக ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்காமல் அடுத்த ஆண்டே ஒரு உச்சிமாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலை கவுன்டவுனில் இருக்கும் மனித இனத்தின் அவசரத்தை உலக நாடுகள் புரிந்துகொண்டதற்கான அறிகுறி இது.

பாரீஸ் ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றத்தால் வரும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது (Climate mitigation) பற்றி மட்டுமே பேசப்பட்டிருந்தது. ஆனால், என்னதான் நாம் உமிழ்வுகளைக் குறைத்தாலும் பாதிப்புகள் வரப்போவது நிச்சயம் என்பதால், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதும் அவசியம். இதை Climate change adaptation என்பார்கள். ஆனால் இந்த தகவமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளாவிய காலநிலை மாற்ற தகவமைப்புக்கான ஒரு இலக்கு நிர்ணயிக்கப்படவேண்டும் என்று க்ளாஸ்கோ ஒப்பந்தம் ஒரு கெடு விதித்திருக்கிறது. காலநிலை தகவமைப்புக்காக வளர்ந்த நாடுகள் இருமடங்கு அதிகம் பணம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2009-ம் ஆண்டில், உலகளாவிய காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்காக வருடத்துக்கு நூறு பில்லியன் டாலர்கள் தரப்போவதாக வளர்ந்த நாடுகள் உறுதியளித்திருந்தன. இந்தப் பணத்தை 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தரப்போவதாகவும் அவை அறிவித்தன. ஆனால் 2021-ம் ஆண்டிலும் இன்னும் எந்தப் பணமும் வரவில்லை. இது ஏழை நாடுகளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்தப் பணத்தை 2023க்குள் தரவேண்டும் என்ற புதிய கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் தரப்படும் இந்த தொகை பற்றிய வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்றும் க்ளாஸ்கோ ஒப்பந்தம் வலியுறுத்தியிருக்கிறது. 2025-ம் ஆண்டிலிருந்து இந்த வருடாந்திரத் தொகையை அதிகரிக்க முயற்சி செய்யவேண்டும் என்றும் க்ளாஸ்கோ ஒப்பந்தம் தெரிவிக்கிறது. இது இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான அம்சம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு முக்கியமான தடையாக இருப்பது பணம்தான். அதை ஏட்டளவிலாவது தீர்க்க இந்த ஒப்பந்தம் முயற்சி செய்திருக்கிறது.

காலநிலை ஆபத்து
காலநிலை ஆபத்து

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்டுருவாக்கம், அதற்குத் தேவையான நிதி உதவி பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதாவது ஒரு முடிவு எட்டப்படும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஒன்று இருந்தது. அந்த வகையில் உலக நாடுகளுக்கு ஏமாற்றம்தான். "காலநிலை இழப்புகள், மீட்டுருவாக்கம் பற்றிய ஒரு உரையாடலைத் துவக்கியிருக்கிறோம்" என்பதோடு ஒப்பந்தம் இந்த விஷயத்தை முடித்துவிட்டது. காலநிலைப் பேரிடர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் அது பற்றிய பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துகொண்டிருப்பது சரியானதாக இல்லை என்று காலநிலை செயற்பாட்டாளர்கள் குறைகூறியிருக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸாண்டியாகோ கூட்டமைப்பு (Santiago Network) ஒன்றை உருவாக்குவதாகவும், அதற்கு நிதி உதவி தர இருப்பதாகவும் க்ளாஸ்கோ ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் பெருநிறுவனங்களின் தலையீடு இல்லாமல் உண்மையிலேயே பலவீனமான நாடுகளைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் உருவாக்கப்படுமானால் அது ஒரு பெரிய வெற்றியாக அமையும்.

க்ளாஸ்கோ ஒப்பந்தத்தின் ஒரு முடிவு வரலாற்று ரீதியாக ஒரு மைல்கல்லாக இருக்கிறது. காலநிலை வரலாற்றில் முதல்முறையாக, ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் "நிலக்கரி" பிரச்னை பற்றி பேசப்பட்டுள்ளது. நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்கள்தான் காலநிலை மாற்றத்துக்குக் காரணம் என்றாலும், சர்வதேச மாநாடுகளில் நடக்கும் எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் அதைக் கண்டும் காணாததுபோல் இதுவரை உலக நாடுகள் மௌனம் சாதித்தபடியேதான் இருந்திருக்கின்றன. பாதிப்புகள், நிதி உதவி, கரிம உமிழ்வு என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசத் தயாராக இருந்த உலக நாடுகள், "நிலக்கரி" என்ற சொல்லை மறந்துகூட உச்சரிக்கவில்லை. ஆனால் முதல்முறையாக, "நிலக்கரி பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளவேண்டும்" என்று க்ளாஸ்கோ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

நிலக்கரி
நிலக்கரி

முதலில், "நிலக்கரி பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அதிலிருந்து முற்றிலும் விடுபடுதல்" (Coal phase out) என்பதுபோன்ற சொற்களே ஒப்பந்தத்தில் எழுதப்பட்டன. ஆனால், மாநாடு முடியும் நேரத்தில் இந்தியாவும் சீனாவும் இந்த சொற்பிரயோகத்தை எதிர்த்தன. ஆகவே "முழுவதுமாக நிலக்கரியிலிருந்து விடுபடுதல்" என்பதிலிருந்து "நிலக்கரி பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளுதல்" (Coal Phase down) என்பதாக இது மாற்றப்பட்டது. இறுதியில் பேசிய மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா, இந்த கடைசி நிமிட மாறுதல் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.

விலக்கப்பட்ட ஒரு சொல்லாக இருந்த நிலக்கரியை முதல்முறையாக உலக நாடுகள் பிரச்சனையாக அங்கீகரித்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கிறது என்றால், இன்னும் நிலக்கரியைக் கைவிட நாம் தயாராக இல்லை என்ற உண்மை கலக்கமாகத்தான் இருக்கிறது.

பாரீஸ் ஒப்பந்ததின் முதல் ஆய்வு மாநாடு என்ற முறையில், க்ளாஸ்கோவில் நடந்த உச்சிமாநாடு ஒரு பழைய கேள்வியை மீண்டும் தூண்டியிருக்கிறது - "இந்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் கண்டிப்பாகப் பின்பற்றத்தான் வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்தப்படவில்லை?".
காலநிலை மாற்றம் என்கிற டைம்பாம்!

பாரீஸ் ஒப்பந்தம், க்ளாஸ்கோ ஒப்பந்தம் போன்ற பல சர்வதேச ஒப்பந்தங்கள் சட்டரீதியாகக் கட்டாயமானவை அல்ல (Not legally binding). அதாவது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், இதன் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது அப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் சுற்றுச்சூழல்சார் சட்ட வல்லுநர்கள், 1992ம் ஆண்டின் க்யோட்டோ ஒப்பந்தத்தை உதாரணம் காட்டுகிறார்கள். அது கட்டாயமான ஒப்பந்தம் என்பதாலேயே பல நாடுகள் கடைசி நேரத்தில் கையெழுத்துப் போடவில்லை, ஒருவேளை க்ளாஸ்கோ ஒப்பந்தம் கட்டாயமானதாக இருந்திருந்தால் 197 கையெழுத்துக்கள் கிடைத்திருக்காது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சட்டரீதியான அழுத்தத்தை விட, ஒரு சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து தவறும்போது வரும் உலகளாவிய அவமானம், விமர்சனம் ஆகியவையே இப்போதைக்கு இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் அடிநாதமாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அது ஓரளவு உண்மைதான். காலநிலை பற்றிய பல விஷயங்களில் "உலக அரங்கில் தலைகுனியக் கூடாது" என்று பல நாடுகள் முனைப்புடன் இருக்கின்றன.

உலகத் தலைவர்கள்
உலகத் தலைவர்கள்

சர்வதேசப் பொருளாதார ஒப்பந்தங்கள், சர்வதேச அரங்குகளில் தங்களது குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பு ஆகியவற்றின்போதும் காலநிலை செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன. சில நாடுகளில் நேரடியாகவே காலநிலை செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பொருளாதார சலுகைகள், வரிகள், அந்நிய வர்த்தகம் ஆகியவை முடிவு செய்யப்படுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், "இது சட்டம் இல்லைதான், ஆனால் இதைப் பின்பற்றாவிட்டால் சலுகைகள் கிடைக்காது" என்ற ரீதியில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் அணுகப்படுகின்றன.

க்ளாஸ்கோ ஒப்பந்தம் உட்பட இந்த மாநாட்டில் சிறிதும் பெரிதுமாகப் பல முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன. இவை சரியாக செயல்படுத்தப்பட்டால் காலநிலை மாற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நம்பிக்கையூட்டக்கூடிய சில அறிவிப்புகள், ஏமாற்றம் தரக்கூடிய சில அறிவிப்புகள் என்று கலவையான உணர்வுகளுடன் சர்வதேசப் பிரதிநிதிகள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

"நோக்கங்களை நிறைவேற்றுவதில் இந்த மாநாடு பாஸா?ஃபெயிலா?" என்று கேட்டால், "இப்போதைக்கு ஜஸ்ட் பாஸ்" என்றுதான் சொல்லவேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு