Published:Updated:

`கேன்ஸ் எனக்குதான்... ஐபிஎல்லும் எனக்குதான்!' - இது கொரோனா பிளான்

உலக நிகழ்வுகள்
உலக நிகழ்வுகள்

இந்த க்வாரன்டீன் காலங்களில், அரசியல், சினிமா, விளையாட்டு என கொரோனாவால் மிஸ் ஆகும் சில முக்கிய உலக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இங்கே...

துக்'வேணாம்... வலிக்குது… அழுதுருவேன்' என வடிவேலு ரேஞ்சுக்கு கெஞ்சிப் பார்த்தும், விட்டேனா பார் என்கிறது கொரோனா. வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் மீட்டிங்கில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அரட்டை என்பதில் தொடங்கி, வீடியோ கால் வழியே புடவை வாங்குவது, வீட்டிலேயே பரோட்டா சுடுவது, அதை சோஷியல் மீடியாவில் ஆஸ்கர் வாங்கிய ரேஞ்சுக்குப் பகிர்வது வரை நாமும் கொரோனாவோடு வாழப் பழகிவிட்டோம். ஒட்டுமொத்த உலகமும் 'நியூ நார்மல்' எனச் சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. விளைவு - அதிக மீடியா கவனம் பெரும் முக்கிய சர்வதேச நிகழ்வுகள் எல்லாம் பல்வேறு மாற்றங்கள் கண்டிருக்கின்றன. இந்த க்வாரன்டீன் காலங்களில், அரசியல், சினிமா, விளையாட்டு எனக் கொரோனாவால் மிஸ் ஆகும் சில முக்கிய உலக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இங்கே...

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
Pixabay

முதலில் அரசியல். தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மொத்தமாக முடிவு கட்டிவிட்டது கொரோனா. உலகளவில், கடந்த ஐந்து மாதங்களில் 69 நாடுகளில் இதுபோன்ற உள்ளாட்சித் தேர்தல்களும், 24 நாடுகளில் நாடாளுமன்றத் தேர்தல்களும் நடத்த வழியில்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இலங்கை உட்பட சில நாடுகள் ``யார்ரா கொரொனா” என்ற குரலோடு தேர்தலை நடத்தி முடித்திருக்கின்றன.

உலகின் 'பிக் பாஸ்'ஸான அமெரிக்காவின் அதிபர் தேர்தல்கள் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. வழக்கமாகத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதங்கள், பிரசாரங்கள், பேட்டிகள் எனக் களைகட்டும். ``போகியா கொண்டாடுறீங்க.. உங்களுக்கெல்லாம் பொங்கலே இல்லை” எனக் கொரொனா கலாய்த்துவிடும் என்பதாலோ என்னவோ அரசியல் களம், இம்முறை களையிழந்து காணப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

2019-ம் ஆண்டின் பருவநிலை மாற்றத்துக்கான மாநாடு ஸ்பெயின் நாட்டில் நடந்தது. அப்போது, சூழலியல் போராளி க்ரெட்டா தன்பெர்க் பற்ற வைத்த நெருப்பொன்று பரவிப் படர்ந்து இயற்கைப் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு பற்றி உலகை அதிகம் பேச வைத்தது. ஆனால், 2020-ம் ஆண்டுக்கான ஐ.நா சபையின் பருவநிலை மாற்றத்துக்கான மாநாடு (United Nations Climate Change conference) ஒருவருட காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்திருக்கும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூகுள் உருவாக்கும் `விர்ச்சுவல்' தேசிய கீதம்... நாம் எப்படிப் பங்களிக்கலாம்? #SoundsOfIndia

நியூயார்க்கில் செப்டம்பர் மாதம் 75-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக இந்நிகழ்வு ஒரு சர்வதேச அரசியல் திருவிழாவைப் போல நடக்கும். உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி முக்கிய சர்வதேச பிரச்னைகள் குறித்து அலசுவதும், விவாதிப்பதும் நடக்கும். எந்தத் தலைவர் என்ன பேசினார், யாருடன் கைகுலுக்கினார், யார் யாரைச் சந்தித்தார்கள் என அந்தச் சில தினங்கள் உலகமே அந்த ஒரு அரங்கத்தை உற்று நோக்கும். ஆனால், 75 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நிகழ்வுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் வரப்போவதில்லை. கொரோனா காரணமாக, அவரவர் உரைகளை வீடியோவாக விழாவுக்கு அனுப்பி வைப்பதாக இருக்கிறார்கள். ஆனால், 'நியூயார்க் நகரில் நடக்கும் நிகழ்வு அல்லவா, நான் இல்லாமல் எப்படி?' என ட்ரம்ப் மட்டும் நேரில் கலந்துகொள்ளப்போகிறார். மற்றபடி எல்லா நாடுகளினுடைய நியூயார்க்கில் வசிக்கும் பிரதிநிதி ஒருவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடும்.

அடுத்தது சினிமா.

சிவப்பு கம்பளங்களில் நட்சத்திரங்கள் நடைபோட, பலநூறு பிளாஷ் லைட்டுகள் வெளிச்சம் பாய்ச்சும். சர்வதேச விருது நிகழ்வுகள் தொடங்கி, திரைப்பட விழாக்கள், வெளியீடுகள் வரை அனைத்தும் தடைப்பட்டு சினிமா உலகம் இருட்டடைந்து காணப்படுகின்றது. ஆஸ்கர் விருது விழா மட்டும் பிப்ரவரி மாதமே நடந்து முடிந்ததால் தப்பித்துக்கொண்டது. ஆனாலும், அடுத்த ஆண்டுக்கான விழாவை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைத்திருக்கிறது விருதுக் குழு. தொலைக்காட்சி நிகழ்வுகளின் ஆஸ்கர் விருதுகள் எனக் கருதப்படும் எம்மி விருதுகள் முழுக்க ஆன்லைன் வழியாக நடக்கவிருக்கிறது.

'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ரா
'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ரா

இந்தியக் கதாநாயகிகள் அதிகமான எண்ணிக்கையில் அணிவகுக்கும் கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நியூயார்க்கில் உள்ள Metropolitan Museum of Art's Costume Institute-ல் நடைபெறும் நிதி திரட்டும் விழா மெட் காலா. கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவின் வித்தியாசமான அலங்காரம் மூலம் இந்தியாவிலும் அதிகம் கவனம் பெற்ற இந்த நிகழ்வும் ரத்தாகியிருக்கிறது. இவை மட்டுமன்றி சர்வதேச விருது நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட விழாக்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிளாக் விடோ
பிளாக் விடோ

விழாக்கள் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகத் திரைப்பட ரிலீஸுகள் இல்லாமல்போனதே ஒரு சர்வதேச பாதிப்புதான். அதுவும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட சில திரைப்பட பிரான்சைஸ்களின் படங்கள் வராமல் ரசிகர்கள் தவித்துப் போயிருக்கிறார்கள். எந்த சிக்கல் என்றாலும் வர வேண்டிய இடத்துக்குத் தவறாமல் வரும் ஜேம்ஸ் பாண்டே இம்முறை வரமுடியாமல் போனது. ஜேம்ஸ் பாண்டின் 'No time to die' திரைப்படம், மார்வெல் திரைப்பட வரிசையில் 'Black Widow' திரைப்படம், நோலனின் 'Tenet' படம், ஆல் டைம் மெகா ஹிட்டான ஃபிரெண்ட்ஸ் தொலைக்காட்சித் தொடரின் 'friends reunion' எபிசோடு, போன்ற மக்களின் பேவரைட்ஸ் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

சினிமா, அரசியல் நிகழ்வுகளில் தாமதங்களைக்கூட ஏற்றுக்கொண்டுவிடலாம். ஆனால், விளையாட்டு நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதைத்தான் ஜீரணிப்பது கஷ்டம். அதுவும் உயிரைக்கொடுத்து டிக்கெட் வாங்கி ஸ்டேடியம் சென்று விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு கொரோனா காலம் பூமியில் நரகம். குறிப்பாக, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள இந்தியாவில், ஆடியில் தள்ளுபடி போல, ஏப்ரலில் ஐபிஎல் எனப் பழகிப் போயிருக்கிறார்கள் மக்கள். இவர்களுக்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிப்போகத் தள்ளிப்போக பிபி ஏறியது. ஒருவழியாகச் செப்டம்பர் மாதம் துபாயில் தொடங்கவிருக்கிறது ஐ.பி.எல். ஆனால், ஆரவாரமற்ற ஆளற்ற மைதானத்தில்தான் போட்டிகள் நடக்கப்போகின்றன.

கட்டவுட்டுகளால் நிரம்பிய மைதானம்
கட்டவுட்டுகளால் நிரம்பிய மைதானம்

கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து கூடைப்பந்து என அனைத்து விளையாட்டுப் போட்டிகளும், ஆளில்லாத மைதானங்களில் நடத்தப்படுகின்றன. சில ஐரோப்பிய கால்பந்து கிளப்கள் காலி இருக்கைகளுடன் வீரர்கள் ஆடினால் நன்றாக இருக்காது என ரசிகர்களின் கட்டவுட்களால் மைதானங்களை நிரப்புகின்றன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பை T 20 கிரிக்கெட் போட்டியும் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பிரிக்ஸ் கார் ரேஸ் பந்தயம், ஃபிரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் எனப் பலபோட்டிகள் நடப்பதற்குத் தடையேற்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஸ்போர்ட்ஸ் சேனல்கள் எல்லாம் ரிப்பீட் சீரியல்கள் போல, மேட்ச் ஹைலைட்ஸ் போட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தன.

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

இவைதவிர உலக அழகி போட்டிகள், பல்வேறு சர்வதேச மாநாடுகள், ராணுவ பயிற்சிகள், மத விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் கேம் விழாக்கள், எனச் சர்வதேச திருவிழாக்கள் தொடங்கி, திருவிழா போல நடக்கும் நம்ம ஊர் திருமணங்கள் வரை அனைத்தையும் புரட்டிப்போட்டிருக்கிறது கொரோனா. தடைப்பட்ட, தாமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் 2021 ஜனவரியிலிருந்து மீண்டும் தொடங்கி நடத்தத் திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன சம்பந்தப்பட்ட அமைப்புகள். ஆமாம், 2020-ல் மட்டுமே இருப்பேன் என ஒப்பந்தம் போட்டா வந்திருக்கிறது கொரோனா?

ஒலிம்பிக்ஸ் நடக்குதோ, உலகக்கோப்பை நடக்குதோ... 2021-ம் ஆண்டிலாவது 90'ஸ் கிட்ஸ்-க்கு திருமணம் நடந்தால் சரி.
அடுத்த கட்டுரைக்கு