Published:Updated:

கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் வறுமையின் பிடியில் குழந்தைகள்! - யுனிசெப் அதிர்ச்சி

கொரோனா
கொரோனா

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பின் காரணமாகப் பலரும் வறுமையில் தவிக்கின்றனர்.

ஐநா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பின் காரணமாகப் பலரும் வறுமையில் தவிக்கின்றனர். இதனால் அங்கு மில்லியன் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் வணிகங்கள் தடைபட்டது, சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட 8 மில்லியன் மக்களில் குழந்தைகள் கிட்டத்தட்ட பாதி என்று அதிர்ச்சி கணக்கு சொல்கிறது யுனிசெஃப்.

ஆட்டோமொபைல் தொழிற்சாலை #lockdown
ஆட்டோமொபைல் தொழிற்சாலை #lockdown

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவின் யுனிசெப் இயக்குநர் டெட் சாய்பன் திங்களன்று அம்மானிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

``இப்போது நிலவும் அசாதாரண சூழலில் தொற்றுநோய் குழந்தைகளை நேரடியாகப் பாதிக்கிறது. குறிப்பாக, தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் பலரும் வேலைகள் இழந்துள்ளனர். இந்தக் குடும்பங்கள் ஏற்கெனவே பசியிலும் வறுமையிலும் உழல்கிறவர்கள். தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான சூழல் காரணமாக அந்தக் குடும்பங்கள் தங்கள் தினசரி வாழ்வில் உணவைக் கொண்டுவரப் போராடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Representational Image
Representational Image

மேலும், ``கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு இந்த மக்களைக் கொடுமையான வாழ்நிலைக்குத் தள்ளியுள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. சிரியா, ஏமன், சூடான் பாலஸ்தீன பிரதேசங்கள், ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகப் புலம்பெயர்ந்த மக்கள் உட்பட 25 மில்லியன் குழந்தைகள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்காகக் காத்துக்கிடக்கின்றனர்'' என யுனிசெப் நிறுவனம் கூறுகிறது.

விலைவாசி உயர்வு மற்றும் உள்கட்டமைப்பு சேதமடைந்த நாடுகளில் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஏற்கெனவே சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, நீர் மற்றும் மின்சாரம் இல்லை என்று ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

``போதிய அடிப்படை சேவைகள், பிராந்தியத்தின் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மோதல்கள், வறுமை, பற்றாக்குறை மற்றும் இப்போது COVID-19 முதலிய காரணத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் கடினமான வாழ்க்கையைத் தாங்கமுடியாது" என்று சாய்பன் கவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு