Published:Updated:

80-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் புகார்... ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன் வழக்கின் நிலை என்ன?

Harvey Weinstein
Harvey Weinstein ( AP / Mary Altaffer )

ஹாலிவுட்டின் முடி சூடா மன்னன், தயாரிப்பாளர் `ஹார்வி வெய்ன்ஸ்டீன்' மீதான பாலியல் வழக்கு, ஒட்டுமொத்த அமெரிக்காவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது.

ஹாலிவுட்... பிரமாண்டத்தின் உச்சம். கற்பனைகளின் உறைவிடம். சிவப்புக் கம்பளங்களும், விளம்பரங்களும், பணமும், படாடோபமும் நிறைந்து வழியும் கனவு உலகம். இந்த அலங்காரம், அழகெல்லாம் வெளிப்பூச்சு மட்டுமே. உள்ளே ரத்தமும் சதையும், குரூர மனங்களும், சுயநலமும், அரசியலும், துயரங்களும், அசிங்கங்களும் விரவிக்கிடக்கும் மற்றுமொரு இடம் இது என்பதே நிதர்சனம்.

ஹாலிவுட்
ஹாலிவுட்
history.com

ஹாலிவுட் கொண்டாடும் ஆஸ்கர் விருதுகளைத் தாண்டி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஹாலிவுட்டில் அதிக கவனம்பெற்றது ஒரு வழக்கு. `hollywood mogul', `god of hollywood ' என அழைக்கப்படும், ஹாலிவுட்டின் முடிசூடா மன்னன், தயாரிப்பாளர் `ஹார்வி வெய்ன்ஸ்டீன்' மீதான பாலியல் வழக்கு, ஒட்டுமொத்த அமெரிக்காவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது.

ஹார்வி, ஹாலிவுட்டின் முடி சூடா மன்னன். அவர் நினைத்தால் அங்கு ஒரு கலைஞனை உருவாக்கி உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைக்கவும் முடியும், பகைத்தால் அவனை உருக்குலைத்து ஓரம்கட்டவும் முடியும். திரை உலகின் மிக மரியாதைக்குரிய ஆஸ்கர் விருதுகளின்போது, 1966-லிருந்து 2016 வரை, கடவுளுக்கு நிகராக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 34 முறை விருது பெற்றவர்கள் நன்றி சொல்லியிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. இப்படி, ஹாலிவுட்டின் தயாரிப்பாளர்களில், தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவான் ஹார்வி வெய்ன்ஸ்டீன். திரை உலகம் தாண்டி, அரசியலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கியமான ஆதரவாளர், கொடையாளர். ஆக, ஹார்விக்கு அரசியல் பலமும் உண்டு. அதுவும் அதீத பலம். எனவேதான் ஹார்வி, ஹாலிவுட்டின் கடவுளாக பார்க்கப்பட்டார். ஹார்வி யாராலும் தொட முடியாத உயரத்திலிருந்தார். ஆனால், அது 2017-ம் ஆண்டு வரைதான். ஹார்வி மீது நடிகைகள் ரோஸ் மேக்கோவன், ஆஷ்லே ஜட் உட்பட பல பெண்கள், அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகப் புகார் எழுப்ப, அது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விரிவாக வெளியானது. அமெரிக்கத் திரையுலகின் சர்வாதிகாரி ஹார்வி வெய்ன்ஸ்டீன் சரியத் தொடங்கியது அங்கேதான்.

Harvey Weinstein
Harvey Weinstein
AP

`காஸ்டிங் கவுச்' எனப்படும் திரை வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பாலியல் ரீதியாகச் சீண்டுவது, ஆபாசமாக நடந்துகொண்டது, வன்புணர்வு செய்தது என அவர்மீது பல்வேறு பெண்களின் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. ஹார்வியின் செயல்பாடுகள், அத்துமீறல்கள் அப்படி ஒன்றும் ரகசியமானவை அல்ல, அனைவரும் அறிந்திருந்ததே. ஆனால், நேரடியாகப் புகார்களின் மூலம், அந்த அசிங்கங்களின்மீது போர்த்தியிருந்த மூடுதிரை விலகியதும், பதறியது அதிகார வர்க்கம். புகார் வெளியான மூன்றாவது நாள், ஹார்வி அவரது சொந்த நிறுவனமான வெய்ன்ஸ்டீன் கம்பனியில் இருந்து, அதன் பங்குதாரர்களால் நீக்கப்பட்டார்.

புகார்கள் நிற்கவில்லை. பல்வேறு பிரபலங்கள் அவர்மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க, அமெரிக்கத் திரையுலகின் மிக முக்கியமான நடிகைகளான க்வேநத் பல்ட்ரோ, ஏஞ்சலினா ஜோலி போன்றோரும்கூட தங்களின் இளம் வயதில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தது எனச் செய்தி பகிர்ந்தனர். இதைத் தொடர்ந்து, பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் கொடுமைகள் பற்றி தைரியமாக வெளிப்படுத்தத் தொடங்கினர். அமெரிக்காவில், அதற்கு `வெய்ன்ஸ்டீன் எஃபெக்ட்' என்ற பெயர் உருவானது.

ஹார்வி மீது குற்றம் சாட்டிய நடிகைகள்
ஹார்வி மீது குற்றம் சாட்டிய நடிகைகள்
elle.com

பல ஆண்டுகளாக, பெண்கள் தங்கள் மனதில் அணைகட்டி வைத்திருந்த துயரங்கள் வெடித்து வெளிப்பட்டு, அது ஒரு இயக்கமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து #metoo என உலகம் முழுக்க பெண்கள் தங்கள் பாலியல் சிக்கலுக்கு உள்ளானதையும், அப்படி தொல்லை கொடுத்தவர் யார் என்ற தகவல்களையும் பொதுவெளியில் உடைத்தனர். சக்திவாய்ந்த ஒரு மனிதனின்மீது தைரியமாகப் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, அது உலகம் முழுக்க பலரது தயக்கங்களையும் பயங்களையும் உடைத்தெறிந்தது. பாலியல் தொல்லைக்கு எதிரான, சமீப காலத்தின் மிக முக்கிய ஆயுதமாக இந்த இயக்கம் உருவெடுத்தது. அத்தனைக்குமான தொடக்கப்புள்ளி ஹார்வி வெய்ன்ஸ்டீன்.

ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிக்க, அவரது மனைவி அவரை விட்டு விலகுவதாக அறிவித்தார். BAFTA அவரை இடைநீக்கம் செய்தது. அகாடமி விருதுக் குழு இவரை கமிட்டியிலிருந்து நீக்கியது. அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலிருந்தும் அவர் விலகினார். அமெரிக்க தயாரிப்பாளர்கள் சங்கம், அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் எல்லாம் அவருக்கு கண்டனம் தெரிவித்து, அவரிடமிருந்து விலகிக்கொண்டனர்.

Harvey Weinstein
Harvey Weinstein
AP / Mark Lennihan

அடுத்தடுத்த சிக்கலில் விழுந்தார் ஹார்வி, அவர் மீதான புகார்கள் பெருகிக்கொண்டே சென்றது. ஹாலிவுட்டின் அத்துணை பேருக்கும் அவர் குறித்து தெரிவிக்க ஒரு கருத்து இருந்தது. ஹார்வி, தினசரி செய்தியானார். நடிகர் சான்னிங் டாட்டம், ஹார்வியின் தயாரிப்பில் அவர் நடித்து வந்த படத்திலிருந்து பாதியில் விலகினார். பல்வேறு அமைப்புகள், பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகள், மரியாதைகள் திரும்ப பெறப்பட்டன. ஒன்றிரண்டு அல்ல, ஏறத்தாழ 80 பெண்கள். பெரும்பாலும் நடிகைகள். ஹார்வி தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவோ அல்லது அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவோ புகார் அளித்தனர். அத்தனை குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார் ஹார்வி.

2017-ல் இவர் மீது புகார்கள் எழுப்பப்பட்டாலும், 2018-ம் ஆண்டுதான், குற்றவியல் வழக்குப் பதியப்பட்டது. மிரியம் ஹேலி மற்றும் ஜெசிகா மேன் ஆகிய இரு பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அவர்மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹார்வி நியூயார்க் போலீஸில் சரணடைய, அவர் கைதுசெய்யப்பட்டார். நியூயார்க் தாண்டி கலிஃபோர்னியா மாகாணத்திலும் அவர்மீது இதேபோன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட ஹார்வி, பின்னர் ஒரு மில்லியன் டாலர் பிணைத்தொகை செலுத்தி வெளியில் வந்தார். எனினும் நியூயார்க், கனெக்டிகட் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது என்ற நிபந்தனையும், அவர் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கையில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகள், முறையான சட்ட நடைமுறைகள் எல்லாம் கடந்து, வழக்கு இந்த பிப்ரவரி மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்க நீதிமன்ற விசாரணை முறைகளின்படி, பொதுமக்களிலிருந்து ஏழு ஆண்கள், ஐந்து பெண்கள் என 12 பேர் இருதரப்பு வழக்கறிஞர்களாலும் நடுவர்களாகத் (Jury) தேர்ந்தெடுக்கப்பட்டனர். வழக்கறிஞர், தொழிலதிபர், முதலீட்டு நிறுவனப் பங்குதாரர், வரி கணக்காளர், வீட்டு வசதி வாரிய அலுவலர் என இவர்கள், பல்வேறு துறைப் பின்புலங்களைக் கொண்டவர்கள்.

அமெரிக்க நீதிமன்றம் (JURY)
அமெரிக்க நீதிமன்றம் (JURY)
AP

வழக்கு விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரங்களைப் பொறுத்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றம் இழைத்தாரா இல்லையா என்பதை இந்த நடுவர் பெஞ்ச் ஒருமனதாக முடிவு செய்யும். ஹார்வி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்கும். மனுதாரர்கள் தரப்பிலிருந்து 28 பேரும், ஹார்வி தரப்பிலிருந்து 7 பேரும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதியோடு இரு தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில், வழக்கில் ஒருமனதாக ஒரு முடிவிற்கு வருவதற்காக, நடுவர் பெஞ்ச் வழக்கு விவரங்களை ஆராய்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறது.

Vikatan

நீதிபதி ஜேம்ஸ் பர்க் நடுவர்களுக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி ஹார்வி மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலும் எனும் பட்சத்தில், அவர் குற்றவாளி என ஒருமனதாகத் தீர்ப்பு வழங்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அப்படி இயலாத பட்சத்தில், இந்த வழக்கு விசாரணை, முடிவிற்கு வர முடியாத வழக்கு விசாரணை (mistrail) என நீதிபதியால் அறிவிக்கப்படும். அப்படியாகும் பட்சத்தில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நடுவர் மன்றத்திலிருந்து இனி எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். ஒருவேளை, ஹார்விக்குத் தண்டனை வழங்கப்பட்டால், கடந்த 50 ஆண்டுகளில் ஹாலிவுட் காணாத ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உலக அளவில் இவ்வழக்கு விசாரணை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். அமெரிக்கா அதன் சக்திவாய்ந்த ஒரு மனிதனை சட்ட ரீதியாகத் தண்டிக்குமேயானால், உலகம் முழுவதிலும் அநீதிகளுக்கு எதிராக எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும் ஒரு மன உறுதியை அது விதைக்கும் என்பதே உண்மை.

அடுத்த கட்டுரைக்கு