Published:Updated:

1962 முதல் 2020 வரை இந்தியா - சீனா எல்லையில் என்ன நடந்தது? ஒரு விரிவான அலசல்!

இந்தியா - சீனா இரு நாடுகளின் எல்லை உறவுகளின் வரலாறு என்ன, இந்தப் பதற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி எங்கு இருக்கிறது, தற்போதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது?

2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி, இந்திய-சீன உறவின் 70-ம் ஆண்டு நிறைவு தினம். இந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாட இரு நாடுகளும் பல திட்டங்களைத் தீட்டியிருந்தன. கொரோனா அதற்கு வில்லனாக மாற இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் சீனாவின் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்தனர். இந்த வாழ்த்துகளில், வளரும் இந்திய - சீனாவின் நல்லுறவைப் பற்றியும், இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.

India - China
India - China

ஆனால், இரண்டு மாதங்களில் எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. கொண்டாட்டங்களுக்குத் தயாராக வேண்டிய சீனாவும், இந்தியாவும் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும் பகிர்ந்துகொள்ளும் 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதி முழுவதும் இரு நாட்டு ராணுவங்களும் குவிக்கப்பட்டிருக்கின்றன. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

Corona virus
Corona virus
உலகம் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்க, இந்தியா சீனா ஆகிய இரு பலம் பொருந்திய நாடுகள் திடீரெனப் போர்க்களத்தில் மோதிக்கொள்வதன் காரணம் என்ன, இரு நாடுகளின் எல்லை உறவுகளின் வரலாறு என்ன, இந்தப் பதற்றத்தின் ஆரம்பப்புள்ளி எங்கு இருக்கிறது, தற்போதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது என விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

இந்திய - சீன எல்லை:

சிக்கிம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் சீனாவுடன், 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது இந்தியா. 1962 மற்றும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகப் போர் இல்லை. ஆனால், ஒருபுறம் சுமுகமான உறவும் பேச்சுவார்த்தைகளும் வர்த்தக உடன்படிக்கைகளும் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் எல்லையில் அவ்வப்போது போர் பதற்றமும் இருந்து வந்தது.

Border
Border
Twitter/SophiaYan

இந்த நிலையில், இரு நாடுகளும் 1996 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் எல்லைகளில் அமைதிக்காக இரு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன. இந்த உடன்படிக்கையின்படி, இரு நாடுகளும் தங்கள் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தவோ, வேதியல் பொருள் பயன்படுத்துவதோ, வெடிகுண்டு சோதனை போன்ற ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ மாட்டோம் என ஒப்புக்கொண்டன.

இந்தியா - சீனா எல்லை
இந்தியா - சீனா எல்லை

இரு நாடுகளுக்கு இடையேயான அந்த அமைதி சற்று குலைந்தது 2017-ம் ஆண்டுதான். இந்தியா, பூட்டான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கக்கூடிய டோக்லாம் பகுதியில் 2017-ம் ஆண்டு சீனா படைகளைக் குவித்தது. இந்திய-பூட்டான் எல்லையில் சீனா அத்துமீறி சாலை போட முயன்றபோது, இந்திய ராணுவம் அதைத் தடுத்தது. ஆபரேஷன் ஜூனிபர் எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில், டோக்லாம் பகுதியில் 270 இந்தியத் துருப்புகள் முற்றுகையிட்டன. 73 நாள்கள் இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே முறைத்துக்கொண்டு நின்றன. இருநாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடந்ததையடுத்து சீனா விலகிச் சென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பிறகும் இருநாட்டுத் தலைவர்களும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சந்தித்துக்கொண்டனர். இருநாடுகளின் நல்லுறவைப் பலப்படுத்த பல யோசனைகள் பகிரப்பட்டன. இரு நாடுகளின் நல்லுறவுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆனதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டதும் அதன் அடிப்படையில்தான். இந்த நிலையில் கொரோனா வைரஸ் எனும் மாபெரும் அச்சுறுத்தல், உடல்நிலை, உயிரிழப்பைக் கடந்தும் பல விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

மோடி-ஜின்பிங் சந்திப்பு
மோடி-ஜின்பிங் சந்திப்பு

கொரோனா வைரஸ் பரவியதால் சீனாவைக் குற்றம் சாட்ட தொடங்கின பல நாடுகள், சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது, சீன வர்த்தகத்தைத் தவிர்ப்பது முதல் சீனாவை சர்வதேச விசரணைக்கு உட்படுத்துவது வரை, உலக நாடுகளின் அழுத்தம் சீனாவின் மீது மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாகவே சீனா தன் பலத்தை, தன் இருப்பை உலக அளவில் அதிகப்படுத்தி வந்தது. இந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய தைவான், வியட்நாம் ஆகிய பகுதிகளில் தன்னுடைய ராணுவச் செயல்பாடுகளை அதிகரித்தது சீனா.

இந்திய சீன எல்லையிலும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே பிரச்னைகள் ஆரம்பமாயின. சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் லடாக் பகுதியில் பறந்ததால் பதற்றம் தொடங்கியது. அதன்பிறகு இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் தங்கள் படைகளைக் குவிக்கத் தொடங்கின. சீனப் படையினர் சில இடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எல்லை தாண்டியிருக்கிறார்கள் எனத் தகவல்கள் பரவின. அதன் உச்சக்கட்டமாக, மே மாத இறுதியில், பெய்ஜிங்கில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ராணுவ உயர் அதிகாரிகளின் முன்பு சீன அதிபர் ஜி ஜின்பிங் `போருக்குத் தயாராகுங்கள்’ என உரை நிகழ்த்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீனத் துருப்புகள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கால்வன் ஆற்றங்கரையில் நடந்த ஒரு சண்டையே, 1962-ம் ஆண்டு போருக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

சீனா, தன்னுடைய படைகளை எல்லைகளில் குவிப்பதற்குப் போதுமான கட்டுமான வசதியை மிகச்சிறப்பாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படியான வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. எல்லையை ஒட்டி 73 இடங்களில் சாலைகள், ஒன்பது ரயில் பாதைகள், சில விமான இறங்குதளங்கள் அமைக்க 1990 -களிலே திட்டமிட்டது இந்தியா. 1999-ம் ஆண்டு இதற்கு அனுமதியும் பெறப்பட்டது. ஆனால், இதுவரை 35 சாலைகளும், விமான இறங்குதளங்களும் மட்டும் தயாராகி இருக்கின்றன. எல்லைகளில் அசாதாரணச் சூழல் நிலவும் வேளையில், இந்தச் சாலைக் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியது மத்திய அரசு.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
மிக உயரமான இறங்குதளம்!
இந்தியாவின் இந்த விமான இறங்குதளங்களில் முக்கியமானது லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி. உலகிலேயே மிக உயரமான இடத்திலிருக்கும் விமான இறங்குதளம் இதுவே.

இந்திய விமானப்படையின் இந்த விமானத் தளத்தை லடாக்கின் பிற பகுதிகளுடன் இணைத்து, 255 கிலோமீட்டர் நீளத்துக்குச் சாலை போட்டது இந்தியா. இந்தியாவின் எல்லையின் பலத்தைக் கூட்டவேண்டி போடப்பட்ட இந்தப் பிரதான சாலை சில இடங்களில் சீன எல்லை வரை நீண்டது. இந்தநிலையில்தான், இந்தியா தன்னை பலப்படுத்திக்கொள்வதை விரும்பாத சீனா, எல்லையில் சண்டையை ஆரம்பித்திருக்கிறது

சீன ராணுவம்!
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 130 முறை சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்ததாகப் பதிவு உள்ளது.

ஆனால், இம்முறைதான் ஆக்ரோஷம் காட்டுகிறது சீனா. லடாக்கின் 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ள அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதேபோல அருணாசலப் பிரதேசத்தை ஒட்டி 90,000 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு உரிமை கொண்டாடுகிறது. கடந்த மாதம் சிக்கிம் மாநிலத்தின் முகுத்தங் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எல்லை முழுவதும் சீனா படைகளைக் குவித்தாலும், லடாக் பகுதிகள்தான் பெரும் ஆபத்தில் இருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் இரு தரப்பிலிருந்தும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், படைகளை பின்வாங்கிக்கொள்வது எனவும் அந்தப் பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுப்பது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

India china faceoff timeline
India china faceoff timeline
Vikatan Infographics

இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 'பாட்ரோல் பாயின்ட் 14' என்ற இடத்தில் ஒப்பந்தத்தை மீறி சீனா டென்ட் அமைத்ததாகத் தெரிகிறது. திங்கள்கிழமை (15.06.2020) இரவு இந்த டென்டை அகற்ற முடிவு செய்து அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய ராணுவ வீரர்கள் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட இரு நாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். முதலில் வெளியான தகவலில் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. பின்னர், இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வமான அறிக்கையில், இந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, சீனாவிலும் 45 ராணுவ வீரர்கள் இறந்தனர் எனச் சொல்லப்படுகிறது. சீனா தரப்பிலிருந்து உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்கள் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

`ஆணியடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் தாக்குதல்?’- சீனாவுக்கு வலுக்கும் கண்டனம்

இந்த மோதலில் வீரர்கள் துப்பாக்கிகள் இல்லாமல் கற்கள், கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால், ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பலமணி நேரம் நீடித்த இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, சீன ராணுவ வீரர்கள் ஆணியடிக்கப்பட்ட கம்பிகள் உள்ளிட்ட கொடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா எல்லையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிக அசாதாரணச் சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதனிடையே, அதிக உயரத்தில் போர் புரியும் ஒரு ராணுவக் குழுவை இந்தியா லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முப்படைகளும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என்று ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்த நிலையில், சீன எல்லைப்பகுதியிலிருந்து அந்நாட்டு வீரர்கள் பின்வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் மாத தொடக்கத்தில் கூட, எல்லை முழுக்கப் படைகளைக் குவித்த சீனா, கால்வான் பகுதியில் மட்டும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பின்வாங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆகவே, தற்போது சீனா தங்கள் வீரர்களைப் பின்வாங்கச் செய்தாலும், அது மோதல்களின் முடிவு என்பதற்கான அறிகுறியாகப் பார்க்க முடியவில்லை. இந்த மோதல் நடந்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், பிடித்துவைத்திருந்த பத்து இந்திய ராணுவ வீரர்களை, சீனா விடுதலை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவம், இதுகுறித்து நேரடியாகச் செய்தி வெளியிடவில்லை. ஆனால், இந்திய வீரர்கள் யாரும் மோதலில் காணாமல் போகவில்லை என்று மட்டும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், இந்தப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவே இரு நாடுகளும் முனைவதாகத் தெரிகிறது. இதற்காக, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்தான் சீனா விவகாரத்தைக் கையாள இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானே ஆகியோர் டெல்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ஆலோசனை நடத்தினர். பிரதமரிடமும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், இன்று (19.06.2020) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லை விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்தியா எல்லையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் பகிர்ந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) 750 மில்லியன் டாலர் கடன் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5715 கோடி ஆகும்.

இதுகுறித்து, AIIB வங்கியானது கடந்த புதன் கிழமை (17.06.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் (ஏடிபி) இணைந்து அளிக்கப்பட்ட இந்தக் கடன் தொகை முறைசாரா துறை உள்ளிட்ட வணிகங்களுக்கான பொருளாதார உதவியை மேம்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும், நாட்டின் சுகாதாரம் பாதுகாப்பு முறைகளை வலுபடுத்துவற்கும் பயன்படும்'' என்று தெரிவித்துள்ளது. ஒருபுறம் பாதுகாப்பு அச்சுறுத்தல், மறுபுறம் பாதுகாப்பு மேம்பாட்டுக்குக் கடனுதவி என இரட்டை வேடம் போடுகிறதா சீனா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா
எது எப்படியாயினும், இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்தப் பிரச்னையில், முதலில் எல்லையைக் கடந்து ஒப்பந்தத்தை மீறியது சீனாதான் என இந்தியாவும், இந்திய வீரர்கள்தான் என சீனாவும் மாற்றி மாற்றி பழி சுமத்துகின்றனர். தொடங்கியது யாராக இருந்தாலும், இருநாடுகளும் இதை முடித்து வைக்கவேண்டும் என்பதே தற்போது பலரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

இந்திய - சீனா பிரச்னைக் குறித்து ஒரு மினி சர்வே... இங்கே க்ளிக் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு