Published:Updated:

ஒரேநாடு ஒரே சட்டம்... எரியும் இனவாதத்தில் எண்ணெய்

ஒரேநாடு ஒரே சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஒரேநாடு ஒரே சட்டம்

- சயந்தன்

ஒரேநாடு ஒரே சட்டம்... எரியும் இனவாதத்தில் எண்ணெய்

- சயந்தன்

Published:Updated:
ஒரேநாடு ஒரே சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஒரேநாடு ஒரே சட்டம்

அந்த பௌத்த துறவி தன்னைச் சூழ்ந்து திரண்டு நின்ற சனங்களை நோக்கி ஆக்ரோஷமாகச் சொல்கின்றார். “என்னுடைய உரையைச் செவிமடுத்துவிட்டு நீங்கள் வீடு செல்லும்போது கண்ணில் தென்படும் முஸ்லிம் கடைகள்மீதெல்லாம் கல் எறியுங்கள்.” அந்த நள்ளிரவில் அவர் சொன்னதுதான், 2014-ம் ஆண்டு இலங்கையில் அளுத்தகம, பேருவலை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் தொடக்கப்புள்ளி. அக்கலவரத்தில் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள முஸ்லிம் மக்களின் சொத்துகள் நாசமாக்கப்பட்டன.

ஒரேநாடு ஒரே சட்டம்... எரியும் இனவாதத்தில் எண்ணெய்

நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந் தார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். கலவரத்தின் தொடக்கக் குரலான அந்த பௌத்த துறவியின் பெயர், ஞானசார தேரர். ‘பொது பல சேனை’ என்ற தீவிர சிங்கள பௌத்த இயக்கத்தின் பொதுச் செயலாளர். இனவாதத்தையே மூலதனமாக்கி தடாலடியான கருத்துகளை வெளியிடுவதாலேயே பிரபலமானவர். ‘இலங்கையில் ஹலால் உணவுகளைத் தடை செய்ய வேண்டும்’ என்று பிரசாரம் செய்வது, ‘முஸ்லிம்கள் நிறைய குழந்தைகளைப் பெற்று பெரும்பான்மை இனமாக உருவாகத் திட்டமிடுகிறார்கள்’ என்று குற்றச்சாட்டுவது என ஞானசார தேரருடைய கருத்துகள் அரசியல் செய்திகளில் அடிக்கடி இடம் பிடித்துவிடுகின்றன. அவ்வாறில்லாமலும் அவரது பெயர் செய்தித் தலைப்புகளில் இடம்பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு.

ஞானசார தேரர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஆறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2017-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளை அவர் சிறையிலேயே கழித்தார். அதற்குப் பிறகு அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவித்தார்.

இலங்கை அரசியலை உற்று நோக்கும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களாலும், சிறுபான்மை இனத்தவராலும், சிங்கள முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் ஓர் ஆபத்தான சக்தியாகப் பார்க்கப்படுகின்ற இதே ஞானசார தேரரைத்தான் கடந்த வாரம் தன்னுடைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமித்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கிய கோத்தபய ராஜபக்சே முன்னிறுத்திய கோஷம். அது உண்மையில் ‘சிங்கள நாடு, சிங்களர்களுக்கான சட்டம்’ என்ற கோஷத்தின் அரிதாரம் பூசிய வடிவம்தான். 2019-ம் ஆண்டு இலங்கைத் தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைப் பயன்படுத்தி, சிங்கள மக்களிடையே சிறுபான்மை இனங்களைப் பற்றிய ஓர் அச்சத்தை உருவாக்குவதும், அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றவல்ல ஆபத்பாந்தவனாகத் தன்னை உருவகிப்பதுமே ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்கான கோத்தபயவின் வியூகமாக இருந்தது.

ஒரேநாடு ஒரே சட்டம்... எரியும் இனவாதத்தில் எண்ணெய்

ஜனாதிபதி தேர்தலில் தனக்குக் கிடைக்கப்போகிற வாக்குகள் யாருடையவை என்பதில் கோத்தபய தெளிவாகவே இருந்தார். தமிழர்களும் முஸ்லிம்களும் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அவர், அந்த உண்மையைத் தனக்கான ஆயுதமாகவும் பயன்படுத்திக்கொண்டார். சிங்கள மக்களிடையே ‘நான் உங்களுக்கான தலைவன்’ என்றார். ‘இது உங்களுடைய நாடு’ என்றார். அதையே இன்னொரு விதத்தில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றார். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அது நடந்தது. மூன்றில் இரண்டு பங்கு சிங்களப் பெரும்பான்மை ஆதரவோடு ஜனாதிபதியாக வென்றார்.

இலங்கையில் இனங்களைச் சார்ந்தும், பிரதேசங்களைச் சார்ந்தும், சில சிறப்புச் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம், கண்டியச் சட்டம் என அந்தந்த இன, பிரதேச ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான தனித் தனியான சட்டங்களுக்குப் பதிலாக, ‘அனைவருக்கும் பாகுபாடற்ற ஒரே சட்டம்’ என்ற முழக்கம் கேட்பதற்கு வசீகரமானதாக இருக்கக்கூடும். ஆனால், இனரீதியான பாகுபாடும் பாரபட்சமும் வெளிப்படையாகவே காட்டப்படுகின்ற நாட்டில், தங்களுடைய மரபு வழி ரீதியான தாயக உரிமையை உறுதிசெய்ய இச்சட்டங்களைத் தொடர்ந்து பேண வேண்டிய தேவை சிறுபான்மை இனங்களுக்கு உண்டு என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

எது எவ்வாறாயினும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது என்றைக்குமே இலங்கையில் சாத்தியப்படப்போவதில்லை. ஒரு சிங்கள மரண தண்டனைக் கைதிக்குப் பொது மன்னிப்பு வழங்க முடிந்த ஜனாதிபதிக்கு, விசாரணைகள் இன்றித் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்க முடிந்ததில்லை. அவ்வாறு ஏதும் நடந்தால் சிங்கள இனவாதம் சலித்துக்கொள்ளும் என்றும் தங்களைத் தூக்கி எறியும் என்றும் சிங்களத் தலைவர்கள் அச்சப்படுகிறார்கள்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவாறு அரங்கிற்குள் நுழைந்த கோத்தபயவின் பிம்பம் எந்த வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் சில மாதங்களிலேயே சரியத் தொடங்கியது. இதற்கு கொரோனாவின் வருகையை ஒரு காரணமாகச் சொல்வதா, அல்லது உண்மையிலேயே அவர் நிர்வாகத் திறனற்ற வெறும் ராணுவவாதிதானா என்பதில் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. ஆனால், நாடு படு மோசமாகச் சரிவடைந்ததற்கு சிங்கள மக்கள் அவரை நோக்கியே கை நீட்டினார்கள். முக்கியமாக பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் விழுந்தது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எகிறின. இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன. உணவுப்பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. பணவீக்கம் உருவாகியது.

தினமும் வாழ்க்கையோடு போராடும் நடுத்தர வர்க்கச் சிங்கள மக்களின் கோபம் ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பியிருக்கிற காலத்தில் ஞானசார தேரர் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை ஒரு கணிதச் சமன்பாடாகவே கருத வேண்டியுள்ளது. மிக இலகுவான சமன்பாடு அது.

ஒரேநாடு ஒரே சட்டம்... எரியும் இனவாதத்தில் எண்ணெய்

இப்போது பெரும்பான்மையான சிங்கள மக்கள் ராஜபக்சேக்கள் மீது கோபத்துடன் இருக்கிறார்கள். அதைத் தணிக்க வேண்டுமானால், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். சரியான திட்டமிடலுடன் முன்னேற்றப் பாதைக்குத் திரும்ப வேண்டும். வாழ்க்கைச் செலவுகளை கட்டுப்படுத்தவேண்டும். மிகுந்த அர்ப்பணிப்பும் நேர்மையும் இதற்கு வேண்டும். ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைத்துக் காத்திருப்பவர்களால் அடுத்த தேர்தலுக்குள் இதைச் செய்துவிட முடியாது. அதனால் இன்னொரு சுலபமான குறுக்குப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதைத்தான் கோத்தபயவும் செய்திருக்கிறார்.

பச்சை இனவாதியான ஒருவரை, சிறுபான்மை இனங்களின் சட்டங்களைக் கையாளப்போகும் செயலணியின் தலைவர் ஆக்கியதன் மூலம், தமிழர்களும் முஸ்லிம்களும் தன்மீது மிதமிஞ்சிய கோபம் கொள்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார். அந்தக் கோபம்தான் அவருடைய எஞ்சிய 3 வருடங்களுக்கான அரசியல் மூலதனம். தமிழர்களும் முஸ்லிம்களும் தன்மீது கோபம் கொண்டால் சிங்கள மக்கள் தன்னை அரவணைத்துக்கொள்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஞானசார தேரர் என்ற பச்சை இனவாதியை சட்ட மூலம் ஒன்றுக்கான செயலணித் தலைவர் ஆக்கியது ஒரு நகர்வென்றால், அந்தச் செயலணியில் மருந்துக்கும் ஒரு தமிழரைக்கூட நியமிக்காமல் நிராகரித்தது இன்னொரு நகர்வு. இனிவரும் காலங்களில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெறுப்பேற்றக்கூடிய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத்தான் போகின்றன.