Published:Updated:

நாசகர மன்னன் 45-ம் ட்ரம்ப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிபரின் அலட்சியத்தால் வீழும் வல்லரசு
அதிபரின் அலட்சியத்தால் வீழும் வல்லரசு

அதிபரின் அலட்சியத்தால் வீழும் வல்லரசு!

பிரீமியம் ஸ்டோரி
‘கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது இருக்கட்டும்... எங்கள் அதிபர் டொனால்டு ட்ரம்பிடமிருந்து எங்களைக் காப்பாற்ற தடுப்பூசி கண்டுபிடியுங்கள்’ என, இவ்வளவு நெருக்கடியிலும் கிண்டல் செய்கிறார்கள் அமெரிக்க மக்கள்.

உலகின் சர்வ வல்லமை படைத்த வல்லரசான அமெரிக்காவை வீழ்த்துவதற்கு, அணு ஆயுதங்களோ ஆபத்தான ஏவுகணைகளோ தேவையில்லை. சொல்லப்போனால், எதிரிகள்கூட தேவையில்லை. ‘ஆபத்தான ஒற்றை வைரஸும் அலட்சியம்காட்டும் ஓர் அதிபரும் போதும்’ என்பதை கொரோனா நிரூபித்திருக்கிறது. வேற்று கிரகங்களிலிருந்து வரும் ஆபத்துகளைக்கூட வேரறுக்கும் வல்லமை படைத்ததாக ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் அமெரிக்கா, தங்கள் கண்ணெதிரே நொறுங்கி வீழ்ந்திருப்பதை திகைப்புடன் பார்க்கிறது உலகம்.

இன்று உலகிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அங்குதான். அதிகம் பேர் உயிரிழந்ததும் அங்குதான். இந்தப் பேரழிவைப் பார்த்து, கொரோனா வைரஸைவிட ட்ரம்ப் மீதுதான் அதிக கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

நாசகர மன்னன் 45-ம் ட்ரம்ப்!

நிர்வாகத்தைச் சீர்குலைத்த ட்ரம்ப்!

அதிபர் பதவிக்கு வந்ததும் முதன்முதலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, ‘‘அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புகளைக் கொண்டுவருவோம். இந்தப் பூமியை நோய்களின் துயரம் இல்லாத இடமாக மாற்றுவோம்’’ என்றார் ட்ரம்ப். கொரோனாவின் விளைவால், வரும் ஜூன் மாதத்துக்குள் அங்கு 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழக்கக்கூடும் எனக் கணக்கிடுகிறார்கள். உலகை பேரழிவுகள் தாக்கும்போது, அதற்கு தீர்வு தரும் தேசமாக இருந்தது அமெரிக்கா. இன்று கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முன்பு மண்டியிட்டு உயிர்ப்பிச்சை கேட்கிறது.

சுயசிந்தனையுள்ள அதிகாரிகளையும் தலைவர் களையும் ட்ரம்ப் கடுமையாக வெறுத்தார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில், கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு பேர் மாறிவிட்டார்கள். வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மூன்று முறை மாற்றப்பட்டுவிட்டார். தலையாட்டி பொம்மைகளை மட்டுமே தன்னருகே வைத்திருக்க விரும்புகிறார் ட்ரம்ப்.

ஆப்பிரிக்காவை எபோலா தாக்கியபோது, எதிர்கால நோய்த் தொற்றுகளைச் சமாளிப்பதற் காக ஓர் அதிரடிப்படையை உருவாக்கி வைத்திருந்தார், அப்போதைய அதிபர் ஒபாமா. ஆட்சிக்கு வந்ததும் அதைக் கலைத்தார் ட்ரம்ப். பேரிடர்களைச் சமாளிப்பதற்காக தேசிய அளவில் பொருள்களை வாங்கி வைக்கும் ஓர் அமைப்பு, 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதை அதிகாரமற்றதாக ஆக்கினார் ட்ரம்ப். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தூக்கி எறிந்து விட்ட ட்ரம்பின் தேசத்தை, கொரோனா வைரஸ் பேராசையாகத் தொற்றிக்கொண்டது.

புறக்கணிக்கப்பட்ட முதல் எச்சரிக்கை!

‘‘சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருந்தால், இன்று அமெரிக்காவின் நிலை வேறாக இருந்திருக்கும்’’ என்று சமீபத்தில் வேதனையுடன் சொன்னார் அந்தோணி ஃபாஸி. அமெரிக்காவின் மிக முக்கியமான தொற்றுநோய் நிபுணர் இவர். ட்ரம்ப் அமைத்திருக்கும் கொரோனா தடுப்புக் குழுவின் முக்கிய நபரும்கூட.

ட்ரம்பின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், மாத்யூ பாட்டிங்கர். சீனாவில் உள்ள சி.ஐ.ஏ உளவாளிகளிடமிருந்து இவருக்கு ஜனவரி முதல் வாரத்திலேயே கொரோனா பற்றிய தகவல்கள் வந்தன. அவர் உடனே சுகாதாரத் துறை செயலாளர் அலெக்ஸ் அஸாரிடம் பேசினார். முக்கிய அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. சீனாவிலிருந்து பயணிகள் வருவதைத் தடை செய்வது, பெரிய நகரங்களை மூடுவது, அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது என திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜனவரி 18-ம் தேதி ட்ரம்பைச் சந்தித்து இதையெல்லாம் சொன்னார் அலெக்ஸ் அஸார். ‘‘எங்கோ சீனாவில் இருக்கும் வைரஸுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்... போய் வேலையைப் பாருங்கள்!’’ என்று திட்டி அனுப்பிவிட்டார் ட்ரம்ப்.

அவர் மனதில் அப்போது இருந்தது அமெரிக்க - சீன வர்த்தக ஒப்பந்தம் மட்டுமே! 5,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க விவசாய விளைபொருள்களை சீனா வாங்க சம்மதித்தது. ‘வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுதான் தனக்கு மீண்டும் வெற்றியைத் தரும்’ என நம்பினார் ட்ரம்ப். எனவே, கொரோனாவை காரணம்காட்டி சீனாவைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.

நாசகர மன்னன் 45-ம் ட்ரம்ப்!

கிண்டல் செய்த ட்ரம்ப்!

ஜனவரி 30 அன்று, அமெரிக்காவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அலெக்ஸ் அஸார் அன்று மீண்டும் ட்ரம்பைச் சந்தித்து நிலைமையின் தீவிரம் குறித்துப் பேசினார். ஆனால், ‘‘என் பிசினஸ் நண்பர்களிடம் பேசினேன். எது செய்தாலும் ஷேர் மார்க்கெட் வீழ்ந்துவிடும் என்கிறார்கள். இந்த வைரஸுக்காக பெரும் பொருளாதார இழப்பைச் சந்திப்பதா?’’ என்றார் ட்ரம்ப். அரைமனதுடன் ஒரே ஒரு நடவடிக்கையை மட்டும் அறிவித்தார். சீனாவிலிருந்து வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு வர தடைவிதிக்கப்பட்டது. அப்போதுகூட அமெரிக்கர்கள் சீனா போய் வர தடையில்லை.

அமெரிக்க செனட் சபை, ‘கொரோனா தொற்று, மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும்’ என ட்ரம்பை எச்சரித்தது. பலனில்லை. சுகாதாரத் துறை நிபுணர் ராபர்ட் கேட்லக் என்பவர் வெள்ளை மாளிகைக் குழுவை பிப்ரவரி 21-ம் தேதி சந்தித்து ஒரு கணக்கு சொன்னார். ‘‘சீனா போல இங்கு பரவினால் 11 கோடி அமெரிக்கர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். 77 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவார்கள். 5 லட்சம் பேர் இறக்கக்கூடும்’’ என அவர் எச்சரித்தார். பள்ளிகளை மூடிவிட்டு, கூட்டம் சேரும் நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கச் சொன்னார். ஆனால், ட்ரம்புக்கு ஏதோ வாட்ஸப் ஃபார்வேர்டு மெசேஜ் வந்திருக்கும்போல! ‘‘ஏப்ரல் மாதம் வெயில் அதிகமானதும் வைரஸ் காணாமல்போய்விடும். பூச்சாண்டி காட்டாதீர்கள்’’ என்று சொல்லிவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பூஜ்ஜியம் ஆகிவிடும்!’’

ட்ரம்ப் இந்தியா வந்திருந்த நேரத்தில், கொரோனா பற்றி மக்களுக்குச் சொல்ல சில மருத்துவ நிபுணர்கள் முடிவெடுத்தார்கள். பிப்ரவரி 25-ம் தேதி டாக்டர் நான்சி மெஸோனர் வெளிப்படையாக இப்படி எச்சரிக்கைவிடுத்ததும், அமெரிக்க பங்கு மார்க்கெட் மோசமாகச் சரிந்தது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், கொரோனா தடுப்புப்படைக்குத் தலைவராக இருந்த அலெக்ஸ் அஸாரை நீக்கினார். ‘‘இப்போது அமெரிக்காவில் 15 பேருக்கு கொரோனா உள்ளது. படிப்படியாக இது குறைந்து பூஜ்ஜியம் ஆகிவிடும்’’ என்று அப்போது ட்ரம்ப் சொன்னதை இன்றும் நினைத்து பலரும் வேதனையுடன் சிரிக்கிறார்கள்.

கைமீறிய நிலைமை!

ஒருகட்டத்தில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ட்ரம்பின் மருமகன், துறைச் செயலாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் எனப் பலரும் ட்ரம்பிடம் பேசினார்கள். அப்போதுகூட, ‘‘எல்லோரையும் வைரஸ் தொற்றினால், நிறையபேருக்கு தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அது நல்லதுதானே?’’ என்று கேட்டார் ட்ரம்ப். ‘‘உருவாகும்தான். ஆனால், ஆயிரக்கணக் கான மக்கள் இறந்துபோய்விடுவார்கள்’’ என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பதில் சொன்னார் அந்தோணி ஃபாஸி.

கடைசியில் டெபோரா பிர்க்ஸ் என்கிற பெண் மருத்துவர் வந்து, ட்ரம்புக்குப் புரியும் மொழியில் பேசினார். ‘‘கொரோனா பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதித்தால், பொருளாதாரம் ஓரளவு சரியும். எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், கொரோனா அதிகமாகப் பரவி பொருளா தாரம் மோசமாகச் சரியும்’’ என்றார் அவர். மார்ச் 13-ம் தேதி தேசிய அவசரநிலையை ட்ரம்ப் பிரகடனம் செய்தபோது, நிலைமை கையை மீறிப் போயிருந்தது. சீனாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக் கானவர்கள் கொரோனா வைரஸைத் தொற்றிவந்து நாடு முழுக்கப் பரப்ப ஆரம்பித்திருந்தார்கள். முகக்கவசம், தெர்மாமீட்டர் போன்றவைகூட போதுமான அளவுக்கு ஸ்டாக் இல்லை.

அலெக்ஸ் அஸார், அந்தோணி ஃபாஸி,  நான்சி மெஸோனர், டெபோரா பிர்க்ஸ், ராபர்ட் கேட்லக்
அலெக்ஸ் அஸார், அந்தோணி ஃபாஸி, நான்சி மெஸோனர், டெபோரா பிர்க்ஸ், ராபர்ட் கேட்லக்

பரிசோதனைக்கும் காசு!

அமெரிக்காவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட அதே நாளில், தென் கொரியாவிலும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், தென் கொரியா தப்பிவிட்டது. அமெரிக்கா சிக்கிக்கொண்டது. ஒருபக்கம் அதிபரின் அலட்சியம் என்றால், மறுபக்கம் அமெரிக்காவின் மருத்துவ சிகிச்சைக் கட்டணம். கொரோனா பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் அமெரிக்காவில் கட்டணம் மிக அதிகம். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அமெரிக்க இளம்பெண் ஒருவர், தன் மருத்துவ பில்லை ட்விட்டரில் பகிர்ந்திருந் தார். அது, இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய்!

அமெரிக்க மருத்துவ சேவை என்பது, முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைச் சார்ந் துள்ளது. நிமோனியா சிகிச்சையுடன் ஒப்பிட்டு கொரோனா சிகிச்சை கட்டணங்களை அவர்கள் முடிவுசெய்தனர். குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய். அதிகபட்சம் 53 லட்சம் ரூபாய். மொத்த பணத்தையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தராது. சேமிப்பிலிருந்து நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். இதைத் தாண்டியும் ‘அரசு எங்களுக்கு நிதி தர வேண்டும்’ என, இப்போதே சில மருத்துவமனைகள் கேட்க ஆரம்பித்துள்ளன.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் பேசிவிட்டு, ‘பரிசோதனை இலவசம்’ என அரசு அறிவித்த பிறகும் நிறையபேர் முன்வரவில்லை. பரிசோதனையில் பாசிட்டிவ் எனத் தெரிந்துவிட்டால் சிகிச்சைக்கு என்ன செய்வது? பணிபுரியும் அமெரிக்கர்கள் பலருக்கு மருத்துவ இன்ஷூரன்ஸ் தொகையை நிறுவனங்களே செலுத்துகின்றன. கொரோனா பாதிப்பில் பலருக்கு வேலை போய்விட, அத்துடன் அவர்களின் இன்ஷூரன்ஸும் காலாவதியாகிவிட்டது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. அடித்தட்டு மக்களில் பலருக்கு மருத்துவ இன்ஷூரன்ஸ் இல்லை. இவர்களுக்காக ஒபாமா காலத்தில் அரசே கொண்டுவந்த அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டம் ஓரளவு கைகொடுக்கிறது. (இதையும் ஒழிக்கப்போகிறேன் என ட்ரம்ப் சொல்லிக்கொண்டிருந்தார்!)

நாசகர மன்னன் 45-ம் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா எல்லோரையும் ஒரே மாதிரி பாதிப்ப தில்லை. சிறந்த மருத்துவமனைகளின் வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் வசதிகளுக்காக பணக்காரர்கள் மத்தியில் போட்டியுள்ளது. இதெல்லாம் கிடைக்காமல் பலியானவர்கள் எண்ணிக்கையில் அடித்தட்டு மக்களே அதிகம். குறிப்பாக கறுப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிகாகோவின் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் மட்டுமே கறுப்பின மக்கள் உள்ளனர். ஆனால், கொரோனாவால் மரணமடைந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் கறுப்பினத்தவர்கள்தான். மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள், வீட்டில் இருந்தபடியே நோயுடன் போராடி செத்துப்போகிறார்கள். அரசுக் காப்பீடு இருப்ப வர்கள், அத்துடன் சேர்த்து தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் கொட்டிக் கொடுத்து மரணத்துடன் போராடுகிறார்கள்.

நம் அரசு மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை பெறும் எவரும் இனி அமெரிக்காவை ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு