Published:Updated:

விண்வெளியில் டிராஃபிக் ஜாம்... சீன விண்வெளி நிலையத்துடன் மோத வந்ததா எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள்?

Elon Musk | எலான் மஸ்க்
News
Elon Musk | எலான் மஸ்க்

ஏற்கெனவே விண்வெளியில் டிராஃபிக் ஜாம் அதிகமாகிவிட்டதாக புகார் செய்கின்றன உலக நாடுகள். எலான் மஸ்க் அனுப்பும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன.

விண்வெளியில் சீனா நிறுவிவரும் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் மீது எலான் மஸ்க் நடத்திவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இரண்டு செயற்கைக்கோள்கள் மோத வந்ததாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறது சீன அரசு. இந்த மோதலைத் தவிர்ப்பதற்காக தங்கள் விண்வெளி நிலையத்தை அவசரமாகப் பாதை மாற்றியதாகவும் சீனா கூறியிருக்கிறது.

விண்வெளி என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. இங்கு ஏற்படும் சர்ச்சைகள் குறித்து ஐ.நா விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தில் (United Nations Office for Outer Space Affairs) நாடுகள் புகார் செய்யலாம். இங்குதான் ஆதாரங்களுடன் சீனா புகார் செய்திருக்கிறது.

Elon Musk | எலான் மஸ்க்
Elon Musk | எலான் மஸ்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. செயற்கைக்கோள் வழியாக அதிவேக இன்டர்நெட் இணைப்பைத் தருவதற்கான திட்டம் இது. இந்தத் திட்டத்தில் இதுவரை 1,892 சிறு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இன்னும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அந்த நிறுவனம் விண்ணில் செலுத்த உள்ளது. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது, எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு இந்த சேவை கிடைக்கும். இப்போது 21 நாடுகள் இந்தச் சேவையைப் பெறுகின்றன. செல்போன் முதல் டி.வி ஒளிபரப்பு வரை எல்லாவற்றுக்கும் இது பெரிதும் கைகொடுக்கும்.

ஏற்கெனவே விண்வெளியில் டிராஃபிக் ஜாம் அதிகமாகிவிட்டதாக புகார் செய்கின்றன உலக நாடுகள். எலான் மஸ்க் அனுப்பும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில்தான் சீனாவுக்கு இப்படி இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பல்வேறு நாடுகளின் விண்வெளி அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. பல நாடுகளின் விண்வெளி வீரர்கள் இங்கு சென்று தங்கி ஆராய்ச்சி செய்துவருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரஷ்யாவைக்கூட கூட்டு சேர்த்துக்கொண்ட அமெரிக்கா, சீனாவை மட்டும் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது.

இதனால் வெகுண்டெழுந்த சீனா, தனக்கென்று தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. பூமியிலிருந்து 390 கி.மீ உயரத்தில் விண்ணில் சுற்றும்விதமாக இது உருவாகிறது. இதற்காக ராக்கெட்டில் பல்வேறு பொருள்களை விண்ணுக்கு அனுப்பியபடி இருக்கிறது சீனா. பல நாடுகள் இதற்காக சீனாவுக்கு உதவி செய்கின்றன.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்
wikipedia

மூன்று பேர் வசதியாக இதில் தங்க முடியும். சர்வதேச விண்வெளி நிலையத்தில்கூட இல்லாத பல வசதிகள் இதில் இருக்கின்றன. வைஃபை வசதி, 120 வகை உணவுகள், மைக்ரோவேவ் அவனுடன் கூடிய கிச்சன், ஒவ்வொருவருக்கும் தனித்தனி படுக்கையறை, ஷவருடன் குளியலறை, ஜிம் கருவிகள் என சகல வசதிகளுடன் ஸ்டார் ஹோட்டல் போல இது உருவாகிறது. சீன விண்வெளி வீரர்கள் அவ்வப்போது சென்று இதைக் கட்டி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் இதன்மீது எலான் மஸ்க் நிறுவன செயற்கைக்கோள்கள் மோத வந்திருக்கின்றன. "2021 ஜூலை 1 அன்று ஸ்டார்லிங்க்-1095 என்ற செயற்கைக்கோள் எங்கள் விண்வெளி நிலையத்துக்கு மிக அருகில் வந்தது. அன்று மாலை இந்த ஆபத்தை உணர்ந்ததும், எங்கள் விண்வெளி நிலையத்தை திசைமாற்றி மோதலைத் தவிர்த்தோம்.

அதன்பின் அக்டோபர் 21-ம் தேதி மீண்டும் இதேபோன்ற ஒரு சூழல். ஸ்டார்லிங்க்-2305 என்ற செயற்கைக்கோள் மோதும் திசையில் நெருங்கி வந்தது. அந்த நேரத்தில் எங்கள் விண்வெளி நிலையத்தில் வீரர்கள் இருந்தார்கள். அவர்களைக் காப்பாற்றவும், விண்வெளி நிலையம் சேதம் அடையாமல் தவிர்க்கவும் திசை மாற்ற வேண்டியிருந்தது. நாங்கள் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், பெரும் மோதல் நிகழ்ந்திருக்கும்" என்று சீனா புகார் செய்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்வெளியில் ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஒரு குறிப்பிட்ட உயரத்தில், முறையான சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இதைச் சரியாகக் கணக்கிட்டு செயற்கைக்கோளை செலுத்தி, தேவையற்ற மோதலையும் விபத்தையும் நாடுகள் தவிர்க்கின்றன. ஆனால், 'எலான் மஸ்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் சரியான பாதையில் சுற்றிவருவதில்லை. அவை அடிக்கடி திசை மாறுகின்றன' என்பது சீனாவின் குற்றச்சாட்டு.

விண்ணில் செலுத்தப்படும் ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக் கோள்
விண்ணில் செலுத்தப்படும் ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக் கோள்
Craig Bailey

சீனாவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர்கள் கோபத்துடன் எலான் மஸ்க்கை விமர்சனம் செய்துவருகின்றனர். 'எலான் மஸ்க் அனுப்பியவை செயற்கைக்கோள்களே இல்லை. அவை வெறும் விண்வெளிக் குப்பைகள்' என்று பலர் கிண்டல் செய்ய, 'இவை விண்வெளி யுத்தத்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் சதியால் ஏவப்பட்ட போர் ஆயுதங்கள்' என்று இன்னொரு கோஷ்டி குற்றம் சாட்டுகிறது. 'எலான் மஸ்க்கின் விளையாட்டுத்தனத்தால் பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன. விபரீதமான ஒரு மோதலில் ஒரு நாட்டின் செயற்கைக்கோள் செயலிழந்தால், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்படும். தனது பிசினஸ் லாபத்துக்காக மனித இனத்துக்கே பெரும் ஆபத்தை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்' என்று சீனர்கள் பலர் கொதிக்கிறார்கள்.

சீனாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், 'ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனைத்துமே நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை. தன் பாதையில் வேறொரு செயற்கைக்கோளோ அல்லது வேறு ஏதேனும் விண்வெளிப் பொருள்களோ இருப்பதை அறிந்தால், அவை தானாகவே பாதையிலிருந்து விலகி விபத்தைத் தவிர்த்துவிடும்' என்று ஒரு விளக்கத்தை இதுவரை பலமுறை அவர்கள் தந்திருக்கிறார்கள்.